Last Updated : 29 Jun, 2018 10:28 AM

 

Published : 29 Jun 2018 10:28 AM
Last Updated : 29 Jun 2018 10:28 AM

முத்திரை பதித்த வித்தகர்!

ஜூலை 3: எஸ்.வி.ரங்கா ராவ் நூற்றாண்டு தொடக்கம்

செல்வாக்கு பெற்ற நடிகர்கள் வலிந்து உருவாக்கிக்கொண்ட சாகசக் கதாபாத்திரங்களின் நிழல், அத்தனை எளிதில் அவர்களை விடுதலை செய்வதில்லை. அவர்களுக்கான நட்சத்திரப் பிம்பத்தை உருவாக்குவது அந்த நிழலே. அந்தப் பிம்பத்துக்கு நேர்மாறான கதாபாத்திரத்தில் நடிக்கும்போது மக்கள் ஏற்பதில்லை. உச்ச நடிகர்கள் ஏற்கும் கதாபாத்திரங்களில், பிம்ப ஒளிவட்டம் பொருந்திய நடிகர்களாகவே பார்வையாளர்களுக்குத் தெரிவதால்தான் இந்தப் பின்னடைவு. எம்.ஜி.ஆரை ‘எங்க வீட்டுப் பிள்ளை’யாகவும் ஜெமினி கணேசனைக் காதல் மன்னனாகவும் ரஜினியை பாட்ஷாவாகவும் எதிர்பார்க்க வைக்கிறது. நட்சத்திரப் பிம்பத்தின் இந்த மாய வலையிலிருந்து தப்பித்த உச்ச நடிகர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அவர்களில் ஒருவர், ஆந்திர மக்களால் ‘விஸ்வநட சக்கரவர்த்தி ’(நடிப்பு உலகின் அரசர்) என்று கொண்டாடப்பட்ட எஸ்.வி. ரங்கா ராவ்.

வெவ்வேறு அப்பாக்கள்

ரங்கா ராவ் திரையில் அடிவைத்து இரண்டு ஆண்டுகளே ஆகியிருந்த நிலையில் நாகி ரெட்டியின் தயாரிப்பில் எல்.வி.பிரசாத் இயக்கத்தில் 1952-ல் வந்த ‘பெல்லி செஸ்ஸி சூடு’ படத்தில் தாராளம் மனம் கொண்ட கிராமத்து ஜமீன்தாராகத் தோன்றினார். ‘கல்யாணம் பண்ணிப் பார்’ என்ற தலைப்புடன் தமிழில் வெளியான அந்தப் படத்தில் 60 வயதுத் தோற்றத்தில் சாவித்திரியின் தந்தையாக நடித்தார். ஆனால், அப்போது அவரின் உண்மையான வயது 34. அப்போது தொடங்கி அவரை அப்பா கதாபாத்திரங்களில் அதிகமும் முத்திரை குத்தின தெலுங்கு, தமிழ் சினிமாக்கள். ஆனால், ஏற்ற ஒவ்வொரு அப்பா கதாபாத்திரத்தையும் தனது தனித்த நடிப்பு பாணியால் வெவ்வேறாகத் தெரியும்படி செய்த அதிசயத்தை நிகழ்த்திக் காட்டினார்.

29CHRCJ_RAO_3100right 

கூடு பாயும் கலைஞன்

ஆறடி உயரம், ஆஜானுபாகுவான தோற்றம், எந்த வகை உணர்ச்சியையும் எளிதில் வெளிப்படுத்திவிடும் கண்கள், மந்திரப் புன்னகை, அலட்டல் இல்லாத அளவான உடல்மொழி, தெலுங்கையும் தமிழையும் சேதம் செய்யாமல் உச்சரிக்கும் மொழித்திறன் என இயல்பிலேயே அமைந்துவிட்ட அம்சங்கள் அவரை பிறவிக் கலைஞன் எனக் கூறச் செய்தன. தாம் ஏற்ற கதாபாத்திரங்களில் ரங்கா ராவ் என்றுமே நடித்ததில்லை; கூடு பாய்ந்திருக்கிறார். கதாபாத்திரமாகவே மாறிவிடும் மாயம் தெரிந்த மகா நடிகர். 25 ஆண்டு திரை வாழ்க்கையில் (தமிழ்ப் படங்கள் 53, தெலுங்குப் படங்கள் 109) அவர் பங்குபெற்ற 163 படங்களிலும் இந்த மாயத்தைக் காணமுடியும்.

காவிய நாயகன்

என்.டி.ராமராவும், இசையமைப்பாளர் கண்டசாலாவும் அறிமுகமான ‘மன தேசம்’(1949) படத்தில் சிறுவேடத்தில் அறிமுகமான ரங்கா ராவ் மக்களின் மனத்தில் பதியாமல் போனார். ஆனால் ‘பாதாள பைரவி’ (1951) படத்தில் நேபாள மந்திரவாதியாகத் தோன்றிய ரங்கா ராவின் திறமை தென்னிந்தியா முழுமைக்கும் தெரியவந்தது. அதன்பிறகு அக்பராக, பீஷ்மராக, போஜ ராஜனாக, தக்ஷனாக, துரியோதனாக, ஹரிச்சந்திரனாக, ஹிரண்டகஷிபுவாக, கம்ஷனாக, உக்கிர சேனனாக, கடோத் கஜனாக, கீசகனாக, நரகாசுரனாக ஏன் எமனாகவும் வேடம் தரித்தார். இவர் ஏற்ற காவியக் கதாபாத்திரங்களில் ஆடை, அணிகள் ஒன்றுபோல இருந்தாலும் ஒவ்வொன்றையும் ஒரு சாதனையாக மாற்றிக் காட்டிய காவிய நாயகன் எஸ்.வி.ஆர்.

1963-ல் வெளியான ‘நர்த்தன சாலா’ தெலுங்குப் படத்தில் பாண்டவர்களுடன் விராட நாட்டு அரண்மனையில் மறைந்துவாழும் திரௌபதியாக சாவித்திரி நடித்தார். பார்த்ததுமே இச்சை கொண்டு திரெளபதியை அடையத் துடிக்கும் கீசகனாக ரங்கா ராவ் நடித்தார். பல படங்களில் சாவித்திரிக்கு அப்பாவாக நடித்த ரங்கா ராவ், இப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் நடிப்பதா என்று படம் வெளியாகும் முன்பே பத்திரிகை ஒன்று எழுதியது. ஆனால், அதே பத்திரிகை படம் வெளியானதும் “ சாவித்திரி திரௌபதியாகவும் எஸ்.வி.ஆர் கீசகனாகவும் மாறிவிட்டார்கள். அவர்களின் திறமை அவர்கள் உருவாக்கிய கண்ணியத்தைக் காப்பாற்றியது” என்று எழுதியது. ரங்கா ராவுக்கு தெலுங்கு சினிமா கதாநாயக வாய்ப்பை வழங்க முன்வந்தபோது அதை முற்றாக மறுத்த நடிகர் அவர். அதே நேரம் என்.டி.ஆர். நாகேஷ்வர ராவை விட சில படங்களுக்கு அதிக ஊதியம் பெற்ற ஒரே குணசித்திர நடிகர்!

தமிழில் தனித் தடம்

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை அப்பா கதாபாத்திரங்களை ஏற்க ஏராளமான நடிகர்கள் இருந்தார்கள். ஆனால், அன்பும் கண்டிப்பும் அரவணைக்க, பகடி இழையோடும் மெல்லிய நகைச்சுவையைப் படரவிட்டு, செல்வச் செருக்கை காட்டாத அப்பா கதாபாத்திரங்களுக்கு எஸ்.வி.ரங்கா ராவை விரும்பி அழைத்துகொண்டது தமிழ் சினிமா.

எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர். போல எஸ்.வி.ஆர். என்று மூன்றெழுத்துகளால் அழைக்கப்பட்ட சாமர்லா வெங்கட ரங்கா ராவ் ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள, நிஜாம்கள் அமைந்த புகழ்பெற்ற கோட்டை நகரான நுஸ்வித்தில் 1918-ம் ஆண்டு ஜூலை 3-ம் தேதி பிறந்தார். பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்புக்காக சென்னை வந்து இந்துக் கல்லூரியில் படித்து இளங்கலையில் அறிவியல் பட்டம் பெற்ற ரங்கா ராவ், இரண்டு தெலுங்குப் படங்களையும் இயக்கியவர்.

‘நர்த்தனசாலா’ படத்தில் ஏற்ற கீசகன் கதாபாத்திரத்துக்காக ஆப்பிரிக்க ஆசிய சர்வதேசப் படவிழாலில் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றவர். ரங்கா ராவின் நடிப்பில் வெளிவந்த ‘அன்னை’, ‘சாரதா’, ‘நானும் ஒரு பெண்’, ‘கற்பகம்’, ‘நர்த்தன சாலா’ ஆகிய ஐந்து படங்கள் குடியரசுத் தலைவர் விருதைப் பெற்றிருக்கின்றன. திரை நடிப்பில் தனித்து முத்திரை பதித்த வித்தகர் எஸ்.வி.ரங்கா ராவின் அஞ்சல் தலையை 2013-ல் வெளியிட்டுக் கவுரவம் செய்தது இந்திய அரசு.

தொடர்புக்கு: jesudoss.c@thehindu.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x