

ஏவி. மெய்யப்பனால் 1945இல் தொடங்கப்பட்டது ஏவி.எம். கடந்த 80 ஆண்டுகளில் 177 படங்களைத் தயாரித்துச் சாதனை படைத்த இந்நிறுவனத்தின் ஸ்டுடியோ, இன்றைக்கும் கோலிவுட்டின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது. அங்கே கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட ‘ஏவி.எம். ஹெரிடேஜ் மியூசியம்’ சினிமா ஆர்வலர்களையும் பொதுமக்களையும் ஈர்த்து வருகிறது.
இந்தக் காட்சியகத்தில் ஏவி.எம். நிறுவனத்தின் திரைப்படப் பாரம்பரியத் தைக் கொண்டாடும் வகையில், பழமை வாய்ந்த, வரலாற்றைச் சுமந்து நிற்கும் சேகரிப்புகளைக் காட்சிப்படுத்தியுள்ளது. ஏவி.எம் தயாரித்த திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்ட சினிமா தொடர்பான எல்லாக் கருவிகளையும் ஓரிடத்தில் காணும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ளது.
‘பராசக்தி’ சின்னம்: தமிழ் சினிமாவின் வரலாற்றை ‘பராசக்தி’ படத்தைத் தவிர்த்துவிட்டுப் பேச முடியாது. முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் அனல் தெறிக்கும் வசனத்தில் உருவான அப்படத்தில் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். ஏவி.எம். ஸ்டுடியோவில் நடந்த இப்படத்தின் முதல் நாள், முதல் காட்சி படப்பிடிப்பில் ‘சக்சஸ்’ என்கிற வசனத்தைப் பேசி அவர் நடித்தார். ‘பராசக்தி’ படம் வெளியாகி 50 ஆண்டுகள் ஆனதன் நினைவாக, சிவாஜி கணேசன் ‘சக்சஸ்’ என்கிற வசனத்தைப் பேசிய இடத்தில் 2002இல் நினைவுச் சின்னம் ஒன்றை அமைத்தது. இப்போது அந்த நினைவுச் சின்னம் அருங்காட்சியகத்துக்கு இடம் பெயர்ந்துவிட்டது.
‘சகலகலா வல்லவன்’ புல்லட்: ஏவி.எம். என்றதுமே சில படங்களின் காட்சிகள் நம் மனக் கண்ணில் தோன்றும். அந்த வகையில், 1982இல் கமல்ஹாசன் நடிப்பில் வெளி யான ‘சகலகலா வல்லவன்’ படத்தில் இடம்பெற்ற ‘இளமை இதோ.. இதோ..’ என்கிற பாடலைக் கூறலாம். அப்பாடல் காட்சியில் கமல்ஹாசன் ஒரு பைக்கில் வந்து ‘ஹாய் எவ்ரிபடி.. விஷ் யூ எ ஹேப்பி நியூ இயர்...’ என்று பாடி ஆடுவார். அப்பாடலில் கமல்ஹாசன் பயன்படுத்தியது, 1980 மாடல் ராயல் என்.ஃபீல்ட். இந்த புல்லட் அருங்காட்சி யகத்தை அழகாக்கியிருக்கிறது.
1983இல் ரஜினி வளரும் நாயகன், துருதுருப்பான புதிய பாணி நடிப்புடன் ஒரு நட்சத்திரமாக உருவெடுத்திருந்த காலத்தில் ‘பாயும் புலி’ படம் வெளியானது. அப்படத்தில் ஒரு சண்டைக் காட்சியில் உயரம் குறைவான ஆனால் நீளமான சுஸுகி பைக்கில் ரஜினி குகைக்குள் செல்லும் காட்சி இடம்பெற்றது. அந்த பைக் அன்றைக்கு ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்த ஒன்று. அந்த பைக்கையும் அருங்காட்சியகத்தில் காணலாம். அருங்காட்சியகத்துக்கு வந்திருந்த ரஜினி, அந்த பைக்கில் உட்கார்ந்து, ‘பாயும் புலி’ நாள்களை நினைவுகூர்ந்ததுடன், ஒரு குழந்தையைப் போல் மகிழ்ச்சியோடு ஒளிப்படங்களுக்கு போஸ் கொடுத்தார்.
‘சிவாஜி’ படத்தில் ‘வாஜி... வாஜி..’ என்கிற பாடலில் ரஜினியைத் தூக்கிவந்த பல்லக்கு, ரஜினி சிலை, ‘எஜமான்’ படத்தில் ‘ஆலப்போல் வேலப்போல்..’ பாடலில் மீனா உட்கார்ந்துவரும் பல்லக்கு ஆகியவையும் காட்சியகத்தில் நமக்கு அப்படங்களைப் பார்த்த நினைவுகளைக் கிளறுகின்றன. இதேபோல் ‘திருப்பதி’, ‘ப்ரியமான தோழி’, ‘அயன்’ ஆகிய படங்களில் பயன்படுத்திய இருசக்கர வாகனங்களும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. அந்தக் கால லூனா, 1970களில் ஒழிக்கப்பட்ட கை ரிக் ஷா போன்றவையும் காலத்தின் பெட்டகமாக இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன.
ஏவி. மெய்யப்பனின் பேரன் எம்.எஸ். குகன் பாரம்பரிய கார்கள் தொடங்கி, புதுமையான கார்கள் வரை சேகரிப்பதில் நாட்டம் கொண்டவர். அந்த வகையில் அவர் சேகரித்து வைத்துள்ள கார்களும் அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள் ளன. தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். ஜெமினி ஸ்டுடியோ நிறு வனர் எஸ்.எஸ்.வாசன், ஏவி. மெய்யப்பன் உள்ளிட்டவர்கள் பயன்படுத்திய 40க்கு மேற்பட்ட கார்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த கார்கள் பலவும் ஏவி.எம்மின் பல படங்களிலும் பயன்படுத்தப்பட்டவை. இவை பாரம்பரிய கார் விரும்பிகளுக்குச் சிலிர்ப்பான அனுபவத்தைத் தரும்.
தொழில்நுட்ப சாதனங்கள்: 1950களில் தொடங்கி 1990கள் வரையிலும் ஏவி.எம். ஸ்டுடியோவில் படப்பிடிப்பிலும் படத்தின் பின் தயாரிப்புப் பணிகளிலும் பயன்படுத்தப்பட்ட ஆப்டிகல் ரெக்கார்டர், மேக்னடிக் ரெக்கார்டர், மல்டி டிராக் ரெக்கார்டர்கள், சிங்கிள் ட்ராக் ரெக்கார்டர், டபுள் ட்ராக் ரெக்கார்டர் புரொஜெக்டர்கள், எடிட்டிங் மெஷின்கள், ஒலி, ஒளி, டப்பிங், மிக்சிங் சாதனங்கள், ‘பிளாட் பை எடிட்டிங்’ மெஷின், மழை, புயல் காற்றைத் தத்ரூபமாகக் காட்ட உதவும் ‘ஏர் கிராஃப்ட்’ மெஷின் உள்ளிட்ட நூற்றுக்கும் அதிகமான சாதனங்களை உரிய விளக்கக் குறிப்புகளுடன் இங்கே காணலாம்.
ஏவி.எம். தயாரிப்பில் பயன்படுத்தப் பட்ட ஒவ்வொரு பொருளையும் ஏவி.மெய்யப்பனும் அவருடைய வாரிசுகளும் தொடக்கம் முதலே பாதுகாத்து வந்துள் ளனர். அந்தக் காலத்தில் எப்படிப் படம் எடுத்தார்கள், என்னென்ன கருவிகளைப் பயன்படுத்தினார்கள் என்பது இந்தத் தலைமுறையினருக்குத் தெரியாது. அதைத் தெரிவிக்கும் விதமாகவே ஏவி.எம். நிறுவனம் இந்த அருங்காட்சியகத்தை அமைத்துள்ளது. அந்தக் காலத் துக் கருவிகள் தொடங்கி இந்தக் காலத்துக் கருவிகள் வரை ஓரிடத்தில் காட்சிப்படுத்துவது, சவாலானது. அதை ஏவி.எம். சாதித்திருக்கிறது.
இந்த ஹெரிடேஜ் மியூசியத் தைப் பார்க்க வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாள்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. பெரியவர்களுக்கு ரூ.200, சிறியவர்களுக்கு ரூ.50 எனக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
- karthikeyan.d@hindutamil.co.in