

“ஈராக்கில், மரணமும் வன்முறையும் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டன. உலகின் மிக ஆபத்தான நகரத்தில் வசிக்கும் ஹமூதி என்கிற சிறுவனைப் பற்றி ஒரு திரைப்படத்தை உருவாக்கினேன், ஆனால் தன்னைச் சூழ்ந்திருக்கும் ஆபத்தை உணராத அளவுக்கு, ஒரு கால்பந்தாட்ட வீரனாக வரவேண்டும் என்கிற பெரிய கனவில் இருப்பவன் அவன்.” என சகிம் ஒமர் கலிஃபா, 2023-இல் தாம் இயக்கிய ‘பாக்தாத் மெஸ்ஸி’ (Baghdad Messi) படத்தின் மையக் கதாபாத்திரம் குறித்துக் கூறுகிறார்.
படத்தின் தொடக்கக் காட்சியில், பாக்தாத் நகரின் வீதியொன்றில் ஹமூதி சக நண்பர்களோடு கால்பந்து விளையாடிக்கொண்டிருக்கிறான். அந்தக் குழுவின் அணித்தலைவர் அவன். ஒருநாள் அவனுடைய முன்னு தாரண நாயகனான அர்ஜென்டினா கால்பந்து விளையாட்டு வீரர் லயனெல் மெஸ்ஸியைப் போல் புகழ்பெற்ற ஆட்டக் காரனாக வரவேண்டும் என்பது அவனது இலக்கு. மெஸ்ஸியின் மீது அவன் கொண்டிருக்கும் அளவு கடந்த நேசத்தை முன்னிட்டு நண்பர் குழு அவனுக்கு ‘பாக்தாத் மெஸ்ஸி’ என்கிற பட்டப்பெயரை வைத்திருக்கிறது.
விளையாட்டின் நடுவே, அவ் விடத்தின் அருகேயுள்ள அமெரிக்க ஒருங்கிணைந்த பாதுகாப்பு அலுவலகத்தின் மீது எதிர் அணியினரின் திடீர் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்துகிறார்கள். அந்த அலுவலகத்தில் மொழி பெயர்ப்பாளராகப் பணிபுரியும் ஹமூதியின் தந்தை ஹாதிம் அந்தத் தாக்குதலின்போது அங்குதான் இருக்கிறார். மகன் அலுவலகத்தின் அருகில் விளையாடிக்கொண்டி ருந்தது நினைவுக்கு வர, ஹமூதியைக் காப்பாற்ற வெளியே விரைகிறார். வெடிகுண்டுத் தாக்குதலில் எழுந்த புழுதியடங்கியபின் ஹமூதி தரையில் கிடப்பதைப் பார்க்கிறார். அவனது இடது முழங்காலுக்குக் கீழே கால் துண்டிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கொடிய தாக்குதலில் சிறுவர்களோடு சேர்ந்து பலர் இறந்துவிடுகின்றனர்.
மரத்துப் போன உணர்ச்சி!: மகன் சிகிச்சைபெறும் மருத்துவ மனைக்கு ஓடி வரும் ஹமூதியின் தாய் சல்வா, அவன் ஒரு காலை இழந்துவிட்டதைப் பார்த்து அதிர்ச்சியடைகிறார். அருகில் அழுகை யோலத்துடன் ஒரு பெண்மணி கூறுவாள், “என் மகன் இறந்தேபோய் விட்டான். நீயோ அதிர்ஷ்டசாலி, உன் மகன் உயிரோடு இருக்கிறான்.” அவளது கூற்றைவிட, அடுத்து வரும் காட்சி நம்மை அதிரச் செய்யும். மயக்கத்திலிருந்து விழித்தெழும் ஹமூதி, அருகிலிருக்கும் தன்னுடைய பெற்றோரிடம் கேட்பான்: “எங்கே என்னு டைய கால்?” அவன் அதிர்ச்சி யாவதோ, அழுவதோ இல்லை.
வெகு இயல்பான தொனியில் கேட்கிறான். பெற்றோர் பேச்சற்று அவனைப் பார்க்கிறார்கள். பொதுவாக, நாம் எதிர்பார்க்கும் உணர்ச்சிக் கூறுகள் இக்காட்சியில் ஏன் இடம்பெறவில்லை எனத் தோன்றும். பல ஆண்டுகளாகத் தொடரும் யுத்தத்தில் உயிரிழப்போ, உறுப்பிழப்போ அங்கு வாழும் குடிமக்கள் கேட்டும் கண்டும் அனுபவித்தும் பழகிப்போயிருக்கிறது என்கிற உண்மை சில விநாடிகள் கழிந்த பின்புதான் நமது சிந்தனைக்கு உரைக்கிறது.
ஹாதிம், அமெரிக்கக் கூட்டணிப் படையோடு பணிசெய்வதால், ‘துரோகி’ எனவும் ‘காட்டிக் கொடுப்ப வன்’ எனவும் சுற்றியிருப்பவர்கள் அவரை இகழ்கிறார்கள். ஹமூதியை அழைத்துவந்த அன்றிரவே, அவரது இல்லத்தின்மீது கையெறி குண்டுத் தாக்குதலை ஒரு கும்பல் நடத்துகிறது. உயிருக்குப் பாதுகாப்பற்ற நிலையில், அங்கிருந்து ஒரு கிராமத்துக்கு அவர்கள் இடம்பெயர்கிறார்கள். அங்கு மீன் விற்கும் தொழிலைச் செய்கிறார்
ஹாதிம். ஹமூதி அங்குக் கால்பந்து விளையாடும் சிறுவர்களோடு நட்பைப் பேண விரும்புகிறான். ஆனால் காலை இழந்த அவனை அவர்கள் கேலி செய்கிறார்கள். தனது வீட்டிலிருக்கும் தொலைக்காட்சிப் பெட்டியில், கால்பந்தாட்ட ஒளிபரப்பைக் காண அனுமதிப்பதன்மூலம், அங்குள்ள சிறு வர்களின் நட்பைப் பெற்றுவிடுகிறான் ஹமூதி. விதி வலியது என்பது உறுதிப்படுவதுபோல, தொலைக் காட்சிப் பெட்டி பழுதாகிவிட, இப்போது நட்பில் மீண்டும் விரிசல்.
சிதறிக் கிடக்கும் வாழ்க்கை: இப்போது பெட்டியைப் பழுது பார்க்க வேண்டுமென்றால், போதுமான பணம் வேண்டும். இதன் பின்னணியில், சில காதத் தூரத்தில் உள்ள நிலத்தில் சிதறிக் கிடக்கும் ஆயுதங்கள் குறித்த தகவல் வரைபடத்தைத் தனது தந்தைக்குத் தெரியாமல் கையகப்படுத்தி, சக நண்பர்களுடன் பயணப்படுகிறான் ஹமூதி.
அங்கே, தடைசெய்யப்பட்ட மணற்பரப்பினூடாக அழுகிக் காய்ந்த சடலங்கள் சிதறியிருக்கின்றன. அனைத்துச் சடலங்களிலும் அவர்கள் உயிரோடிருந்தபோது ஏந்தியிருந்த பழுதுபட்ட துப்பாக்கிகள். அந்த நிலப்பரப்புக்குள் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருப்பதால் சடலங்களையும், துப்பாக்கிகளையும் அப்படியே விட்டிருக்கி றார்கள்.
ஒரு சிறுவன் கற்களை எடுத்து உள்ளே வீசுகிறான். ஒரு கல் பட்டு குண்டி வெடித்துச் சிதறுகிறது. அவர்க ளோடு சேர்ந்து நமக்கும் பதற்றம் தொற்றிக்கொள்கிறது. இப்போது சற்று தள்ளிக் கிடக்கும் ஒரு சடலத்திடம் இருக்கும் துப்பாக்கியை எடுத்துவர வேண்டும். மற்ற சிறுவர்கள் பின்வாங்க, ஹமூதி துணிகிறான். பாதுகாப்புக் குறிகளாக வைக்கப்பட்டி ருக்கும் கற்களின்மீது கால் வைத்து நடந்து, துப்பாக்கியை எடுத்தும் விடுகிறான். திரும்பி வரும் போது, தவறான கல்லில் காலை வைத்துவிட, அச்சத்தில் உறைந்து நிற்கிறான்.
நண்பர்கள் உடனடியாக ஒரு யோசனை செய்கிறார்கள். ஹமூதி நிற்பதற்கு முன்புறமாக அவன் சாய்ந்து விழும் அளவுக்கு ஒரு குழியைத் தோண்டுகிறார்கள். அதில் அவனைக் குதிக்கச் சொல்ல, ஹமூதி குதிக்கிறான். நினைத்த மாதிரியே புதைக்கப்பட்டிருந்த குண்டு வெடிக்கிறது. அந்தப் பள்ளம் அவனைக் காப்பாற்றி விடுகிறது. இந்த துப்பாக்கியெடுப்பு காட்சிகள் முழுக்க நமது பார்வையைச் சிறிதும் அசையவிடாமல் மனப் பதற்றத்தோடு காணும்விதமாக எடுக்கப்பட்டிருக்கின்றன.
துயர சாட்சி: தொலைக்காட்சிப் பெட்டியை பாக்தாத் நகரத்துக்குச் சென்றுதான் பழுது நீக்க முடியும். ஹாதிமும் ஹமூதியும் பயணப்படுகிறார்கள். சரிசெய்துவிட்டுத் திரும்பும் வழியில் ஹாதிமை ஒரு கும்பல் சுடுகிறது. சுவரோரம் சாய்கிறார். ஹமூதி சோக வடிவாக அப்பாவின் அருகே அமர, அவர் இயல்பான தொனியுடன் பேசு கிறார். “தொலைக்காட்சிப் பெட்டியை எடுத்துக்கொண்டு வீட்டுக்குப் போ, மெஸ்ஸி பங்கேற்கும் கால்பந்தாட்டப் போட்டியை நண்பர்களுடன் சேர்ந்து பார்.
நான் பின்னர் வருகிறேன்” கூறுகிறார். ஆனால், ஹமுதி மறுக்கிறான். “போரால் தோள்களை இழந்தவர்கள் இருக்கி றார்கள். ஆனால் அவர்கள் தங்களது கால்களால் வயலினை வாசிக்கமுடியும். அதைப் போல், நீயும் ஒரு காலால் கால்பந்து விளையாடமுடியும்.” என்று ஹமூதி சோர்வுறும்போதெல்லாம் அவனுக்கு ஊக்கமளித்த அவர் மயக்கமுறுவதற்கு முன்னும் அதே உற்சாகத்தை கடைப்பிடிக்கிறார்.
ஹமூதி வீடு திரும்பி அன்றிரவு நண்பர்களுடன் கால்பந்தாட்ட விளையாட்டைப் பார்க்கிறான். சஞ்சலத்தோடு ‘அப்பா எங்கே?’ என்று அம்மா கேட்கிறாள். ‘அவரை தன்னால் தூக்கிவர முடியவில்லை, நாம் போய் அவரை வாகனத்தில் கூட்டிவரலாம்’ என்றும் பதிலளிக்கிறான். சல்வா கேவி அழ படம் முடிவடைகிறது. இக்காட்சி, ஹாதிம் உயிரோடு இருக்கிறாரா, இல்லையா என்பதை அறுதியிட்டுச் சொல்லவில்லை. ஆனாலும் ஹமூதி யின் முக பாவனையின் வழி, அவர் உயிரோடு திரும்புவார் என்றே நாம் எண்ணுகிறோம்.
இப்படத்தில், ஹமூதியாக நடித்த சிறுவன், போரின் காரணமாக, நிஜ வாழ்வில் தனது நான்கு வயதில் இடது காலை இழந்தவன். ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தினரைக் குறிவைத்து மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதலில் சிக்கிய துயரம் அவனுடையது. பொது வாக, ‘கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக் கிறார்’ என்று நாம் நடிகர்களைப் பெரு மையாகக் குறிப்பிடுவோம். ஆனால், ‘கதாபாத்திரமாகவே இருந்திருக்கி றான்’ என்று கூற ஒரு துயரச் சாட்சியாக நிலைக்கிறான் அகமது முகமது என்கிற அந்த ஈராக்கியச் சிறுவன்.
- viswamithran@gmail.com