

விஜயின் முழுமையான நடிப்புத் திறனை வெளிக்கொண்டு வந்ததுடன் அவருக்கு முதல் பிளாக் பஸ்டர் வெற்றியாக அமைந்தது விக்ரமன் இயக்கத்தில், ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில், 29 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த ‘பூவே உனக்காக’. விஜய்க்கு கண்ணியமான ஒரு பிம்பத்தை முதன்முதலில் கட்டமைத்த அந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி சோகமாக முடிந்தாலும், அந்த முடிவில் இருந்த நேர்மைக்காகவே படம் பிய்த்துக்கொண்டு ஓடியது. அந்தப் படத்தின் கதையை விஜய் கேட்டபோது, அவருக்கு அந்தச் சோக முடிவைச் சொல்லாமல் ‘சுப’மான முடிவையே சொல்லி அவரைப் படத்தில் ‘கமிட்’ செய்ததாகச் சென்ற வாரம் பகிர்ந்திருந்தார் சூப்பர் ஹிட் இயக்குநர் விக்ரமன். அவரது ‘பூவே உனக்காக’ பட நினைவுகளின் தொடர்ச்சி:
“படப்பிடிப்பு தொடங்கி ஒரு 20 நாள்கள் கடந்திருக்கும். விஜய் இப்போ எனக்கு இன்னும் நெருக்கமாக வந்திட்டார். அப்போ அவரிடம் அந்தச் சோக கிளைமாக்ஸைச் சொன்னேன். ‘சார்.. அட்டகாசமா இருக்கே.. இதை நீங்க என்கிட்ட அப்பவே சொல்லி இருக்கலாமே?’ என்று விழி விரியச் சொன்னார். ‘இதை சௌத்ரி சாரிடம் சொன்னேன்; இது அவருக்குப் பிடிக்கல. நாம அவருக்குத் தெரியாம இந்த கிளைமாக்ஸை ஷூட் பண்ணிடுவோம்’ என்றேன். விஜய் ‘டபுள் ஓகே’ சொன்னார்.
‘சுப’மான முடிவை முன்னரே ஷூட் செய்துவிட்டேன். ஆனால், ‘சோக கிளைமாக்’ஸைக் கடைசி நாள் படப்பிடிப்பில் ‘பேச் ஓர்க்’காக, அதைச் சென்னையில் அருணாசலம் ஸ்டுடியோவில் படம்பிடித்தேன். அந்த ஸ்டுடியோ இப்போது இல்லை. அங்கேதான் ‘மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது’ பாடலை எடுத்தேன். அந்தப் பாடலை முடித்து விட்டு, வெறும் ஒன்றரை மணி நேரத்தில் ‘சோக கிளைமாக்’ஸை எடுத்துமுடிச்சேன். அந்தக் காட்சியில் டயலாக் அதிகம். அஞ்சு அர்விந்த் - விஜய் இரு வருக்கும் காட்சி. மிகவும் ‘சென்சிட்டிவ்’ ஆன வசனங்கள்.
சொல்வதற்கான வாசல் அடைக்கப்பட்டுவிட்ட ஒருதலைக் காதலின் வலியை, ஒரு நல்ல உணர்வாக ஏற்றுக் கொண்டு கடந்துபோகும் ஒரு நேர்மறை இளைஞனின் குணத்தை, விஜய் தனது நடிப்பிலும் வசன உச்சரிப்பிலும் கொண்டுவந்த விதத்தைப் பார்த்து எனது உடலும் மனமும் சிலிர்த்துப் போனது. அஞ்சு அர்விந்தும் அற்புதமாக, அளவாக நடித்தார். கிளைமாக்ஸை எடுத்து முடித்ததும் நீளமான வசனங்களை நினைவில் வைத்துக்கொள்ளும் விஜயோட ஆற்றலை நினைச்சு நிறையவே ஆச்சரியப் பட்டேன்!
சோக கிளைமாக்ஸை எடிட் செய்து பிரிண்ட் போட்டு ரெடியாக வைத்துக் கொண்டேன். பிப்ரவரி 15ஆம் தேதி படம் ரிலீஸ். சௌத்ரி சாருக்கு பிப்ரவரி 13ஆம் தேதி காலை 10 மணிக்கு, ‘சுபம்’ கிளைமாக்ஸை இணைத்த பிரதியை பிரிவியூவாகத் திரை யிட்டேன். இப்போது சென்னை தி.நகரில் பா.ஜ.க. அலுவலகமாக இருக்கும் இடத்தில் தான் அன்று முக்தா பிரிவியூ தியேட்டர் இருந்தது. அங்கே தான் ஷோ. படம் பார்த்த சௌத்ரி சார்,
‘யோவ் சொன்ன மாதிரியே படம் கொடுத்துட்டே’ என்று கைகுலுக்கி வாழ்த்திவிட்டுக் கிளம்பினார். அப்போது அவரிடம் ‘சார்.. இப்போ நீங்க பார்த்த கிளைமாக்ஸைவிட இந்தக் கதைக்கு ரொம்பப் பொருந்திப் போற இன்னொரு கிளைமாக்ஸும் நான் ஷூட் பண்ணி, எல்லா வேலையும் முடிச்சு வெச்சுட்டேன். எனக்காக அதையும் ஒரு தடவைப் பார்த்திருங்க. தப்பா எடுத்துக்காதீங்க’ என்றேன். அவர் கோபமாகிவிட்டார். ‘நீ எனக்குத் தெரியாமல் எடுத்ததே தவறு; வேணுமானா அதை நீ உன்னோட வீட்ல கொண்டுபோய் வச்சுக்க.’ என்று சொல்லிவிட்டுக் கோபமாகப் போய்விட்டார்.
எனக்கோ தலை சுற்றியது. அவர் ஏற்றுக்கொள்வார் என்கிற நம்பிக்கையைக் கைவிடாமல் பின்னாலேயே அலுவலகம் வரைத் துரத்திக் கொண்டு போய் அவரிடம் கெஞ்சினேன். மனம் இரங்கி வந்த அவர், ‘வேணுமானா ஒண்ணு செய்வோம். ஃபேமிலி, ஃபிரெண்ட்ஸ், டிஸ்ட்ரிபியூட்டர்ஸுக்கு நீ சொல்ற கிளைமாக்ஸை வச்சு இன்னைக்கு நைட்டே ஒரு ஷோ போடு.. அப்போ என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம்’ என்றார். எனக்கு நிம்மதியாக இருந்தது. அவர் சொன்னபடியே ஷோ போட் டோம். எனது குடும்பத்துக்கே உட்கார இடமில்லை.
அவ்வளவு பேர் வந்து குவிந்துவிட்டார்கள். அப்போது எனது மகன் விஜய் கனிஷ்கா 5 மாதக் குழந்தை. எனக்கு உட்கார இடமில்லாததால் அவனை நான் வராண்டாவில் வைத்துக்கொண்டு ரிசல்டுக்காகக் காத்திருந்தேன். எல்லாரும் படம் முடிந்து அழுதுகொண்டே வந்தார்கள். மனைவி எதுவும் சொல்லாமல் மகனை வாங்கிக்கொண்டு வீட்டுக்குக் கிளம்பிவிட்டார். விநியோகஸ்தர்கள், மீடியேட்டர்கள் எல்லாம் ‘சூப்பர் படம் சார்’ என்று கைகொடுத்துக் கட்டிப் பிடித்துக்கொண்டார்கள். யாரும் என்னை விட்டுக் கிளம்புகிற மாதிரி இல்லை. பாராட்டிகொண்டே இருந்தார்கள். எல்லாரையும் அனுப்பிவிட்டு வீட்டுக்கு வந்தபோது அதிகாலை 3 மணி. நான் உள்ளே நுழைந்தபோது மனைவி பொலபொலவெனக் கண்ணீ ரைப் பெருக்கியபடி கட்டிக்கொண்டார். ‘என்ன மாதிரியான படங்க இது! ரொம்ப பெருமையா இருக்கு’ என்றார். அவரை அவ்வளவு பாதிச்சுடுச்சு படம்.
மறுநாள் ஷோவில் கிடைத்த ரிசல்ட் பற்றிய தகவல்கள் சௌத்ரி சாருக்குப் போய்ச் சேர்ந்துவிட்டன. நான் போய் அவர் முன்பாக நின்றேன். ‘யோவ்.. சாதிச்சுட்ட..! சோக கிளைமாக்ஸையே வெச்சுக்கோ!’ என்று அனுமதி கொடுத் தார். படம் வெளியாகி தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் மிகப் பெரிய ஹிட்! கன்னடத்திலும் தெலுங்கிலும் ரீமேக் ஆகி அவையும் சூப்பர் ஹிட்! விஜய் அதன் பிறகு ‘லவ் டுடே’, ‘காதலுக்கு மரியாதை’,
‘ப்ரியமானவளே’ எனத் தரமான காதல் கதைகளைத் தேர்வு செய்யத் தொடங்கினார்.
மீண்டும் எனது இயக்கத்தில் ‘உன்னை நினைத்து’ படத்தில் நடிக்க விரும்பினார். இரண்டு பாடல் காட்சிகளிலும் நடித்தார். ஆனால், பிறகு ஏனோ அந்தக் கதை அவருக்குப் பிடிக்காமல் போய்விட்டது. அதனால் அவரை நான் கட்டாயப்படுத்த வில்லை. பிறகு அதில் சூர்யா நடித்து சூப்பர் ஹிட்டானது.
விஜய் அன்றைக்கு எப்படி இருந் தாரோ இப்போதும் அப்படித்தான். அதே மாறா அன்புதான். அவருடைய அப்பா எஸ்.ஏ.சியும் அம்மா ஷோபா மேடமும் அப்படித்தான். எனது மகன் விஜய் கனிஷ்கா, ‘ஹிட் லிஸ்ட்’ படத்தில் அறிமுகமானபோது அந்தப் படத்தின் பூஜையில் தொடங்கி ஒவ்வொரு நிகழ்வுக்கும் வந்து வாழ்த்தி னார்கள். இப்போது அவனது இரண்டாவது படத்தின்போது, விஜய் ‘கோட்’ படப்பிடிப்பில் இருந்தபோது அவரைச் சந்தித்தோம். விஜய் கனிஷ்காவைப் பார்த்துவிட்டு “ப்ரோ.. செம்ம ஸ்மார்ட்டா இருக்கீங்க.. பெரிய ஹீரோவா வருவீங்க’ என்று மனம் திறந்து வாழ்த்தினார். என் பக்கம் திரும்பி ‘சார்… எப்படி இருக்கீங்க?’ என்றார். அதில் அதே ‘பூவே உனக்காக’ காலக்கட்டத்து விஜயின் அன்பின் வாசம் துளியும் குறையாமல் இருந்தது.
(ப்ரியம் பெருகும்)
அடுத்த வாரம்: ‘லவ் டுடே’ பாலசேகரன்