

கிறிஸ்டோபர் நோலனின் ‘பிரெஸ்டிஜ்’ திரைப் படத்தில் ஒரு வசனம் உண்டு. “எடுத்துக் கொண்ட சாதாரணத்தை, தன் வித்தையால் அசாதாரணமாக மாற்றுவதே ஒரு தேர்ந்த மந்திர வாதியின் வித்தை”. அதுபோலவே ஒரு சாதாரணக் குற்றவியல் கதையை, காட்சிப்பிழைகளால் திசை திருப்பி சிறிதும் ஊகிக்க முடியாமல் கொண்டு போய் முடிப்பதும் திரைக்கதையால் சாதிக்க முடிந்த ஒன்றுதான்.
‘த்ரிஷ்யம்’, ‘த்ரிஷ்யம் 2’, ‘கிஷ்கிந்தா காண்டம்’ ஆகிய படங்களின் வரிசையில் ஊகிக்க முடியாத திருப்பங்களால் ஆன திரைக்கதைக் கொண்டு நஸ்ரியா நசீம், பசில் ஜோசப் நடிப்பில் எம்.சி. ஜிதினின் இயக்கத்தில் வெளிவந்துள்ள மலையாளத் திரைப்படம் தான் ‘சூக்சுமதர்ஷினி’குறைந்த ஆள்நடமாட்டமுள்ள வசிப்பிடப் பகுதியில், நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த ப்ரியா என்கிற பிரியதர்ஷினி வசிக்கிறார்.
அவர் வீட்டருகே மேலும் சில தோழிகளும் அவருக்கு உண்டு. மேனுவேலும் அவருடைய வயதான தாய் கிரேஸும் ஓர் இடைவெளிக்குப் பிறகு தங்களின் சொந்த பங்களா வீட்டுக்குத் திரும்பிவந்து தங்குகின்றனர். இவர்களின் வீடு ப்ரியாவின் பக்கத்து வீடு! எதையும் ஆராயும் குணமுள்ள பிரியதர்ஷனி மேனுவேல் வீட்டில் நடக்கும் சில அசாதாரண நிகழ்வுகளை ஆராய்கிறார். அந்த நிகழ்வுகளின் முடிச்சுகளை அவரால் அவிழ்க்க முடிகிறதா அல்லது அவரே அதில் சிக்கிக் கொள்கிறாரா என்பதே கதை.
பக்கத்து பங்களாவில் நிகழும் சம்பவங்களில் ப்ரியாவின் துப்பறிதலில் நாமும் கொஞ்சம் கொஞ்சமாகப் பங்கேற்கத் தொடங்கிவிடுவது திரைக் கதையின் முதல் வெற்றி. ஒருவரது பார்வையில் மட்டும் கதையை நகர்த்தாமல் பல்வேறு கோணங்களில் சொல்வது, தெரிந்த முடிச்சுகளைத் தக்கச் சமயத்தில் உறுத்தாமல் அவிழ்ப்பது போன்ற உத்திகள் சரிவர அமைந்துள்ளன.
தோழிகளின் உதவியோடு ப்ரியா அடுத்த வீட்டுக்குள் நுழைந்து ஆராயும் அந்த 10 நிமிடக் காட்சி, இயல்பான நகைச்சுவையுடனும் பதற்றத்துடனும் இணைந்து நகர்வது வெகு சுவாரசியம். படத்தின் எல்லாப் புள்ளிகளும் கோவையாக இணையும் இறுதிப்புள்ளியில் வெளிப்படும் அதிர்ச்சியும், அதில் சொல்லப்படும் சமூக அரசியல் கதையோடு இணைந் திருப்பதும் சிறப்பாகக் கையாளப்பட்டி ருக்கின்றன. கதை நிகழும் நிலப்பரப் பில் நான்கு வீடுகளும்கூட கதாபாத்தி ரங்கள்போல் இயைந்து முக்கியத்துவம் பெற்றிருப்பது ஆச்சரியம்!
முதன்மைக் கதைமாந்தர்களான நஸ்ரியா நஸீம், பசில் ஜோசப் ஆகிய இருவரும் ஆர்ப்பாட்டமில்லாத அழகான நட்சத்திரத் தேர்வுகள். தோழி களாக வரும் அகிலா பார்கவான், பூஜா மோகன்ராஜ் ஆகியோர் இயல்பான நகைச்சுவைக்குப் பங்களித்திருக்கி றார்கள். அவ்வப்போது கழுகுப் பார்வையில் கதையை நகர்த்தும் ஷரண் வேலாயுதத்தின் ஒளிப்பதிவும் மர்மம் என்கிற உணர்வை நமக்குள் கிளறி பயத்தைத் தூண்டுகிறது.
அதுல் ராமச்சந்திரன் - லிபின் இணைந்து எழுதியிருக்கும் திரைக்கதையே இப்படத்தின் முதுகெலும்பு. அதை எம்.சி. ஜிதின் மிகக் கூர்மையாக இயக்கியிருக்கிறார். கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி ஆல்பர்ட் ஹிட்ச்காக்கின் 125ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அதேபோல் செவ்வியல் படைப்பாக மாறிவிட்ட அவருடைய ‘ரியர் விண்டோ’ திரைப்படம் வெளிவந்து 70 ஆண்டுகள் நிறைகிறது. அப்படத்துக்கும் ஹிட்ச் காக்கிற்கும் மலையாள சினிமாவின் சிறந்த அஞ்சலி இந்தப் படம்.