

இத்தாலிய திரைமேதை விட்டோரியா டிசிகா இயக்கிய ‘சைக்கிள் திருடர்கள்’ (Bicycle Thieves), அதி-யதார்த்த சினிமாவிற்கு மட்டுமே புகழ்பெற்றதல்ல. எளிமையும் மிகுந்த சுவாரசியமும் உள்ளடங்கிய கதையம்சத்திலும் அது ஓர் ஒப்பிடவியலாத படைப்பு. தந்தையின் சைக்கிள் திருடுபோக அதைத் தேடி அவருடன் அலையும் சிறுவனின் அகவுலகின் வழி இரண்டாம் உலகப் போருக்குப் பின்னான இத்தாலிய வறுமைச் சூழலை அசலாகப் படம்பிடித்துக் காட்டிய படம் அது.
அப்படத்தின் கலை வீர்யமே இந்தியாவில் சத்யஜித் ரேயின் ‘சாலையின் பாடல்’ (Pather Panchali), ஈரானில் அப்பாஸ் கியாரோஸ்தமியின் ‘எங்கேயிருக்கிறது நண்பனின் வீடு?’ (Where is the Friend’s House) என உலகெங்கும் பல இயக்குநர்களின் திரைப்போக்கை வடிவமைத்தது.
இரண்டு படங்களுமே தத்தமது மண்ணில் வித்திட்ட புனைவுகள் ஏராளம். அப்பாஸ் கியாரோஸ்தமி ஈரானைக் கடந்து மேலதிகமாக அரபு சினிமாவிலும் ஆப்பிரிக்க சினிமாவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார். மொராக்கோ நாட்டிலிருந்து அப்படியோர் எளிய, சுவாரசியம் மிக்க திரைப்படமான ‘அறியப்படாத புனிதர்’ (The Unknown Saint) 2019இல் வெளிவந்தது. அவ்வருடத்திற்கான ஆஸ்கர் விருதுக்கான போட்டிப் பிரிவிலும் பங்கேற்றது.
‘அறியப்படாத புனிதர்’ எளிய கதை யமைப்பிலும், கூடுதலாக சிக்கன சினிமாவின் (Minimalist Cinema) வழித் தோன்றலாகவும் வந்து உலகளாவிய பார்வையாளர்களது கவனத்தை ஈர்த்தது. திரைப்படத்தின் அகம் மற்றும் புற வேலைப்பாடுகளில் சிக்கன முறை மையைக் கடைபிடித்த பல முன் னோடிகள் உள்ளனர்.
ஜப்பானிய திரை மேதை யசுஜிரோ ஒசுவினது எளிய கதையாடலின் வழியான அன்பார்ந்த படங்களிலிருந்து பெற்ற தாக்கத்துடன் குறைந்தபட்ச கதைமாந்தர்களையும், வடித்தெடுக்கப்பட்ட காட்சிச் சட்டகங் களையும் ஃபின்லாந்து திரைமேதை அக்கி கவ்ரிஸ்மேக்கி தனது படங்களில் மேவினார்.
இவரது படங்களில் கதை மாந்தர்கள் பேச்சற்றுப்போன, உணர்ச்சி மரத்த நிலைக்கு உள்ளாகிவிட்ட மன இறுக்கத்துடன் உலாவுகிறவர்கள். வாழ்வின் மீதான நம்பிக்கை முற்றிலுமாகச் சிதையும் தருணத்தின் அக வெளிப்பாடு இது. நம்மை கவர்ந்திழுத்த சுற்றத்தாரின் மரணச் சம்பவங்களில் நாம் இந்த அக வெளிப்பாட்டை உணர்ந்திருப்போம். இவ் விதமான உணர்ச்சி மரத்த நிலையுடன் அலைபடும் மாந்தர்கள் குறித்த போர்க் கால சித்திரங்களைக் காத்திரமாக உருவாக்கியதில் பாலஸ்தீன திரைமேதை எலியா சுலைமானுக்குப் பாரிய பங்குண்டு.
அக்கி கவ்ரிஸ்மேக்கியின் அடி யொற்றி வரும் ‘அறியப்படாத புனிதர்’ படத்தின் கதை, திருடனொருவன் கிராமம் ஒன்றிற்கு வந்து தான் திருடிய பணக்கட்டுகள் அடங்கிய பையைச் சிறு மலைக்குன்று ஒன்றின் உச்சியில் புதைக்கும் காட்சியோடு தொடங்குகிறது. பையை அடையாளம் காண்பதற்காக அதன்மேல் ஒரு வடிவான கல்லையும் நட்டுவிடுகிறான். சடுதியில் காவல்துறை அவனைக் கைதுசெய்து சிறைக்கு அனுப்புகிறது.
சில ஆண்டுகள் கடந்த சிறைவாழ்விற்குப் பிறகு, மீண்டும் அந்த கிராமத்திற்கு வருகிறான். பணப்பையை புதைத்த இடம் கல் முளைத்ததன் காரண மாக இப்போது அது ஒரு புனிதரின் சமாதியாக மாற்றமடைந்திருக்கிறது. நான்கு பக்கமும் சுவர்கள் கொண்ட அந்தச் சமாதியை உடைத்தால்தான் பணப்பையை மீட்க முடியும்.
திருடன் அந்தக் குக்கிராமத்தில் அறையெடுத்துத் தங்குகிறான். நாள்தோறும் இரவு சமாதியின் கதைவை உடைக்க முற்படுகிறான். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தடங்கல். படத்தின் உப கதைகளாக, பாலைவனத்தையொத்த அந்த நிலப்பரப்பில் மழையை வேண்டி தொழுகை செய்யும் பிராகிம் மற்றும் அந்த வெறுமையான கிராமத்திலிருந்து பொருளியல் தேடி வெளியேற விரும்பும் அவரது மகனான ஹசன் ஆகியோரது உறவுப் பிணைப்பு குறித்தும், சமாதியின் காவலனான அசீஸ், தனது வளர்ப்பு நாயின்மீது வைத்திருக்கும் உறவுப் பிணைப்பு குறித்தும் விரிகின்றன.
‘திடீரென முளைத்த அந்தச் சமாதியின் காரணமாகவே அவ்விடத்தில் மழை பெய்யாமல் பொய்த்துப் போய்விட்டது’ என பிராகிம் நம்புகிறார். அந்த ஏக்கத்திலேயே இறந்தும்போகிறார். ஹசன் கிராமத்திலிருந்து வெளியேற முற்படும்போது எதிர்பாராமல் மழைபிடிக் கிறது.
அதனைத் தந்தையின் கருணை என்று எண்ணுகிறான். பின்பு, மன அவசத்தில் சமாதியை வெடிவைத்துத் தகர்க்க, புதைக்கப்பட்டிருந்த பணப்பை அவனது கண்களுக்குப் படுகிறது. அது அவனது தந்தையின் அன்புப் பரிசு என எண்ணி, அவரைப் புதைத்த இடத்தில் ஒரு சமாதியைக் கட்டுகிறான். அதற்கு ‘புனிதர் பிராகிம் சமாதி’ எனப் பெயர் வைக்கிறான். பணத்திற்கு சொந்தக் காரனான திருடன் ஏமாற்றத்துடன் அவ்விடத்திலிருந்து அகல்கிறான்.
படத்தில் மக்கள் அறியாமையில் கொண்டிருக்கும் ஆன்மிக நம்பிக்கை விமர்சனத்திற்கு உள்ளாகிறது. பணப்பையை அடையாளம் காட்ட புதைக்கப்பட்ட கல் புனிதர் சமாதியாவதும், திருடப்பட்ட பணம் மற்றொரு புனிதர் சமாதியை உருவாக்குவதும் அவற்றின் அபத்தமாக இருத்தல் கூறுகளுடன் சொல்லப்பட்டிருக்கின்றன. உலகின் பல வழித்தடங்கள் இப்படித்தானே திசை மாறிச் சென்று வேறெங்கோ புனிதப்பட்டு நிலைத்திருக்கின்றன. மையப் பாத்திரமான பெயர் சொல்லப்படாத திருடனுக் குரிய குணவியல்பு நுட்பமாகச் சித்திரிக்கப்பட்டிருக்கிறது.
குறிப்பாக, தங்கியிருக்கும் அறைக்கு வெளியே ஹசன் ஏதேச்சையாகப் பார்க்கும்போது சாளரத்தின் பின்னே நின்றிருக்கும் திருடன் முகத்தை உள்ளே விலக்கிக்கொள்ளும் காட்சி. ஹசன் பார்ப்ப தால் அவனுக்குப் பிரச்சினையில்லை. எனினும் தன்னைப் பார்ப்பவரைத் தவிர்க்க நினைக்கும் திருடரது மனோநிலையை இக்காட்சி நுட்பமாகச் சுட்டுகிறது. திருடனுக்குத் துணையாக வரும் நண்பன் உள்பட ஏனைய கதாபாத்திரங்களும் தத்தமது உளவியல் பாவனைகளை மிகத் துல்லியமாகப் பிரதிபலித்திருக்கிறார்கள். திரைக்கதையில் உரிய நேர்த்தி தெரிகிறது.
எனினும், சமாதிக்குக் காவலாளியாக வரும் அசீஸின் கதையோட்டம் மட்டும படத்தின் கதைமையத்துடன் ஒட்டாமல் இருக்கிறது. அதுவும் கொலைவிபத்தில் சிக்கி பற்களை இழந்த நாய்க்கு தன் உடைமையை விற்று அவன் தங்கப் பற்கள் கட்டுவது யதார்த்தத்திற்குப் பொருந்தும்படியாயில்லை.
அதேபோல, சமாதிச் சுவரின் கதவை உடைக்கத் திருடன் தலைப்படும்போது, கதவிடுக்கின்வழி ஓர் இளம்பெண்ணின் ஆவி பார்ப்பதுபோல காட்டியிருப்பது உறுத்தலான இடைச்செருகல். அவன் மட்டும் ஆவியைப் பார்க்கும்விதமான கோணத்தில் இருந்தால்கூட அச்சத்தின் விளைவான ஏற்பட்ட மாயத்தோற்றம் என்று சமாதானம் கொள்ளலாம். ஆனால் பார்வையாளரான நாம் பார்க்கும் விதத்திலும் ஆவி காட்டப்படுவது பலவீன மான கலைக் கட்டுமானத்தில்தான் வரும்.
அனைத்திற்கும் மேலாக, ஐரோப்பிய சினிமாவின் தாக்கம் கலந்த சமகால மொரோக்கா சினிமாவில் மண்ணுக்குரிய எளிய தோற்றப்பாடுகளுடன் கூடிய ஒரு படமாக இதனைக் குறிக்கலாம். இந்திய சினிமாவிலும் மினிமலிஸ்ட் திரைப்படங்கள் அரிதாக வருவதுண்டு. மலையாளத்தில் சனல்குமார் சசிதரன் இயக்கிய ‘ஒழிவு தெவசத்தே களி’, தமிழில் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கிய ‘கூழாங்கல்’ அவற்றுக்கான உதாரணங்கள்.
ஒருமுறை, ஈரானிய திரைமேதை மொஹ்சன் மஹ்மல்பஃப்பிடம் நான் உரையாடிக்கொண்டிருந்தபோது, “நமது வீதிகளில் ஆயிரக்கணக்கான கதைகள் இறைந்து கிடக்கின்றன, நாம்தான் அவற்றை அடையாளம் காண வேண்டும்” என்றார். அப்படியொரு தேடலில், இயக்குநர் அலா எடின் அல்ஜம் கண்ட டைந்த கதையாக ‘அறியப்படாத புனிதர்’ படத்தை நாம் அடையாளப்படுத்தலாம்.
- viswamithran@gmail.com