‘விஜய் தலையில் பாறாங்கல்!’ - விக்ரமன் | ப்ரியமுடன் விஜய் 1

‘விஜய் தலையில் பாறாங்கல்!’ - விக்ரமன் | ப்ரியமுடன் விஜய் 1
Updated on
3 min read

திரை வானில் உச்சத்திலிருக்கும் நேரத்தில் அரசியல் ஆடுகளத்துக்கு வந்திருக்கிறார் விஜய். இச்சமயத்தில் அவரது 40 ஆண்டு காலத் திரைப் பயணத்தில் அவருக்கு அடுத்தடுத்த வெற்றிகளையும் அடுத்த கட்டப் பரிமாணங்களையும் கொடுத்த திரைப்படங்களின் இயக்குநர்கள் விஜயுடனான தங்கள் நினைவுகளை இப்பகுதியில் பிரியமுடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.

ன்னுடைய அப்பா எஸ்.ஏ. சந்திரசேகரன் எழுத்து - இயக்கத்தில், விஜய் தொடர்ந்து நடித்தபடி வளர்ந்து வந்த காலம் அது. அதிலிருந்து அவரை வெளியே இழுத்துப் போட்டு அவருக்குக் கண்ணியம் மிகுந்த முதல் திருப்புமுனையை ’பூவே உனக்காக’ படத்தின் மூலம் கொடுத்தார் இயக்குநர் விக்ரமன். மதம் மாறி நடந்த ஒரு காதல் திருமணத்தால் இரண்டு உயிர் நண்பர்களின் குடும்பங்கள் பிரிந்துவிடுகின்றன. அடுத்த தலைமுறையில் அதேபோன்றதொரு திருமணத்தால் பிரிந்த குடும்பங்களை மீண்டும் இணைத்து வைக்கும் ஒரு துடிப்பான இளைஞனின் கதைதான் படம்.

படத்தின் முடிவில் ‘தோல்வி அடைறதுக்கு காதல் ஒன்னும் பரீட்சை இல்லீங்க.. அதுவொரு ஃபீலிங். அது ஒரு தடவை வந்துடுச்சின்னா மறுபடி மறுபடி அதை மாத்திக்கிட்டு இருக்க முடியாது’ என்று காதலை உயர்ந்த இடத்தில் வைத்துவிட்டு, அதுவரை அந்த வீடுகளின் பேரனாக நடித்த நாயகன் ‘வாக் அவே’ செய்வார். காதல் எனும் உணர்வைக் கௌரவம் செய்த இந்தப் படத்தில் மட்டுமல்ல; தன்னுடைய எல்லாப் படங்களிலும் நேர்மறை சிந்தனை கொண்டவர்களாகவும் தன்னம்பிக்கை மிக்கவர்களாகவும் இளைஞர்களைச் சித்தரிப்பதில் தனித்து தடம் பதித்தவர் விக்ரமன். அவர், ‘பூவே உனக்காக’ பட நினைவுகளை இங்கே பகிர்ந்திருக்கிறார்:

“அப்போ இந்தியா முழுக்க ‘ஹம் ஆப்கே ஹெய்ன் கௌன்’ இந்திப் படம் பெரிய ஹிட். சென்னை உட்லேண்ட்ஸ் தியேட்டரில் 100 நாள்களைத் தாண்டி ரெக்கார்ட் பிரேக்கா ஓடிக்கொண்டிருந்தது. அது மாதிரி, குடும்ப மாக மக்கள் வந்து பார்க்கணும் இளம் ரசிகர்களுக்கானதாக கதை இருக்கணும் அது மியூசிக்கலாவும் இருக்கணும் என்றுதான் ‘பூவே உனக்காக’ படத்தின் திரைக்கதையை எழுதி முடித்தேன். முடித்ததுமே அக்கதையில் நம்பியார் சார், நாகேஷ் சார், விஜயகுமாரி அம்மா, சுகுமாரி அம்மா, மலேசியா சார், ஜெய் கணேஷ் சார் ஆகியோரையெல்லாம் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க வைப்பது என்று முடிவுசெய்து, கதையைக் கூறி அவர்களைச் சம்மதிக்க வைத்து விட்டேன்.

சொன்னா நம்ப மாட்டீங்க… விஜயை இயக்குவதற்கு முன்பு அவர் நடிப்பில் ஏற்கெனவே வெளியான 4 படங்களையும் நான் பார்த்திருக்கவில்லை. ஆனால், ‘தேவா’ படத்தில் இடம்பெற்ற ‘சின்னப் பையன் சின்ன பொண்ணை காதலிச்சா ஒரு பாட்டு வரும்’ என்கிற பாடல் பெரிய ஹிட்டாகி சன் தொலைக்காட்சியில் திரும்பத் திரும்ப ஒளிபரப்பப்பட்டு வந்தது. ராஜேஷ் கண்ணா - ஷர்மிளா தாகூர் நடித்த ‘ஆராதனா’ படத்தில் இடம்பெற்ற ‘ரூப் தேரா.. மஸ்தானா’ பாடல் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அந்தச் சாயலில் உருவான ‘சின்னப் பையன்’ பாடலில், விஜயின் துறுதுறுப்பான நடனமும் துடிப்பான முக பாவங்களும் என்னைச் சட்டென்று கவர்ந்தன.

இவர்தான் ‘பூவே உனக்காக’ திரைக்கதைக்குப் பொருத்தமான ஹீரோ என மனதில் பிளாஷ் அடித்தது. உடனே தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி சாரிடம் போய் ‘விஜய் இந்தக் கதைக்குச் சரியாக இருப்பார்’ என்றேன். அவரோ, ‘என்னய்யா சொல்ற? விஜய் பக்கா கமர்ஷியல் கதைகள்ல நடிச்சுகிட்டு வர்றார்.. உன்னோட ஸ்டைல் கம்ப்ளீட்டா வேற.. உங்க ரெண்டு பேரோட காம்பினேஷன் எப்படி ஒத்துப் போகும்? எஸ்.ஏ.சியே இந்தக் கதைக்கு ஒப்புக்கொள்ள மாட்டார். எதுக்கு ரிஸ்க்?” என்றார். நானோ, ‘அவருக்கு நிச்சயமாக இந்தக் கதை பிடிக்கும் சார்’ என்றேன்.

எனது ‘புது வசந்தம்’ படத்தைப் பார்த்துவிட்டு எஸ்.ஏ.சி.சார் என்னை மனதாரப் பாராட்டியிருந்தார். அதன் பிறகு எனது ஒவ்வொரு படத்தையும் பார்த்து பாராட்டி வந்தார். நான் உறுதியாகச் சொன்னதைப் பார்த்து உடனே எஸ்.ஏ.சி சாருக்கு போன் செய்துவிட்டார். எதிர்முனையில்: “விஜயை வெச்சு அடுத்து 2 படம் இயக்கிட்டு இருக்கேன். செப்டம்பர்லாதான் கால்ஷீட் இருக்கு. ஆனால், எனக்கு விக்ரமன் படங்கள் ரொம்பப் பிடிக்கும். நாளைக்கு அவரை வீட்டுக்கு வரச்சொல்லுங்க. நானும் விஜயும் ஒரே சிட்டிங்ல கதையக் கேட்டுடுறோம்” என்றார்.

அடுத்த நாள் சாலிகிராமத்தில் இருந்த விஜயின் வீட்டுக்குப் போய் கதை சொன்னேன். பல காட்சிகளில் விஜயும் எஸ்.ஏ.சி.சாரும் மனம் விட்டுச் சிரிச்சு ரசிச்சாங்க. எங்கே அவர்களுக்குக் கதை பிடிக்காமல் போய்விடுமோ என்கிற எண்ணத்தால் ‘சோக கிளைமாக்ஸ்’ பத்தி வாயே திறக்கல. ஹேப்பி எண்டிங்தான் சொன்னேன். அவங்களுக்குப் பிடிச்சுப் போச்சு. செப்டம்பர் வரை காத்திருந்து படப்பிடிப்பைத் தொடங்கினேன்.

படப்பிடிப்பு தொடங்கும் 5 நாள்களுக்கு முன்னர், படத்தில் நடித்த ஒரு மூத்த நடிகர் என்னிடம் “இவ்வளவு கனமான கதையை அந்தச் சின்னப் பையன் தாங்குவானா? நீங்க குருவி தலையில பனங்காயை வைக்கிறீங்க” என்று சொல்லி பயமுறுத்தினார். நான் பயப்படவில்லை. அப்போது அவரிடம் ‘இந்தக் கதைக்கு 100 சதவீதம் விஜய் நியாயம் செய்வார். அதற்கான திறமை அவரிடம் இருப்பதாக நம்புகிறேன்’ என்றேன். அதைப் படப்பிடிப்பின் முதல் நாளிலேயே நிரூபித்தார் விஜய்.

நாகர்கோவில் அருகிலுள்ள பூதப்பாண்டி என்கிற அழகான கிராமத்தில் முதல் நாள் ஷூட்டிங். விஜயகுமாரி அம்மா, சுகுமாரி அம்மா இரண்டு பேரோடும் விஜய் நடிக்கும் காட்சியின் மாஸ்டர் ஷாட். அதில் நீள நீளமான வசனங்கள், நிறைய மாடுலேஷன், பலவித எக்ஸ்பிரஷன் என்று பல விஷயங்களை நினைவில் வைத்து நடிக்க வேண்டும், விஜய்க்கு பெரிய சவால்.

ஒருமுறை வசனத்தை வாசித்துக் காட்டினேன். கண்களை மூடிக்கொண்டு வசனத்தைக் கேட்ட விஜய், ‘ஓகே சார்.. நான் ரெடி சார்’ என்றார். என்னால் நம்ப முடியவில்லை! ‘என்ன சார் இது; இன்னும் மானிட்டரில் ஒருமுறைகூட ஒத்திகை பார்க்க வில்லை அதுக்குள்ள டேக் போகலாம்னு சொல்றீங்களே’ என்றேன். “நான் ரெடி சார்.. உங்களுக்கு ஓகேன்னா நேரா டேக் போகலாம் சார்” என்று மிகப் பணிவாகத் தாழ்ந்த குரலில் சொன்னார். அப்போது பிலிம் ரோலின் விலை அதிகம். என்றாலும் விஜயின் நம்பிக்கையைப் பார்த்து ஓகே சொன்னேன். நான் எதிர்பார்த்ததைவிடச் சிறப்பாக நடித்து அசத்திவிட்டார்.

அன்று முழுவதுமே சிங்கிள் டேக்கில் தூள் கிளப்பினார். அவ்வளவு அமைதியாக இருப்பார். அன்றைக்கே இந்தப் படம் முழுவதும் விஜய் எப்படி நிறைந்திருக்கப்போகிறார் என்பது புரிந்துவிட்டது. மனம் கொள்ளாத சந்தோஷத்தோடு அன்று படப் பிடிப்பு முடிந்து ஹோட்டல் அறைக்குத் திரும்பியதும், ‘விஜய் தாங்கமாட்டார்’ என்று சொன்ன அந்த சீனியர் நடிகருக்குப் போன் செய்தேன்: ‘சார்.. விஜய் பனங்காயை அல்ல; பாறாங்கல்லையே தாங்கக் கூடிய பல திறமைகளின் உறைவிடம். நீங்கள் வேண்டுமானால் பாருங்கள், எம்.ஜி.ஆர்., ரஜினியைப் போல சினிமாவை ஆட்சி செய்வார்” என்றேன்.

அவர் வாயடைத்துப்போனார். அவர் படப்பிடிப்பில் கலந்துகொண்டு விஜயுடன் நடித்தபோது ‘நீங்கள் சொன்னதை ஏற்றுக்கொள்கிறேன்’ என்றார். அப்படிப்பட்ட விஜயிடம் அந்தச் சோக கிளைமாக்ஸை ஒருநாள் சொன்னேன். அதற்கு அவர் கொடுத்த ரியாக்‌ஷன் என்னவாக இருந்திருக்கும்? அடுத்த வாரம் பகிர்கிறேன்.

(ப்ரியம் பெருகும்)

படங்கள் உதவி: ஞானம்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in