

வணிகச் சட்டகத்துக்குள் இருந்தாலும் இயக்குநர் சுசீந்திரன் படைக்கும் கதாபாத்திரங்கள், தமிழ் வாழ்க்கையை விட்டு விலகி நிற்காதவை. ஒவ்வொரு படத்திலும் சமூகத்துக்கு ஓர் அழுத்தமான செய்தியைப் பொதிந்து வைக்கும் இவர், காதலை அதன் இயல்போடு சித்தரிப்பவர். இம்முறை, ‘2K லவ் ஸ்டோரி’ என்கிற ஒரு முழுநீளக் காதல் கதையுடன் வந்திருக்கிறார். ஜெகவீர் நாயகனாக அறிமுகமாகும் அப்படம் குறித்து இயக்குநருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:
10 வருடங்களுக்கு முன் ‘ஆதலால் காதல் செய்வீர்’ - இப்போது ‘2K லவ் ஸ்டோரி’ என்ன வேறுபாடு? - இரண்டுமே புத்தாயிரத் தலைமுறையின் இன்றைய காதலில் இருக்கும் நடைமுறைச் சிக்கலைப் பேசும் படங்கள்தான். முன்னதில் காதல் தன் எல்லையைக் கடக்கும் போது அது, வயதுக்கு மீறிய சுமையாகிவிடுவதைச் சித்தரித்தேன்.
இது முற்றிலும் ஒரு ஜாலியான நண்பர் கூட்டத்தில் முகிழ்க்கும் ஒரு காதல் கதை. ஆனால், அதில் சமூக அக்கறையுடன் ஒரு விஷயம் உள்ளே இருக்கிறது. இந்தப் படத்துக்கான காட்சிகள், வசனம் ஆகியவற்றை, இன்றைய இளைஞர் களிடம் இருந்தே பெற்றிருக்கிறேன். அந்த வகை யில் எனது படங்களில் இது தனித்து நிற்கும்.
என்ன கதை, எங்கே நடக்கிறது? - கதை கோவையில் நடக்கிறது. அங்கிருக்கும் இளைஞர்கள் கிட்டத்தட்ட, பெங்களூரூவுக்கு இணையான ஒரு ‘லைஃப் ஸ்டை’லை வாழ்கிறார்கள். அது இந்தப் படத்தில் இருக்கும். புத்தாயிரத்தில் பிறந்தவர்களைத் தவறான கண்ணோட்டத்தில் கிண்டல் செய்வதல்ல இந்தப் படம். அவர்களின் வலிமையை, முதிர்ச்சியைக் காட்ட வரும் படம். உண்மையில் அவர்களின் அறிவு பலமும், மனமுதிர்ச்சியும் வேற லெவல்.
இந்தக் கதையில், விஷுவல் கம்யூனிகேஷன் படித்து முடித்த நண்பர்கள் குழு, ஒரு ‘ப்ரீவெட்டிங் போட்டோ ஷூட்’ நடத்தும் நிறுவனத்தைத் தொடங்குகிறார்கள். சில தினங்களில் திருமணம் செய்துகொள்ளவிருக்கும் நாயகன் - நாயகி இருவரையும் போட்டோ ஷூட் செய்யக் கிளம்புகிறார்கள். அங்கே அந்த இருவரது காதல் கதையும் திரைக்கதையில் எப்படி வெளிப்படுகிறது, போட்டோ ஷூட்டுக்குப் பிறகு திருமணம் நடந்ததா, இல்லையா என்பது கதை.
ஹீரோயினாக மீனாட்சி கோவிந்தராஜன் நடித்திருக்கிறார். போட்டோ ஷூட்டை டைரக்ட் செய்பவராக பால சரவணன் வருகிறார். எப்போதும் 90’ஸ் மனநிலையில் இருக்கும் அவருடைய உதவி இயக்குநராக ஆண்டனி பாக்யராஜ் வருகிறார். இவர்களுடன் வினோதினி, பிரபாகரன், ஜெயப்பிரகாஷ் எனப் பெரிய நடிகர்கள் பட்டாளமே நடித்திருக்கிறது. 38 நாள்களில் ஒரே கட்டமாகப் படப்பிடிப்பை முடித்துவிட்டோம்.
இமானுடன் தொடர்ந்து பயணிக்க என்ன காரணம்? - என்றும் இளமையாக இருக்கும் அவரது இசைதான் காரணம். இது நாங்கள் இருவரும் சேர்ந்து பணிபுரியும் 9வது படம். ‘கிராமத்துக் கதைக் களங்களுக்குத்தான் ஹிட் கொடுப்பீர்கள் என்கிற எண்ணத்தைச் சிட்டியில் பிறந்து வளர்ந்த நீங்கள் இந்தப் படத்தின் மூலம் மாற்றிக் காட்ட வேண்டும்’ என்றேன். இது இமானின் இசைதானா என ஆச்சர்யப்படும்விதமாக முற்றிலும் நவீன இசையை, தனது தனித்துவத்தை விட்டுவிடாமல் கொடுத்திருக்கிறார்.