மூழ்காத உண்மைகள்!

மூழ்காத உண்மைகள்!
Updated on
2 min read

ஹிட்லரின் டைட்டானிக்: 75 ஆண்டுகள்

உன்னதமான பல காதல் காவியங்களை ஹாலிவுட் வழங்கியிருக்கிறது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 1997-ல் வெளியான ‘டைட்டானிக்’ அவற்றில் ஒன்று. தேர்ந்த திரைக்கதை, அதிநவீன விஷுவல் எஃபெக்ட் உத்திகளைப் பயன்படுத்திக் கொண்ட பிரம்மாண்ட படமாக்கம் என மொழிகளைக் கடந்து உலகளாவிய ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி, வசூலிலும் சாதனை படைத்தது.

கேமரூனுக்கு முன்னர், டைட்டானிக் விபத்தைத் திரையில் வடிக்கும் பல முயற்சிகள் நடந்திருக்கின்றன. அவற்றில், 1943-ல் உருவாக்கப்பட்ட ‘டைட்டானிக்’ திரைப்படம் ஹிட்லரின் கொள்கைகளை பிரச்சாரம் செய்யும் நோக்கில் எடுக்கப்பட்டது. அந்தப் படத்தை இயக்கியவர் ஹெர்பர்ட் செல்பின் (Herbert Selpin). நாஜி கொள்கைகளில் விருப்பமில்லாத அவர், அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரான கோயபெல்ஸின் வற்புறுத்தலால் படத்தை இயக்க வேண்டியிருந்தது.

டைட்டானிக் கப்பலின் உரிமையாளர்களான வொயிட் ஸ்டார் லைன் நிறுவனத்தைக் குற்றம் சுமத்தும் வகையில் திரைக்கதையை எழுதியவர் நாஜி தேசியவாதியான வால்டர் ஸெர்லெட் ஆல்ஃபெனிஸ் (Walter Zerlett Olfenius). நாஜி கடற்படைக்குச் சொந்தமான எஸ்.எஸ்.கேப் ஆர்கோனா என்ற கப்பல் பிரம்மாண்ட டைட்டானிக்காக உருமாற்றம் செய்யப்பட்டது.

கோயபெல்ஸுக்கு இந்தத் திரைப்படத்தை உருவாக்குவதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. முதலாவது, ஜெர்மானிய திரைப்படத் துறை மற்ற எந்த நாட்டின் திரைத் துறைக்கும் குறைந்ததில்லை என்பதை நிறுவ வேண்டும். இரண்டாவது, பிரிட்டிஷ். அமெரிக்கப் பெரு முதலாளிகள் மீது குற்றம் சுமந்த வேண்டும். அதனால், படப்பிடிப்புக்கு அவசியமான அத்தனை உதவிகளையும் கோயபெல்ஸ் செய்து கொடுத்தார். அக்காலகட்டத்தின் திரைப்படத் தயாரிப்புடன் ஒப்பிடுகையில் ஹெர்பர்ட் செல்பின் பெரும் பாய்ச்சலாக மிகப் பிரமாண்டமான முறையில் அரங்குகள் அமைத்து படத்தை உருவாக்கினார். ஆனால், படம் முழுமையாக முடிவடைந்தபோது ஹெர்பர்ட் செல்பின் உயிருடன் இல்லை.

படம் உருவாகி வந்தபோது திரைக்கதை ஆசிரியரான வால்டர் ஸெர்லெட்டுக்கும் இயக்குநர் ஹெர்பர்ட் செல்பினுக்கும் இடையில் கருத்து வேறுபாடு மூண்டது. செல்பின் சிறந்த திரைக்கதை ஆசிரியராக இருந்ததால், ஸெர்லெஃப்டின் திரைக்கதையில் இருந்த குறைகளைத் துணிந்து சுட்டிக்காட்டினார். திரைக்கதையில் திருத்தங்கள் செய்து அதன் இணைத் திரைக்கதாசிரியராகவும் மாறினார். ஒரு கலைஞனாக செல்பினின் நேர்மையை ஸெர்லெட்டால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

படத்தில் கூட்டத்தைக் காட்ட துணை நடிகர்களாக நடித்துக்கொண்டிருந்த நாஜிப் படையினர், குடித்துவிட்டுப் பெண்களிடம் முறையற்ற விதங்களில் நடந்துகொள்கிறார்கள் என செல்பின் துணிந்து குற்றம் சாட்டினார். அதில் உண்மை இருந்தது. அவர்களால் படப்பிடிப்பும் நீண்டது. திரைக்கதை ஆசிரியர் ஸெர்லெட்டுக்கு, செல்பினின் குற்றச்சாட்டால் கோபம் உண்டானது. தேசத்தின் பாதுகாப்புக்கு அரணாக நிற்கும் நாஜிப் படையினரை இயக்குநர் சந்தேகிப்பது முறையற்ற செயல் எனக் கருதிய அவர், உடனடியாக கோயபெல்ஸிடம் இந்தப் பிரச்சினையைக் கொண்டுசென்றார்.

முடிவில் ஹெர்பர்ட் செல்பினிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் கோயபெல்ஸிடம், ஹெர்பர்ட் பணிந்து போகாததால், அவரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தார்கள். மறுநாளே அவர் தற்கொலை செய்துகொண்டார் என்று அறிவிக்கப்பட்டது. உண்மையில் ஹெர்பட் செல்பின் கொலை செய்யப்பட்டே தூக்கில் தொங்கவிடப்பட்டதாக இன்றளவும் நம்பப்படுகிறது.

‘டைட்டானிக்’ 1943-ன் எஞ்சிய காட்சிகளை வெர்னர் கிலிங்கர் இயக்கி நிறைவு செய்தார். ஆனால், அவரது பெயர் படத்தில் இடம்பெறவில்லை. நிறைவடைந்த படம் கோயபெல்ஸுக்குத் திருப்தி அளிக்கவில்லை. வதை முகாம்களை நாடெங்கிலும் ஏற்படுத்தி யூதர்களைக் கொத்துக் கொத்தாக இனப்படுகொலை செய்துகொண்டிருந்த தருணத்தில் மனித உறவுகளின் மேன்மைகளைச் சித்தரிக்கும் காட்சிகளைக் கொண்ட படத்தைத் திரையிடுவது சரியல்ல என அவர் கருதினார்.

நாஜிக் கொள்கைளைப் பரப்பும் நோக்கில் உருவாக்கப்பட்ட திரைப்படம், அதற்கு நேர்மாறான விளைவுகளை உண்டாக்கலாம் என கோயபெல்ஸ் அஞ்சினார். படம் உடனடியாக ஜெர்மனியில் தடை செய்யப்பட்டது. நாஜி ஆக்கிரமித்திருந்த பிற தேசங்களில் மட்டும் டைட்டானிக் திரையிடப்பட்டது. இந்த நிலையில், இரண்டாம் உலகப் போரின் முடிவில் நாஜிப் படை தோல்வியுற்றதன் தொடர்ச்சியாக ஹிட்லரும் கோயபெல்ஸும் தற்கொலை செய்துகொண்டார்கள். ‘டைட்டானிக்’ பெட்டிகளில் முடங்கிப்போனது.

போர் நடந்துகொண்டிருந்த காலகட்டத்தில், படத்தில் பயன்படுத்தப்பட்ட எஸ்.எஸ்.கேப் ஆர்கோனா கப்பல் யூதக் கைதிகளைச் சுமந்துகொண்டு நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்தது. எதிரி நாடுகளின் விமானப் படையினர் வீசிய குண்டுகளால் சேதப்படுத்தப்பட்டு, டைட்டானிக் கப்பலைப் போலவே எஸ்.எஸ்.கேப் ஆர்கோனா கப்பலும் 5,000 யூதர்களின் மரண ஓலத்துடன் கடலில் மெல்ல மூழ்கிப்போனது. 75 ஆண்டுகளுக்குப் பிறகும் ‘டைட்டானிக்’ 1943-ன் உண்மைகள் மூழ்கிடவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in