

ஆண்டுக்கு 160-க்கும் அதிகமான படங்கள் வருகின்றன. அவைகளில் இரண்டு விதமான படங்கள்தான் உள்ளன. 1.பார்வையாளர்கள் எதிர்நோக்கும் படங்கள். 2. பார்வையாளர்களை எதிர்பார்த்திருக்கும் படங்கள். முதல் வகைப் படங்களை மேலும் இரண்டு விதமாகப் பிரிக்கலாம்: அ) பார்வையாளர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் படங்கள் ஆ) ஓரளவு பார்வையாளர்கள் எதிர்நோக்கும் படங்கள்.
இரண்டாம் வகை படங்களையும் இரண்டு விதமாக பிரிக்கலாம்: இ) எதிர்பார்ப்பை உருவாக்க வாய்ப்புள்ள படங்கள் ஈ) எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத படங்கள்/எதிர்பார்ப்பை உருவாக்க முடியாத படங்கள். இந்த நான்கு விதமான படங்களைக், கீழ்கண்டவாறு. வகுத்துக்கொள்ளலாம்.
# பார்வையாளர்கள் (அதிகம்/ ஓரளவு) எதிர்பார்க்கும் படங்கள்:
# பெரிய நட்சத்திரங்கள் நடித்து அதிகம் பேசப்பட்டு வருபவை. அவர்கள் நடிப்பதாலேயே எதிர்பார்ப்பு அதிகமாகிய படங்கள்.
# தொடர்ந்து ஹிட் படம் கொடுத்து வரும் ஒரு இயக்குநரின் படம்.
# ஒரு (பெரிய) ஹிட் படம் கொடுத்த இயக்குநரின்/நடிகரின் அடுத்த படம்.
பார்வையாளர்கள் (அதிகம் ஓரளவு) எதிர்பார்க்கும் படங்கள் ஆண்டுக்கு அதிகபட்சம் 30 முதல் 40-க்குள் இருக்கும். அவ்வருடத்தின் பாக்ஸ் ஆஃபீஸ் வசூலை அதிகமும், இப்படங்களே நிர்ணயிக்கின்றன என்பதால் அனைத்துத் திரையரங்குகளும் எதிர்பார்ப்பது இப்படங்களையே.
இவ்வகைப் படங்களை மக்களிடம் கொண்டுசெல்வது எளிது. ஏனெனில் இப்படங்களின் எந்தச் செய்தியும், ஊடகங்களைப் பொருத்தவரை முக்கிய செய்தியே. கதாநாயகன் ஷூட்டிங் வருவதும், இயக்குநருடன் பேசுவதும்கூடப் புகைப்படமாக வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தும். இந்தப் படங்கள் முதலிலிருந்தே எதிர்பார்ப்பில் உள்ளதால், இவற்றை வியாபாரம் செய்வதும், தொலைக்காட்சி, ரேடியோ மற்றும் இதர ஊடகங்களின் ஆதரவைப் பெறுவதும் கடினம் இல்லை.
அவர்களே தொடர்ந்து செய்திகள் போட்டு, வாய்ப்பு கிடைத்தால், பெரிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளாகச் செய்து, படத்தை பில்ட் அப் செய்ய உதவுவார்கள். குறைந்தது 75 சதவீத முதலீட்டை படம் வெளிவரும் முன்பே வியாபாரம் மூலம் பெற முடியும் என்பதால் இவ்வகைப் படங்களில் தயாரிப்பாளர்களுக்கு ஆபத்து குறைவு.
இவ்வகைப் படங்களின் பெரிய பிரச்சினையே பட்ஜெட்தான். போட்ட பட்ஜெட் ஒன்றாகவும், கடைசியில் வந்து நிற்கும் பட்ஜெட் வேறொன்றாகவும் இருக்கும்,. பெரிய கதாநாயகர்களோடு ஒரு படத்தைச் செய்யும்போது, பட்ஜெட்டுக்குள் எடுக்க வேண்டும் என்று நாம் படத்தை எந்த வகையிலும் சுருக்க முடியாது.
சமரசம் இல்லாமல் செலவுசெய்ய வேண்டிய கட்டாயத்தில், பெரும்பாலும் இவ்வகைப் படங்கள், போட்ட பட்ஜெட்டை மீறிவிடும். இவற்றில் ஒரு சில படங்கள்தான் தயாரிப்பாளர்களுக்கு லாபத்தைத் தரும். இவ்வாறு இல்லாமல், சரியாகத் திட்டமிட்டு, கூட்டணியாக வேலை செய்து, தயாரிக்கப்பட்ட இவ்வகைப் படங்கள் பல சாதனைகளும் புரிந்துள்ளன.
பார்வையாளர்களை எதிர்பார்க்கும் படங்கள்
இவை ஏதோ ஒரு விதத்தில், பார்வையாளர்களை, நம் படம் கவர முடியும் என்ற நம்பிக்கையில் எடுக்கப்படும் படங்கள். மொத்தத்தில் 80 சதவீதப் படங்கள் இந்த வகையில் அடங்கும். இதில் 20 சதவீதப் படங்கள் எதிர்பார்ப்பை உருவாக்க வாய்ப்புள்ள படங்கள். இயக்குநரும், தயாரிப்பாளரும் இணைந்து புது விதமாக யோசித்து, மக்களைக் கவரும் வகையில், முன்னோட்டங்களை வெளியீட்டு, ஏதோ ஒரு வகையில் பரபரப்பை உண்டாக்கினால், இவ்வகைப் படங்களுக்கு எதிர்பார்ப்பை உண்டாக்க முடியும்.
இவ்வாறு செய்யாமல், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், படம் தயாரான பின், அப்படத்தை இயக்குநர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் காண்பித்து, படத்தைப் பற்றிய நல்ல அபிப்பிராயங்கள் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தவும் முடியும் (உதாரணங்கள்: அட்டகத்தி, நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம், சதுரங்க வேட்டை). எதிர்பார்ப்பு இல்லாத படங்கள் குறித்தும் இப்படிச் சரியான அணுகுமுறை மூலம் எதிர்பார்ப்பை உருவாக்க முடியும்.
எண்ணிக்கையை கூட்ட உதவும் படங்கள்
மீதமுள்ள 60 சதவீதம், எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாதவை. எடுத்ததும் தெரியாமல், வந்ததும் தெரியாமல், போனதும் தெரியாமல் மறையும் படங்கள். இவை ஏதோ ஒரு நம்பிக்கையில் எடுக்கப்பட்டு, மக்கள் மத்தியிலும், ஊடகங்கள் மத்தியிலும் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் வந்து செல்பவை. இவை சினிமாவின் எண்ணிக்கையைக் கூட்ட மட்டுமே உதவுகின்றன.
இத்தகையப் படங்கள், அதீத நம்பிக்கையில் எடுக்கும் தயாரிப்பாளரை மட்டுமே பாதிக்கின்றன. வருடத்தில் குறைந்தது 100 படங்கள் இவ்வாறு வருவது, திரைப்படத் துறை மீது அவநம்பிக்கையைத்தான் ஏற்படுத்தும். எனவே, இத்தகையப் படங்களை எடுப்பவர்கள், மேலும் ஆலோசித்து, பலருடன் கலந்து பேசி எடுப்பது நல்லது.
சினிமாவில் தொடர்ந்து நீடிக்க, ஏதோ ஒரு வகையில் மக்கள் எதிர்பார்க்கும் அல்லது மக்களை எதிர்பார்க்க வைக்கக்கூடிய படங்கள் எடுப்பதுதான் சிறந்த வழி. இப்படிப்பட்ட தன்மைகள் எதுவும் இல்லாமல், மக்கள் எப்படியாவது நம் படத்துக்கு வந்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் படம் எடுப்பது, ஒரு நாளிலேயே படங்களின் தலை எழுத்து நிர்ணயிக்கப்படும் இந்தக் காலத்தில் வணிக வெற்றியைத் தராது.
மேலே சொன்னவை எப்படிப்பட்ட எதிர்பார்ப்புடன் படங்களை கொண்டு வர முடியும் என்பதைப் பற்றி. அதுவே படத்தின் வெற்றிக்கு உத்தரவாதம் அல்ல. எதிர்பார்ப்பு ஓபனிங் வசூலை மட்டுமே உறுதி செய்ய முடியும். ஏனெனில், எதிர்பார்ப்புடன் வரும் படங்கள் அந்த எதிர்பார்ப்பை ஏதோ ஒரு வகையில் பூர்த்தி செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் அது எதிர்மறை விளைவுகளையும் ஏற்படுத்தும்.
நல்ல எதிர்பார்ப்பை உருவாக்குவதால், முதல் மூன்று நாட்களுக்கு வசூலைக் கொண்டுவர முடியும். அதன் பின், அந்தப்படம்தான், தன்னைத் தாங்கி நிற்க வேண்டும். அவ்வாறு, தாங்கி நிற்க, படம் பெருவாரியானவர்களுக்குப் பிடித்திருக்க வேண்டும். ஒரு நல்ல ஓபனிங் வசூலைப் பெற்ற படம், மக்களுக்கும் பிடித்தமானதாக மாறும்போது, அதன் வெற்றி பெரிதாகிறது. அதுவே திரைப்படத் துறையில் உள்ள அனைவரின் நோக்கம்.
தொடர்புக்கு dhananjayang@gmail.com