

கதாநாயக தீரம் என்பது, தீயவரைச் சட்ட விதிமுறைக்குள் கொண்டு வந்து தண்டிப்பது, மக்களை நல்வழிப்படுத்தும் சீர்திருத்தக் கருத்து களைப் போதிப்பது எனக் கறுப்பு - வெள்ளை காலக்கட்டத்தில் திகழ்ந்தது. புத்தாயிரத்துக்குப் பின்னரான ஹாலிவுட் சினிமாவின் அளவுகடந்த வன்முறைச் சித்திரித்தலின் பரவல், நாயகனை யாராலும் வெல்லவே முடியாத சூப்பர் ஹீரோவாக உருப்பெருக்கியது.
பூதாகரமான கொலைப்பாதகங்களில் கூட அவன் தன் விருப்பத்துக்கேற்ப ஈடுபடுவான் எனச் சித்திரிக்கப்பட்டது. நல்லது - கெட்டது குறித்துப் பிரித்தறிந்து வாழ்வைப் பேணவேண்டிய பார்வையாளர், எந்தவொரு பிரச்சினையையும் வன்முறை கலந்த வெறியாட்டத்தின் வழிச் சாதித்துவிடலாம் என்கிற நாயகத் தீர்ப்பை ஏற்று, மூளை மழுங்கிய ரசிக மனப்பான்மையுடன் அதுபோன்ற படங்களைக் காணத் திரையரங்குகளை நிரப்பிக்கொண்டிருக்கிறார்கள்.
கலையின் அடிப்படை அறம் சார்ந்தது. மானுடக் குலத்தின் நல்லிணக்கத்தைக் கட்டுக்குலையாமல் பேணவும் பாதுகாக்கவும் அது முதன்மையாக உதவவேண்டும். அன்பும் சகிப்புணர்வும் அதன் அடி வேர்கள்.
சுயநலத்தையும் பிழைப்புவாதத்தையும் பாவிக்காமல் இன்னும் வாழும் சில நல்ல மனிதர்களைப் போல், பல திரைப்படைப்பாளிகளும் நம்மிடையே இருக்கவே செய்கிறார்கள். அவர்கள் தங்களது தடத்தை மாற்றிக்கொள்ளாமல் ஏதேனுமொரு பிரதிபலிப்பில் மனித நேயத்தைத் திரையில் வண்ணப்படுத்திக்கொண்டே இருப்பது நல்ல சினிமாவுக்கு நிறைவான ஆறுதல்.
பகையும் பரிவும்: சீனு ராமசாமி இயக்கி சமீபத்தில் வெளிவந்த ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ அவ்விதத்தில் அமைந்த படம். உறவுகள் வலிந்து அகமேற்றிவிடும் துரோகங்களை மன்னித்து, அவர்களை நோக்கி அன்புக்கரம் நீட்டும் கருணை மிகுந்த கதைக்களம். மன்னிக்க முடியாத துரோகங்களைச் செய்து தங்கையுடன் தனிமைப்படுத்திவிடும் தனது தாயும் தந்தையும் வலுவிழந்து திரும்பும்போது அவர்களை ஏற்றுக்கொள்ளும் நாயகன் செல்லதுரை நமது உள்ளக் கண்களை நெகிழச் செய்துவிடுகிறான்.
‘குறி வச்சா இரை விழணும்’ என்று ஆணவத்தோடு உரைத்து, சக மனிதரைக் குருவியைச் சுடுவதுபோல் சுட்டுத்தள்ளும் கண்மூடித்தனமான திரை நாயக அதிகாரத்தின் ரத்தத் தெறிப்புகளுக்குப் பயந்து தொலைக்காட்சிக்குள் வருவோம். அங்கோ, குடும்ப உறவுகளை எப்படி மென்மேலும் காயப்படுத்தி மன விரிசலை உண்டாக்கலாம் என்று போட்டிப்போட்டுக் கொண்டு சரமாரியான பிடறியடிகளை நம் மீது வீசுகிறார்கள்.
இந்த நிலையில்தான், சீனு இராமசாமி புனைந்த அன்பு வயப்பட்ட செல்லதுரை கதாபாத்திரம், கூட்டுக்குடும்ப அமைப்பு சிதைந்துபோய்விட்ட இன்றைய அவசரச் சமூகத்தின் மனசாட்சியை மீளுருவம் செய்யும் தேவையுடன் வடிவெடுத்து நிற்கிறது. இன்றைக்கு ஆணவக் கோளாறுகளால் பிரிந்துகிடக்கும் குடும்ப உறவுகளுக்குள் இந்தப் படம் நிச்சயமாக ஓர் உணர்வுறுத்தலை ஏற்படுத்தவே செய்யும்.
செல்லதுரை எந்த எதிர்பார்ப்பும் இல்லாத நல்ல குணத்தினனாக வருகிறான். கிராம வாழ்வை மாறாத யதார்த்தத்துடன் எளிய காட்சியோட்டத்தில் தரும் இப்படம், இறுதியில் நமது கண்களைக் கசியச் செய்துவிடுகிறது. நாம் பகைகொண்ட நபர்கள் மீது குற்றவுணர்வுடன் கூடிய ஒரு பரிவுணர்வைச் சில கணங்களேனும் நினைவில் ஏற்றிவிடுகிறது. ஒரு கலையின் இருப்பு இவ்விதம்தான் முழுமையடையும்.
மன்னிப்பு எனும் கடமை: குடும்ப உறவின் பிணைப்புணர்வைத் தாண்டி, மனித நேயக் கோணத்துடன் 2021இல் வெளிவந்த மலையாளப் படம் ‘காணேகாணே’ (As You Watch). விபத்தில் உயிரிழந்துவிட்ட ஷெரின் என்கிற பெண்ணின் தந்தையான பால் மத்தாய், தன்னுடைய பேரன் குட்டுவைக் காணும்பொருட்டு வருகை தருகிறார்.
ஷெரினது கணவன் ஆலென் இப்போது தன்னுடைய முன்னாள் காதலியான ஸ்னேகா என்பவளை இரண்டாம் திருமணம் செய்துகொண்டு வசிக்கிறான். அவர்களது ஒன்றுதலைக் காணும் பால் மத்தாய், ஷெரின் மரணம் திட்டமிட்ட சதியாக இருக்குமோ என்று சந்தேகம் கொள்கிறார். உண்மையைத் தெரிந்துகொள்ளக் களமிறங்குகிறார். ஆலென் தன்னுடைய காதலிக்காக ஷெரினை அலட்சியப்படுத்தியிருப்பதை உணர்ந்து கொந்தளிப்பான விசனம் கொள்கிறார்.
ஆனால் தன்னுடைய பேரன் குட்டுவையும் இணைத்து, ஆலென் குடும்பத்தின் நிம்மதியான வாழ்வை எண்ணி உள்நிரடும் குற்றவுணர்வைத் தாண்டி தன் மருமகனை மன்னித்துவிட்டு அகல்கிறார். படத்தின் இயக்குநர் மனு அசோகன் நினைத்திருந்தால் கதையைப் பழிவாங்கும் படலத்தில் முடித்திருக்கலாம்.
அதைவிடுத்து, அனைத்தையும் கடந்த நேயப் புரிந்துணர்வைப் பால் மத்தாய் கதாபாத்திரத்தின்வழி பிம்பப்படுத்துகிறார். வாழ்வு எப்போதும் பிழைகளால் ஆனது. அவற்றைப் பொறுத்தருள்வதும் மனிதப் பண்பின் தலையாய கடமைகளில் ஒன்றுதான் என்பதைப் படம் நிறுவுகிறது.
உலக சினிமாவில், இதுவரை அணுகப்படாத கோணத்தில் மன்னிக்கும் மனப்பக்குவத்தைச் சித்திரித்தது, 2010இல் சூசன் பியர் என்கிற பெண் இயக்குநர் டேனிஷ் மொழியில் இயக்கி வெளிவந்த ‘ஒரு மேன்மையான உலகில்’ (In a Better World) என்கிற படம். இதில் பிரதானக் கதாபாத்திரமாக வரும் ஆண்டன், டென்மார்க்கில் வசிக்கும் ஒரு ஸ்வீடிய மருத்துவர். அவருக்கு எலியாஸ், மோர்டென் என இரண்டு மகன்கள்.
ஒரு நாள், இளையவனான மோர்டெனோடு ஓர் அடாவடிச் சிறுவன் சண்டையிட, அதனைக் காணும் ஆண்டன் சண்டையை விலக்கப் பார்க்கிறார். அங்கு வரும் அச்சிறுவனின் தந்தை சிறிதும் தயங்காமல் ஆண்டனது கன்னத்தில் அறைந்து தானும் ஓர் அடாவடி முன்மாதிரி என்பதைக் காட்டுகிறார்.
தன் மகன்களுக்கு முன் அறைவாங்கிய மனக்காயத்தோடு திரும்ப நேர்கிறது. ‘தன்னை அடித்தவன் ஒரு முட்டாள் மற்றும் முன்கோபி என்பதால் அவனது அடி தனக்கு வலியை ஏற்படுத்தவில்லை’ எனப் பிள்ளைகளைச் சமாதானப் படுத்துகிறார். தங்களுடைய தந்தை கூறிய தத்துவம் அவர்களுக்குப் புதிராக இருக்கிறது.
தன்னை அவர்களின் ஹீரோவாகப் பார்க்க விரும்பும் மகன்களிடம் தனது மனிதமார்ந்த குணத்தை வெளிப்படுத்தும்விதமாக, அடித்தவனை மீண்டும் சந்தித்து, ‘சிறுவர்களது சண்டையை விலக்கிவிட்ட என்னை ஏன் அடித்தாய்?’ என்று வினவுகிறார். அந்த மூர்க்கனோ மீண்டும் பலமுறை அவரை அறைகிறான். சிறுவர்கள் உறைந்துபோக, திரும்பும் வழியில், ‘அவனைத் திரும்ப அடித்து அவனைப் போன்ற முட்டாளாகத் தான் மாற விரும்பவில்லை’ எனவும் ‘அவனது அடி தனக்கு இப்போதும் வலிக்கவே இல்லை’ எனவும் உறுதிசெய்கிறார்.
ஆண்டன் வலிமையான உடல்வாகு படைத்தவர்தான். ஆனால் அவரது பகைக்குப் பகை தீர்வல்ல என்று கருதும் கருணைமிக்க மனம் அவரை முழுமையடைந்த மனிதராக நம்முன் நிறுத்துகிறது. இந்த விட்டுக்கொடுத்தலின் பின்னே உள்ள மன்னித்தலின் மனப்பக்குவத்தைக் கண்டு அந்தச் சிறுவர்களைப் போல நாமும் அவரை திரைப் பரப்பில் அண்ணாந்து பார்க்கிறோம். சிறந்த வெளிநாட்டுப் படத்துக்கான ஆஸ்கர் விருதை 2011இல் பெற்ற இப்படம், மன்னித்தலின் பெருந்தன்மையை திரை சாற்றும் அத்தி பூத்தாற் போன்ற படங்களில் ஒன்று.
- viswamithran@gmail.com