

நவீன மருத்துவத்தின் ஆய்வுகள் வழி உருவாக்கப் பட்டவை ரசாயனக் கலவை மருந்துகளும் சிகிச்சைகளும். அவற்றை உடலில் செலுத்துவதன் மூலம் உடல் பிணியைப் போக்குதல், வாழ்நாளை சற்று நீட்டித்தல் ஆகியவற்றில் ஓரளவுக்கு வெற்றிபெறத்தான் செய்திருக்கிறோம். அதை மறுப்பதற்கில்லை. ஆனால், அவை ஏற்படுத்தும் பக்க விளைவு களை எவ்விதம் நாம் தாண்டிச் செல்வது? அப்படியான தொடர் பக்க விளைவுகளைப் பற்றிய புதிய பார்வையுடன் கூடிய ஓர் அறிவியல் புனைவுத் திரைப்படமே ‘The Substance’ (பொருள்).
ஒரு காலத்தில் பிரபலமாயிருந்து புகழில் தோய்ந்திருந்த தொலைக்காட்சி நட்சத்திரம் எலிசபெத். உடற்கட்டுமான விழிப்புணர்வு குறித்து வகுப்பெடுக்கும் அவளது வயோதிகத் தோற்றம் காரண மாக, அவள் பணி செய்யும் நிறுவனத்தி லிருந்து வெளியேற்றப்படுகிறாள். அந்தநிறுவன முதலாளிக்குப் புதிய தொலைக்காட்சி நிகழ்ச்சியைத் தொடங்க, இளமையாகவும் வசீகரமாகவும் உள்ள ஒரு மங்கை வேண்டும். பணியை இழந்தஎலிசபெத் தன் புகழை இழக்கச்சகிக்காமல், ரகசியமாக இயங்கும் ஒரு மருத்துவ நிறுவனத்தைத் தொடர்புகொள்கிறாள்.
அந்த நிறுவனத்தினர் யாரையும் நேரில் சந்திக்க முடியாது. ஒரே ஒரு தொலைபேசி எண் மட்டும் தரப்படும். மருந்து களும் அவற்றைப் பயன்படுத்தும் சாதனங்களும் ஆளரவமற்ற கட்டிடம் ஒன்றில், பயனாளருக்கு ஒதுக்கப்படும் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப் பட்டுவிடும். அஞ்சலில் தகவல் வர,பெட்டகத்தில் உள்ள மருந்துப் பொருள்களை எடுத்துக்கொள்ள வேண்டும். எலிசபெத்தின் வேண்டுகோளை ஏற்று அவளுக்குப் பெட்டகம் தரப்படுகிறது.
புதிதாகப் பிறந்தவள்: பயன்படுத்தும் விதிமுறைகளின் முதற் குறிப்பின்படி, எலிசபெத் ஆக்டிவேட்டர் ஊசியைத் தன் கை நரம்பில் செலுத்த, சில விநாடிகளில் தடுமாறி கீழே சரிகிறாள். அவளது முதுகில் ஒரு விரிசல் ஏற்பட்டு, உள்ளிருந்து பதின் பருவ மங்கையொருத்தி வெளியே வருகிறாள். எலிசபெத்தின் இளவயதுத் தோற்றத்தைப் பிரதிபலிக்கும் அவள் வனப்பு மிக்கவளாக இருக்கிறாள்.
அடுத்த குறிப்பின்படி, மயக்கத்திலி ருக்கும் எலிசபெத்தின் உடலில் உள்ளநீர்மத்தை ஊசியின்மூலம் உறிஞ்சி அந்த இளம்பெண் தன்னுள் செலுத்திக் கொள்கிறாள். அந்த நீர்மம் ஏழு நாள்களுக்கு அவளது உயிர்ப்புத் தன்மையைத் தக்க வைத்திருக்கும். அடுத்த எழு நாள்களுக்கு வயோதிக எலிசபெத் உயிர்ப்பு கொள்வாள். இளம்பெண் மயக்கத்திலிருப்பாள்.இப்படி வாரம் ஒருவர் என உயிர் மாற்றிக் கொண்டு நடமாடலாம்.
எலிசபெத்திட மிருந்து தோன்றிய அந்த இளம் பெண்தனது பெயரை ஸ்யு என்று மாற்றிக் கொண்டு முன்னர் பணிபுரிந்த தொலைக் காட்சி நிறுவனத்துக்கு வருகிறாள். வேலையிலிருந்து துரத்திய அந்தமுதலாளி இப்போது ஸ்யுவின் அழகைக்கண்டு திகைத்துவிடுகிறான். உடனடியாகஅவளுக்குக் கவர்ச்சியாக நடனமாடும் பணி தரப்படுகிறது. குறுகிய நாள்களி லேயே தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமடைந்துவிடுகிறாள் ஸ்யு.
தனித்தியங்கும் மனம்! - தனது புகழ் மேலும் சிறக்க வேண்டும் என்கிற எலிசபெத்தின் ஆசையை ஸ்யு நிறைவேற்றும்போது, அவளுக் குள்ளேயே ஒரு புதிய மனம் இயங்கத் தொடங்குகிறது. ஸ்யுவைப் பொறுத்த வரை, அவளுடைய இளமைப்பருவம் எழுச்சிமிக்கது, சாகசங்கள் நிரம்பியது. எனவே, பழைய எலிசபெத்தின் இருப்பி லிருந்து விலகி, மென்மேலுமான உயரத் துக்குச் செல்லும் கனவை நோக்கிய உள முனைப்பைப் பெறுகிறது. இதன் காரணமாக, மயக்கத்திலிருக்கும் எலிசபெத்தின் நீர்மத்தை அதிகமாக உறிஞ்சி தனது உயிர்ப்பு நாள்களை அதிகப்படுத்திக்கொள்கிறாள்.
ஏழு நாள்களைத் தாண்டிய அளவில் உறிஞ்சப்படும் நீர்ம இழப்பின் விளைவு, எலிசபெத்தின் உடலை அலங்கோலமான வயோதிக வடிவத்துக்குக் கொண்டுசெல்கிறது. தான் உயிர்ப்பு கொள்ளும் நாள்களில் எலிசபெத் தனது உருவத்தைக் கண்டு பதறு கிறாள். மருந்தளித்த ரகசிய மருத்துவ நிறுவன எண்ணுக்குத் தொடர்புகொள்கிறாள். அவளுக்கு விருப்பமில்லையென்றால், பரிசோதனை ஆட்டத்தை இத்துடன் நிறுத்திக்கொள்ளலாம், ஆனால் எலிசபெத் தற் போது கொண்டிருக்கும் அதீத வயோதிக நிலை அப்படியேதான் தொடரும் எனவும் மறுமுனையிலிருந்து பதில் வர, அதிர்ச்சியில் உறைந்து போகிறாள்.
ஒரு கட்டத்தில் ஸ்யு தனது நடமாடும் நாள்களை அதிகப்படுத்திக்கொள்ளச் சிறிதும் கருணையின்றி எலிசபெத்தின் நீர்மத்தை அதிகமாக உறிஞ்சுகிறாள். விளைவாக, இளமையைக் கைக் கொள்ளும் ஆசையில் களமிறங்கிய பரிசோதனை இப்போது அதீத முதுமைக் குள் அவளைக் கொண்டுவந்து சேர்க்கிறது.
பிரபலம் சார்ந்த தன்மயக்கம் தந்த கண்மூடித்தனமான ஆத்திரத்தின் காரணமாக, ஸ்யு ஒரு கட்டத்தில் எலிசபெத்தைக் கொன்று விடுகிறாள். ஸ்யுவுக்குச் சாகும் எண்ணம் இல்லை. எனவே, தன்னுடலிலிருந்து ஒரு புதிய மங்கையை உருப்பெறச்செய்ய ஊசியைச் செலுத்துகிறாள்.
மயங்கிவிழும் அவளது உடலி லிருந்து, இறுதித் தோற்றத்தி லிருந்த அவலட்சணமான எலிசபெத்தும் அவளது உடலோடு பின்னிப் பிணைந்த ஸ்யு உடலிலிருந்து வெளிவந்த புதிய மங்கையும் கூடுதலான சதைக் கொத்துகளும் ஒன்றிணைந்து கர்ண கொடூரமான வார்ப்பில் ஓர் உயிர்ப் பிண்டம் எழுந்து நிற்கிறது.
கண்ணாடியில் தன்னைக் கண்டு மிரள்கிறது. ஆனால் அதனுள்ளே இயங்குவது எலிசபெத்தின் மனம். பேராசையால் அழிந்த ஸ்யு நிற்க வேண்டிய மேடையில் புதிய கலவை யில் வார்த்த உடலோடு எலிசபெத் வந்து நிற்கிறாள். அழகை மீட்க விரும்பி அவரூபத்தைப் பெற்ற அவலத்தோடு அவள் பேசத் தொடங்க, அரங்கிலிருக்கும் கூட்டம் அச்சத்தில் அதிர்கிறது.
சிறந்த திரைக்கதை விருது: அந்த மேடையிலேயே எலிசபெத்இறந்து போவதாகக் காட்டியிருந்தால் படத்தின் தனித்த விதத்திலான ஒழுங் கும் ஒத்திசைவும் குலையாமல் நிறைவடைந்திருக்கும். ஆனால், ஹாலிவுட்ஹாரர் சினிமா கலாச்சாரத்துக் குள் படம் தடுமாறி விழுந்து, அந்த அவலட்சண உருவம் வெடித்துச் சிதறி அரங்கத்தில் உள்ள அனைவரது மேலும் ரத்தத்தைப் பீறிட்ட டிக்கிறது.
ஏறக்குறைய அரங்கமே ரத்த வெள்ளத்தில் மிதப்பது போன்ற மிகைக் காட்சிகள். அதைத் தவிர்த்திருந்தால் படம் வடிவ இசைவில் இன்னும் நேர்த்தியாக இருந்திருக்கும். கான் திரைப்பட விழாவில் சிறந்த திரைக் கதைக்கான விருதைப் பெற்றதற்கான நூறு சதவீதத் தகுதியை அடைந்ததாக இருந்திருக்கும்.
திரையில் சொல்வதற்குக் கடினமான கதையை, சுவாரசியமான எளிமையுடன் கட்டமைத்திருக்கிறார் படத்தின் இயக்குநரும் திரைக்கதையாளருமான கொராலியே ஃபர்கீட். அவரும், எலிசபெத்தாகத் தோன்றும் அமெரிக்க சினிமாவின் சிறந்த நடிகைகளுள் ஒருவரான டெமி மூரும் நம்மைத் திரையரங்க இருக்கையிலேயே கட்டிப்போட்டுவிடுகிறார்கள். பேராசை என்பது எந்த வடிவத்தில் வந்தாலும் அது விபரீதமான விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பதற்கு இப்படமும் சிந்திக்கத்தக்க ஒரு திரைச்சான்று.
- viswamithran@gmail.com