சி(ரி)த்ராலயா 20: மன்னிப்புக் கேட்ட மகா கலைஞன்!

சி(ரி)த்ராலயா 20: மன்னிப்புக் கேட்ட மகா கலைஞன்!
Updated on
3 min read

இந்திப் படவுலகில், ‘தில் ஏக் மந்திர்’ படத்தின் வெற்றி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தன்னைத் தேடி வந்த இந்திப் பட வாய்ப்புகளை ஸ்ரீதர் மறுத்தார். அத்தனைபெரிய வெற்றிக்குப் பின்னர் பரபரப்பு காட்டாமல் ஸ்ரீதரும் கோபுவும் நாடகங்களைப் பார்த்து அமைதியாகப் பொழுதைப் போக்கி வந்தார்கள். ஒருநாள் எஸ்.வி.சகஸ்ரநாமத்தின் சேவா ஸ்டேஜ் நாடகக்குழு நடத்திவந்த நாடகம் ஒன்றைக் காணச் சென்றிருந்தனர்.

‘மணிக்கொடி’ இதழ் எழுத்தாளர்களில் ஒருவரான பி.எஸ்.ராமையா எழுதியிருந்த அந்த நாடகத்தின் கதை ஸ்ரீதருக்கு மிகவும் பிடித்துப்போனது. நாடகம் முடிந்ததும் சகஸ்ரநாமத்தைச் சந்தித்த ஸ்ரீதர், அதைத் திரைப்படமாக்கும் உரிமையைக் கேட்டார். உடனே இசைவு தெரிவித்ததோடு, அதற்கான ஏற்பாடுகளையும் செய்து தந்தார் சகஸ்ரநாமம். அந்தப் படம்தான் ‘போலீஸ்காரன் மகள்’.

சகஸ்ரநாமம், விஜயகுமாரி, முத்துராமன், பாலாஜி, சந்திரபாபு, மனோரமா, நாகேஷ் எனப் பெரிய நட்சத்திரக் கூட்டம். சொந்த மகனான முத்துராமனையே கைதுசெய்து காவல் நிலையத்துக்கு அழைத்துவரும் காவலராக சகஸ்ரநாமம் நடித்தார். விஜயகுமாரிதான் அந்த நேர்மையான போலீஸ்காரரின் மகள். ‘இந்த மன்றத்தில் ஓடிவரும், இளம் தென்றலை கேட்கின்றேன், உட்படப் படத்தில் இடம்பெற்ற அத்தனை பாடல்களும் வரவேற்பைப் பெற்றன.

கவிஞர் கண்ணதாசன், ‘கண்ணிலே நீர் எதற்கு...காலமெல்லாம் அழுவதற்கு’ என்றப் பாடலை பத்தே நிமிடங்களில் எழுதி முடிக்க, எம்.எஸ்.விஸ்வநாதன் அதற்கு மெட்டமைத்தார், ராமமூர்த்தி அந்தப் பாடலுக்கு இசைக்கோவை அமைத்தார். சந்திரபாபு சென்னைவாசிகளே வியக்கும் வண்ணம் சென்னை வட்டார வழக்கில் பேசி ரசிகர்களைக் கவர்ந்தார். அதற்காகவே சந்திரபாபுவுக்கு திரையரங்கில் ஸ்பெஷல் அப்ளாஸ்கள் கிடைத்தன. சந்திரபாபு – மனோரமா ஜோடிக்கான வசனங்கள் அனைத்தையும் சென்னை வட்டார வழக்கில் எழுதியிருந்தார் கோபு.

சந்திரபாபு சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட இருந்த முதல்நாள், நகைச்சுவை காட்சிகளை கோபு படித்துக் காட்டியவுடன் அவரையே வெறித்துப் பார்த்த சந்திரபாபு, “கோபு, ஒங்க வூடு எந்த ஏரியாவாண்டே இருக்கு?'' என்று மெட்ராஸ் பாஷையில் கேட்டார். “திர்லகேணி வாத்தியாரே!'' கோபு மெட்ராஸ் பாஷையிலேயே பதிலடி கொடுக்க, சந்திரபாபு சிரித்துவிட்டார்.'' ஆங்ங்…அதான பார்த்தேன்… பேட்டை பாஷை அப்படியே நொம்பி ஊத்துது.! மதராஸ் பாஷை பிறந்ததே. ஜார்ஜ் டவுன், திர்லகேணி, மைலாப்பூர் ரிக்‌ஷா ஸ்டாண்டுலதான் அது தெரியுமா வாத்தியாரே உனக்கு?'' என்று கேட்டார் சந்திரபாபு.

ஆமோதித்த கோபுவுக்கு மதராஸ் பாஷையில் நாட்டம் பிறந்ததே என்.எஸ்.கிருஷ்ணனால்தான். ”மதராஸ்ல ரிக்‌ஷாகாரங்களுக்குனு தனியா ஒரு பாஷை உண்டு. ஒருத்தன் கேட்பான். “இன்னா நைனா… நேத்து உன்னே காணும்.? என்று. அதற்கு ''உடம்பு பேஜார் பிடிச்சுப் போச்சு வாத்தியாரே! ஜல்பு புடிச்சுகிச்சு.!'' என்பார். அதாவது ஜலதோஷம் பிடித்திருப்பதை ஜல்பு என்று சொல்லுவார்கள்!'' என்று என்.எஸ்.கே தனது கிந்தனார் காலாட்சேபத்தில் நகைச்சுவையாகக் கூறுவார்.

கோபு எதிர்பார்த்தபடியே சந்திரபாபு அருமையாக சென்னை வட்டார வழக்கில் பேசி நடித்தார். ஆனால் நிஜவாழ்வில் பிரிட்டிஷ் உச்சரிப்புடன் நுனி நாக்கு ஆங்கிலம் பேசுவதில் தேர்ந்தவர். மிகச்சிறந்த நடனக்கலைஞர். திரை உலகத்துக்கே உரித்தான ‘அண்ணே’ என்று உறவு கொண்டாடி அழைப்பதெல்லாம் அவருக்குப் பிடிக்காது. பெரிய நடிகர்கள் என்றாலும் பெயர் சொல்லித்தான் அழைப்பார். எம்.எஸ்.விஸ்வநாதன், சந்திரபாபு, கோபு ஆகிய மூவரிடையே நெருக்கமான நட்பை உருவாக்கியது அவர்களிடம் இருந்த இசை சார்ந்த திறமையும் ரசனையும்.

‘போலீஸ்காரன் மகளில்’ இடம்பெற்ற ‘பொறந்தாலும் ஆம்பிளையா பொறக்க கூடாது’ பாட்டை மிகவும் அற்புதமாக அனுபவித்துப் பாடினார் சந்திரபாபு. நடிப்பின் நடுவே அங்க சேஷ்டைகளை செய்வது போல், பாட்டின் நடுவேயும் குரைப்பது, குழைவது என சந்திரபாபு தனது ‘எக்ஸ்ட்ரா’க்களைக் கொடுக்க எம்.எஸ்.வி அனுமதிப்பார். அவர்கள் இருவரிடையே அப்படி ஒரு நெருக்கம். அவர் நடித்திருந்த சில பாத்திரங்களை வேறு யாராலும் ஏற்று நடித்திருக்கவே முடியாது. அவ்வளவு உன்னதமானக் கலைஞன். இருப்பினும் தனிப்பட்ட வாழ்க்கை அடுத்த கட்ட உயரத்தைத் தொட அவரை அனுமதிக்கவில்லை.

‘போலீஸ்காரன் மகள்’ படப்பிடிப்பில் சுவையான அனுபவங்கள் உண்டு. சகஸ்ரநாமத்திடம் நடிப்பு சார்ந்து ஒரு பழக்கம். நடிக்கும் கதாபாத்திரமாகவே மாறிவிடுவார். ஒரு குறிப்பிட்ட காட்சியில், மகள் விஜயகுமாரியை பெல்டினால் விளாசுவது போன்று காட்சி. விஜயகுமாரி அற்புதமாக முகபாவங்களைக் கொடுத்து நடித்திருந்தார். ஸ்ரீதர் மிகவும் உற்சாகமாகிவிட்டார்.

“கோபு! விஜயகுமாரி என்னமா ஆக்ட் பண்ணிட்டாங்க! சகஸ்ரநாமத்துகிட்ட பெல்டால் அடிவாங்கற காட்சியில் பிச்சு உதறிட்டாங்க!'' என்றார். “பிச்சு உதறினது விஜயகுமாரி இல்லே ஸ்ரீ… சகஸ்ரநாமம்தான்! அவர் நிஜமாவே விஜயகுமாரியை பெல்டால் அடிச்சுட்டாரு. பாவம், அவங்க பொறுத்துகிட்டு நடிச்சாங்க'' என்று கோபு சொன்னதும்தான் அருகில் நின்றிருந்த சகஸ்ரநாமத்துக்கே தாம் உணர்ச்சிவசப்பட்டு நிஜமாகவே அடித்துவிட்டதை உணர்ந்தார். அதற்காக விஜயகுமாரியிடம் மன்னிப்பு கேட்டார் அந்த மகா கலைஞர். ‘போலீஸ்காரன் மகள்’ படமும் ஸ்ரீதருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தந்தது.

அலறிய ஸ்ரீதர்

‘போலீஸ்காரன் மகள்’ வெற்றிக்குப் பிறகு ஸ்ரீதர் ஒருநாள் திருவல்லிக்கேணியில் இருந்த கோபுவின் வீட்டுக்கு வந்தார். அவரை அழைத்துக்கொண்டு கடற்கரை ஐ.ஜி அலுவலகம் எதிரில் காந்தி பீச்சுக்கு போனார். சிலகாலமாகவே கோபுவின் மனதில் ஒரு ஆசை. அதை ஸ்ரீதரிடம் சொல்வதற்கு அதுவே நல்ல தருணம் என்று ஸ்ரீதரிடம் அதைக் கேட்டார்.

“ஸ்ரீ… நாம் ஏன் ஒரு முழுநீள நகைச்சுவை படத்தை எடுக்கக்கூடாது.'' என்று கோபு கேட்டதும் ஸ்ரீதர் பதறிப் போனார். '' ஜோக் அடிக்காதே கோபு! ‘கல்யாண பரிசு’, ‘நெஞ்சில் ஒரு ஆலயம்’ போல கனமான படங்களைக் கொடுத்துட்டு நான் போய் நகைச்சுவை படம் எடுக்கிறதாவது, நோ சான்ஸ்!'' என்றார்.

“நீதானே என்கிட்டே சொன்னே… வாழ்க்கைன்னா ரிஸ்க் எடுக்கணும்னு! அதை நம்பித்தானே நானே கல்யாணம் பண்ணிக்கிட்டேன். இந்த ரிஸ்க்கையும் எடுத்து பாரேன்!'' கோபு சொல்லச் சொல்ல, ஸ்ரீதர் பரிசீலிக்கும் தொனியில் சிந்தனையை ஓடவிட்டவர், “சரி.. முயன்று பாப்போம்” என்ற படி ஸ்ரீதரும் கோபுவும் நகைச்சுவை கதை ஒன்றை அங்கேயே அப்போதே அலைகளுக்கு அருகில் அமர்ந்து விவாதிக்கத் தொடங்கினார்கள். அவர்களின் விவாதத்தில் முழுநீள நகைச்சுவை திரைப்படம் என்ற வகையில் ஒரு பெரிய திருப்புமுனைக்கு அஸ்திவாரமாக அமைந்த திரைப்படத்துக்கான திரைக்கதை பிறந்தது. அந்தப் படம்தான், இன்றுவரை ரசிகர்களின் மனதை விட்டு அகலாமல் இருக்கும் ‘காதலிக்க நேரமில்லை’.

சிரிப்பு தொடரும்
தொடர்புக்கு: tanthehindu@gmail.com
படங்கள் உதவி: ஞானம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in