பொறுப்பற்ற பிள்ளை... விட்டுக் கொடுக்காத அப்பா! | ப்ரியமுடன் விஜய் - 3

பொறுப்பற்ற பிள்ளை... விட்டுக் கொடுக்காத அப்பா! | ப்ரியமுடன் விஜய் - 3
Updated on
3 min read

‘காதல்.. காதல்.. என தனது கடமைகளை அலட்சியப்படுத்தி விட்டு அலையும் ஓர் இளைஞன், இறுதியில் அந்தக் காதலே வேண்டாம்’ என அதைப் புறந்தள்ளிவிட்டுப் போகும் கதையுடன் 1997-இல் வெளியானது ‘லவ் டுடே’. அந்த வெள்ளி விழா படத்தின் தலைப்பை அப்படியே சூட்டிக்கொண்டு 25 ஆண்டுகளுக்குப் பின் 2022இல் வெளி வந்த ‘லவ் டுடே’ படமும் பிளாக் பஸ்டர் வெற்றியைப் பெற்றது. “காலத்தால் அழியாத தலைப்பை உருவாக்கிய பாலசேகரன் சாருக்கு நன்றி சொல்ல மறந்து போய்விட்டேன். எனது செயலைப் பெரிதுபடுத்தாமல் பெருந்தன்மையுடன் நடந்துகொண்டார்” என்று புதிய‘லவ் டுடே’ படத்தின் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் படம் வெளியாகி ஒரு மாதம் கடந்த நிலையில் பாராட்டியிருந்தார்.

திரையுலகில் வளர்ந்து கொண்டிருந்த விஜயை ஒரு நட்சத்திரமாக உயர்த்தியதில் 1997 ‘லவ் டுடே’ படத்துக்கு பெரும் பங்கு உண்டு. அதன் இயக்குநர் பாலசேகரன் ‘லவ் டுடே’ நாள்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்:

“ ‘பூவே உனக்காக’ பட ரிலீஸ் நேரத்தில் கதை சொல்லச் சென்றிருந்தேன். காலை 11 மணிக்கு வீட்டில் கதை கேட்பது விஜயின் வழக்கம். சில ஹீரோக்கள் கதையின் ‘அவுட்லை’னை மட்டும் அரை மணி நேரம் கேட்பார்கள். விஜய் 3 மணி நேரம் முழுக் கதையையும் கேட்கக்கூடியவர். நான் உள்ளே நுழைந்தபோது அவர் தயாராக இருந்தார். “டீ, காஃபி எது உங்கள் ஃபேவரைட் சார்?” என்றார். நான் ‘டீ’ என்றேன். டீ வரும் வரை எதையோ யோசித்துக்கொண்டு அமைதியாக இருந்தவர், நான் டீ குடித்து முடித்ததும் ‘நீங்க ஓகேன்னா நானும் ஓகே’ என்றார். கதை சொல்லத் தொடங்கினேன்.

15 நிமிடம் பரபரவென்று அமைதியாக ஓடியது. திடீரென நான் கதை சொல்வதை நிறுத்திவிட்டேன். அதற்குக் காரணம் விஜய். கதையைக் கேட்பவர், தான் கதை கேட்கிறோம் என்பதை நமக்கு உணர்த்தும் விதமாக முகத்தில் ‘ரியாக்‌ஷ’னோ சின்ன தலையசைப்போ அல்லது எப்போதேனும் ஒரு ‘உம்’ கொட்டலோ மிக அவசியமானது. ஆனால், விஜய் அச்சடித்த ஒரு பொம்மை யைப் போல அப்படியே உட்கார்ந்திருந்தார். நான்: ‘என்ன சார் கதை பிடிக்கலையா?’ என்றேன். விஜய் சிரித்துவிட்டார். “சார் கதை பிடிச்சிட்டா என்னோட வெர்சன் என் மனசுக்குள்ள ஓட ஆரம்பிச்சிடும். உங்க வெர்சனை நீங்க நிறுத்தாம சொல்லுங்க..” என்றார். கதையைத் தொடர்ந்து சொல்லும் முன், ‘கிளைமாக்ஸ்’ பற்றி இவர் குறிப்பிட்டுச் சொன்னால், உண்மையிலேயே நல்ல கதைகளுக்கான தேடல் உள்ள ஒரு ஆர்ட்டிஸ்ட்’ என்று அந்த நொடியில் மனதில் நினைத்துக்கொண்டேன். ஏனென்றால், ‘லவ்

டுடே’ கதையில் நான் முதலில் ’கன்சீவ்’ செய்தது கிளைமாக்ஸைதான். கிளைமாக்ஸி லிருந்துதான் பின்னோக்கிச் சென்று கதாபாத்திரங்களையும் சம்பவங்களையும் உருவாக்கினேன்.

படப்பிடிப்புத் தளத்தில் விஜய், பாலேசகரன்
படப்பிடிப்புத் தளத்தில் விஜய், பாலேசகரன்

முழுக் கதையையும் வசனங்களோடு கேட்டு முடித்துவிட்டுச் சொன்னார்: “கிளைமாக்ஸ் இவ்வளவு அதிர்ச்சியை கொடுக்கும்னு நான் நினைக்கல; இதை இன்னைக்கு இருக்கிற பசங்களுக்குக் கொண்டுபோய் சேர்க்கணும் சார். என்னோட அப்பா கேரக்டர், அப்புறம் அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் கேரக்டர் இரண்டுமே பேசப்படும் சார்” என்று சொன்னார். ஜிலீர் என்று உணர்ந்தேன். அந்தக் கிளைமாக்ஸின் முக்கியத்துவத்தை, தனது வயதுக்கு மீறிய முதிர்ச்சியுடன் அவர் புரிந்துகொண்டு பாராட்டினார்.

ரகுவரனுக்கு அப்படியொரு அப்பா கேரக்டர் அதற்கு முன் அமையவில்லை. நமக்கு இப்படியொரு நண்பனைப் போன்ற அப்பா இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று ஏங்க வைக்கிற ஒரு கேரக்டர். ரகுவரனின் மரணமும் அதைத் தொடர்ந்து வரும் கிளைமாக்ஸும் அன்றைக்கு இளம் ரசிகர்களை உலுக்கியது. ‘தேடிவரும் காதலை ஒரு இளைஞன் தூக்கிப் போடுவானா?’ என்று கதை கேட்ட பலரும் என்னிடம் திரும்பக் கேட்டிருக்கிறார்கள். தன்னைக் குறித்து கனவு கண்ட தந்தையின் மனதை கூர்ந்து நோக்க முடியாதவன், அவரை இழக்கும்போது துரத்திய காதல் நெருங்கி வந்து மடியில் விழும்போது அதை உதறியெழுந்து வாழ்க்கையில் அதைவிடச் சிறந்த பக்கங்கள் இருக்கின்றன என்று முடிவெடுப்பான் என்று நினைத்தேன். இக்கதையில் கமர்ஷியல் நாயகனுக்குரிய பாடல் காட்சிகள், நண்பர்கள் குழு என இருந்தாலும் கதையின் உள்ளடுக்கை விஜய் புரிந்துகொண்டு தன்னை கணேஷ் என்கிற இளைஞனாக முன்வைத்தார்.

ரகுவரன் தனக்கு அப்பாவாக நடிக்கிறார் என்றதும் விஜயிடம் அப்படியொரு உற்சாகம். விஜயின் திறமை, அவரிடமிருந்த ஈர்ப்பு ஆகியவற்றின் மீது ரகுவரனுக்கும் அப்படியொரு பிடிப்பு. விஜய் நடிக்கும் காட்சிகளையெல்லாம் கூர்ந்து பார்த்துக்கொண்டிருப்பார் ரகுவரன் சார். ரகுவரனும் விஜயும் இணைந்து நடித்த முதல் காட்சியிலிருந்தே அவர்கள் இருவருக்குமான ‘கெமிஸ்ட்ரி’ உருவாகிவிட்டது. அதற்கு எடுத்துக்காட்டாக நான் பிரமித்து நின்ற ஒரு காட்சியைக் குறிப்பிட விரும்புகிறேன்:

தன்னிலை மறந்து காதலை கணேஷ் எப்படித் துரத்திக் கொண்டிருக்கிறான் என்பதை ‘இம்பேக்ட்’ ஆக விவரிக்கும் ஒன்றாக கணேஷின் ‘லீஃப் இயர்’ பிறந்த நாள் காட்சியை அமைத்திருந்தேன். மகனைக் காவல் நிலையத்திலிருந்து மீட்டு அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வருவார் அப்பா ரகுவரன். நண்பர்களுடன் கோலாகலமாகக் கொண்டாடியிருக்க வேண்டிய பிறந்த நாள். யாருமின்றி, மகனும் அப்பாவும் மிகுந்த வலியுடன் பின்னிரவில் வீடுதிரும்புவார்கள். அந்தக் காட்சியில் எனக்கு என்ன வேண்டும் என்பதை இருவருக்கும் கூறிவிட்டேன். உடனே ரகுவரனும் விஜயும் இதில் எப்படி நடிக்கலாம் என்று டிஸ்கஸ் செய்து கொண்டார்கள்.

வாழ்க்கை பற்றிய புரிதல் ஒருநாள் அவனுக்கு வசமாகும் என நம்பும், மகனை விட்டுக்கொடுக்காத, வெறுக்காத அப்பாவான ரகுவரன், இருண்டு கிடக்கும் வீட்டைத் திறந்து லைட்டைப் போடுவார். அங்கே கேக் வெட்டப்படாமல் அப்படியே இருக்கும். அப்போது “ஹேப்பி பர்த் டே மை பிக்கஸ்ட் அண்ட் கிரேட்டஸ்ட் சன் இன் த வேல்ட்” என்று உணர்ச்சி பொங்கக் கூறுவார். எப்படிப்பட்ட தவறாக இருந்தாலும் அதைச் சகித்து உச்சிமுகர்பவன்தானே தந்தை. அதை அந்தக் கணத்தில் உணரும் கணேஷ், ‘அப்பா..’ எனத் தீனமாகக் கத்தியபடி அவரைக் கட்டிப்பிடித்துக்கொண்டு, ‘அ யம் ஓகேப்பா..’ என அழுதுகொண்டே அவரது பாசத்தின் உச்சத்தை உணர்வான். இந்தக் காட்சியை இவர்கள் இருவரும் சேர்ந்து நடிப்பில் இவ்வளவு சிறப்பாக ‘எலிவேட்’ செய்வார்கள் என்று நான் நினைக்கவில்லை. அவர்களின் நடிப்பில் ஆழ்ந்துபோய், நான் கட் சொல்ல மறந்து நின்றுகொண்டிருந்தேன்.

நான் வியந்த நடிகர்களில் ரகுவரன் சார் முக்கியமான ஆளுமை. வசனங்களை நாம் எழுதியிருந்தாலும் அதைக் காட்சியின் சூழலுக்குள் வைத்து உச்சரிக்கும்போது ஒன்றிரண்டு பொருத்தமான வார்த்தைகளைச் சேர்த்துக்கொள்வார். உச்சரிக்கும் விதமும் அந்தக் கதாபாத்திரத்தை விட்டு துளிகூட விலகாது. விஜயோ, தானொரு இயக்குநரின் மகன் என்கிற பொறுப்பின் காரணமாக வசனத்தில் ஒரு வார்த்தையைக்கூட மாற்ற மாட்டார். அதேபோல் காட்சியில் நடிக்கும்போது பேசிய வசனத்தை அவரை நடு இரவில் எழுப்பிக் கேட்டாலும் அப்படியே சொல்லுவார். படத்தின் டப்பிங் சமயத்தில் ஓர் எதிர்பாராத சம்பவம். அது படத்தின் மிக முக்கியமான கட்டத்தில் வரும் சம்பவத்தைவிடப் பெரும் திருப்பமாக இருந்தது. அதை விஜய் எப்படிச் சமாளித்தார் என்பதை அடுத்த வாரம் பகிர்கிறேன்.

(ப்ரியம் பெருகும்)

படங்கள் உதவி: ஞானம்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in