

ராஜமௌலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ படப் பாடலான ‘நாட்டு நாட்டு’, சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருதைப் பெற்ற பிறகு யாருக்கு அதிர்ஷ்டம் அடித்ததோ இல்லையோ, ராம்சரணுக்கு அடித்தது. ராம்சரண் காவல் அதிகாரி வேடத்தில் நடித்து நேரடியாக இந்தியில் உருவாகிக் கடந்த 2013இல் வெளியான ‘சஞ்ஜீர்’ படத்தை வட இந்திய ரசிகர்கள் மறந்து விடவில்லை. அதன்பின் ராம்சரணின் பல படங்கள் இந்தியில் ‘டப்’ செய்யப் பட்டாலும் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் இந்திப் பதிப்பு 2,750 திரையரங்குகளில் வெளியாகி அவரை அகில இந்திய நட்சத்திரமாக மாற்றியது.
இதை அறிந்த தாலோ என்னவோ, பாலிவுட்டின் சல்மான்கான், தமிழில் அஜித் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற ‘வீரம்’ படத்தின் இந்தி ரீமேக்கை ‘கிஷி கா பாய் கிஷி கி ஜான்’ என்கிற பெயரில் தயாரித்து, நடித்தார். அதில், ‘நாட்டு நாட்டு’வைப் போல் ‘ஏண்டம்மா’ என்கிற குத்தாட்டப் பாடலை நுழைத்து, தன்னுடன் தோன்றி ஆடும்படி ராம்சரணைக் கேட்டுக் கொண்டார். கடந்த ஆண்டு வெறும் ரூ.60 கோடியில் உருவான அந்தப் படம், ரூ.180 கோடி வசூல் செய்தது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் ஷங்கர் - ராம்சரண் கூட்டணி ‘கேம் சேன்ஞர்’ படத்தின் மூலம் உருவானது. ராம் சரணின் வட இந்திய வணிகத்தை மையமாக வைத்து உருவாகியிருக்கும் இந்தப் படம், வாக்கு அரசியலுக்குள் ஒளிந்து விளையாடும் தாதா ஒருவனின் சாம்ராஜ்யத்தைச் சிதிலமாக்கும் ஒரு சாமானிய இளைஞனின் கதையாக உருவாகியிருக்கிறது.
இந்தி - தெலுங்கு - தமிழ் ஆகிய மூன்று மொழிகளில் ஜனவரி 10ஆம் தேதி மகர சங்கராந்தி தினத்தில் வெளியாகிறது ‘கேம் சேஞ்சர்’. வெளியீட்டுத் தேதி நெருங்கிவரும் நேரத்தில் இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவை உத்திரப் பிரதேசத் தலைநகரான லக்னோவில் நடத்தியது படக்குழு.
மாநிலத்தின் புகழ்பெற்ற சட்டப்பேரவைக் கட்டிடமான ‘விதான் சபா’வுக்கு வெகு அருகில் இருக்கும் பிரம்மாண்ட ‘சிங்கிள் ஸ்கிரீன்’ திரையரங்கான பிரதிபாவில் நடந்த டீசர் வெளியீட்டு விழாவில், படத்தின் நாயகன் ராம்சரண், நாயகி கியாரா அத்வானி, வில்லனாக நடித்திருக்கும் எஸ்.ஜே.சூர்யா, மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் அஞ்சலி, படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு ஆகியோர் கலந்துகொண்டனர். தயாரிப்பாளர் தில் ராஜுவுக்கு இது 50வது படம்.
பெருந்திரளாக வந்திருந்த இளம் ரசிகர்களின் கட்டற்ற ஆராவாரமும் கூச்சலும் லக்னோ நகரம் ஹைதராபாத் தாக மாறிவிட்டதோ என எண்ண வைத்தது. நகரத்தில் வசிக்கும் ஆந்திர ரசிகர்கள், தமிழ் ரசிகர்கள், இந்திப்பட ரசிகர்கள் என மொழிக் கலவையில் எழுப்பிய கூச்சலில் நட்சத்திரங்கள் திக்கு முக்காடிப் போனார்கள். ராம்சரண் பேசும்போது: “நாட்டின் மிகப்பெரிய நகரங்களில் லக்னோவும் ஒன்று, இங்கு வாழும் உங்களின் இதயங்களும் பெரியது என்பதைக் காட்டுகிறீர்கள்.
எனது ஆர்.ஆர். ஆர் படத்தை எப்படிக் கொண்டாடினீர்கள்! படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் ஷங்கர் சார் ஈடுபட்டிருப்பதால் அவரால், இங்கே வரமுடியவில்லை. படத்தில் அடுத்தடுத்து என்ன வரும் என்பது ஷங்கர் சாருக்குத்தான் தெரியும். அவர் படத்தைச் செதுக்கிக் கொண்டிருக்கிறார்” என்றார். அவரைத் தொடர்ந்து கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி ஆகியோரும் ரசிகர்களுடன் உரையாடி முடித்ததும் டீசர் பிரம்மாண்டத் திரையில் வெளியிடப் பட்டது.