

‘ஒரே படம் ஓஹோன்னு வாழ்க்கை’ என ‘த்ருஷ்யம்’ புகழ் இயக்குநர் ஜீத்து ஜோசப்பைப் பார்த்துக் கூறலாம். மனிதர் தற்போது பாலிவுட்டில் செம பிஸி. இம்ரான் ஹாஸ்மி, ரிஷி கபூர் நடிக்க புதிய இந்திப் படமொன்றை இயக்குகிறார். இது 2012-ல் வெளியான ‘தி பாடி’ என்ற ஸ்பானிஷ் படத்தின் மறுஆக்கம். ‘பரதேசி’ படப்புகழ் வேதிகாவும் இப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகம் ஆகிறார்.
மோகன்லாலின் மகன் பிரணைவ்வை அறிமுகப்படுத்தி ஜீத்து கடைசியாக இயக்கிய ‘ஆதி’ மலையாளப் படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்க, அடுத்து மற்றொரு வாரிசு நடிகரான காளிதாஸ் ஜெயராமனுக்கான படத்தையும் தொடங்கிவிட்டார்.
இந்தப் படத்தின் அறிவிப்புக்கு நடுவே ‘தி பாடி’ படத்தின் ‘வொர்க்கிங் ஸ்டில்களை’ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுப் பரபரப்பு கிளப்பியிருக்கிறார் ஜீத்து.
அம்மாவின் அறிவுரை!
மறைந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் ‘தடக்’ படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகவுள்ளார். கரண் ஜோஹர் இயக்கத்தில் ஜூலை 10-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தில் ஜான்விக்கு ஜோடியாக ஷாகித் கபூரின் சகோதரர் இஷான் கட்டார் நடித்திருக்கிறார்.
படத்தின் முதல் 25 நிமிட காட்சிகளை முன்பே பார்த்திருந்த ஸ்ரீதேவி, என்ன சொன்னார் என்பதை அறிய, கரண் ஜோஹர் ஆவலாக இருந்தார். ஆனால் ஸ்ரீதேவி என்ன கூறினார் என்பதை தற்போதுதான் கூறியிருக்கிறார் ஜான்வி.
தொழில்நுட்ப ரீதியாகப் படத்தை அணுகிய ஸ்ரீதேவி, “மேக்-அப் விஷயங்களில் இன்னும் உன்னை மேம்படுத்திக்கொள்ள வேண்டும், முகத்தை மறைப்பதுபோன்ற ஆடைகளை அணியாதே” என்று கூறியதாக ஜான்வி தெரிவித்திருக்கிறார்.
மூன்றாவது ‘ரேஸ்’
பாலிவுட் இரட்டை இயக்குநர்களான அப்பாஸ் – முஸ்தான் இயக்கத்தில் ‘ரேஸ்’(2008), ‘ரேஸ் 2’(2013) என இதுவரை இரு படங்கள் வெளிவந்திருக்கின்றன. தற்போது ‘ரேஸ் 3’ படத்தை ரெமோ டி’சூசா இயக்கியிருக்கிறார்.
சல்மான் கான், அனில் கபூர், பாபி தியோல், ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ், டெய்ஸி ஷா, சாகிப் சலீம், ஃப்ரெடி தருவாலா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் கலக்கியிருக்கும் ‘ரேஸ் 3’-யின் முக்கிய சண்டைக்காட்சிகள் அபுதாபி, தாய்லாந்து, மும்பை ஆகிய இடங்களில் பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டுள்ளன. ‘ரேஸ் 3’ ட்ரைலரையும் ரசிகர்கள் கொண்டாடியிருக்கிறார்கள்.
தொகுப்பு: சு. அருண் பிரசாத்