

ஒரே கல்லூரியில் ஒன்றாகப் படித்திருந்தாலும், மென்மையான படங்களை இயக்கும் ராதா மோகனும் அதிரடியான கதைகளைக் கையாளும் தரணியும் வெவ்வேறு தன்மையான திரைப்படங்களையே எடுக்கிறார்கள். இப்படித்தான் பயணிக்கிறது, இன்றைய தெலுங்குத் திரையுலகமும். ஒரு பக்கம் “எவடுறா வாடு, வேசேய்ன்றா” என்று செம்மண் பறக்க, அலறும் சண்டைப் படங்கள் வெளியாகின்றன. இன்னொரு பக்கம் மெல்லிய குடும்பச் சித்திரங்களும் காதல் திரைப்படங்களும் வெளிவருகின்றன.
சாமானியனின் வாழ்வில் பிரபலம் ஒருவர் நுழைவதால் அல்லது அசாதாரணமான விஷயம் ஒன்று நடப்பதால் ஏற்படும் விளைவுகளைச் சித்தரிக்கும் சின்ட்ரெல்லா தன்மைக் கதைகளை அடிப்படையாகக் கொண்ட பல படங்கள் வந்துள்ளன. உதாரணமாக, ‘ஈ.டி’, ‘ரோமன் ஹாலிடே’, ‘மே மாதம்’, ‘நாட்டிங் ஹில்’ போன்றவற்றைச் சொல்லலாம். அந்த பிரபலம் சினிமா நட்சத்திரமாக இருந்துவிட்டால் கூடுதல் சுவாரசியம் கிடைத்துவிடும். அப்படி ஒரு எளிய, மெல்லிய காதல் நகைச்சுவைத் திரைப்படம்தான் ‘சம்மோஹனம்’ (பரவசம் என்று பொருள்).
கதையின் நாயகன் விஜய், வளர்ந்துவரும் கார்ட்டூனிஸ்ட். அவருக்குத் திரையுலகம் பிடிக்காது. தன் முதல் சித்திரப் புத்தகம் வெளிவரக் காத்திருக்கிறார். இதற்கு நேர்மாறாக, உயர்ந்த நிலையில் இருக்கும் விஜய்யின் தந்தைக்கோ சினிமாவில் நடிக்க ஆசை. அதற்காக, தன் ஆடம்பரமான வீட்டை இலவசமாக ஒரு திரைப்படப் படப்பிடிப்புக்காகத் தருகிறார். இந்தப் படப்பிடிப்பில், பிரபல வட இந்திய நடிகையான சமீரா தெலுங்கு தெரியாத பெண்ணாக நடிக்கிறார்.
ஒரு கட்டத்தில், சமீராவுக்குத் தெலுங்கு வசன உச்சரிப்பு சொல்லித் தரும் வேலை செய்கிறார் விஜய். அவர்களின் நட்பு, காதலாக மாறும் நேரத்தில், காரணம் சொல்லாமல் காதலைத் தவிர்க்கிறார் சமீரா. அதன் காரணம், அவர்களின் காதல், அந்தத் தந்தையின் திரைப்பிரவேசம், விஜய்யின் முதல் புத்தக வெளியீடு என்ன ஆகிறது என்பதே கதை.
ஒரு எழுத்தாளரின் மகனான இயக்குநர் மோகனகிருஷ்ணன் இலக்கியமும் சினிமாவும் படித்தவர். முதல் படைப்பான ‘கிரகணம்’ படத்துக்குத் தேசிய விருது பெற்றவர். இவர் இயல்பான குணங்களைக் கொண்ட விதவிதமான கதாபாத்திரங்களை எளிதாகப் படைத்திருக்கிறார். பாத்திரங்களுக்கேற்ற நகைச்சுவை கலந்த உரையாடல்களையும் கச்சிதமாக அமைத்திருக்கிறார். சாதாரண வாழ்வுக்கு ஏங்கும் நடிகை, சினிமாவின் பாசாங்குகள் பிடிக்காத ஒரு சித்திரக் கதை எழுத்தாளன், எல்லாம் இருந்தும் வாழ்வின் வெறுமையை நடிப்பால் நிரப்ப நினைக்கும் தந்தை, அதற்கு ஆதரவான குடும்பம் போன்றவை நல்ல விஷயங்கள்.
இருப்பினும், எந்த அதிர்வும் ஏற்படுத்தாத நடிகையின் முன் கதை, பலவீனமான வில்லன் போன்ற சிறிய குறைகளும் கலந்தே கதையின் சம்பவங்கள் நெய்யப்பட்டிருக்கின்றன. தந்தை வேடமேற்றிருக்கும் நரேஷ், நண்பன் வேடத்தைச் செய்திருக்கும் ராகுல் ராமகிருஷ்ணா இருவரும் நகைச்சுவைக் காட்சிகளுக்குப் பலம் சேர்த்திருக்கிறார்கள்.
முழு நிலவு தெரியும் மொட்டை மாடியில், நாயகன் தன் காதலை ஒரு நீண்ட உரையாடல் மூலமாக வெளிப்படுத்தும் சூழலும், அழகான பின்னணி இசையும் அந்தக் காட்சியை ஒரு கவிதையாக மாற்றியிருக்கிறது. சுமாரான நடிப்பில் சுதிர் பாபு சமாளித்திருக்கிறார் (இவர் மகேஷ் பாபுவின் தங்கை கணவர்). சினிமா கனவுடனான வாழ்க்கை, தெலுங்கு உச்சரிப்பு தெரியாத தவிப்பு, சின்ன ஆசைகள், நட்பின் தயக்கம், தனக்கு ஒரு குடும்பம் இல்லாத தனிமை போன்ற உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்தியிருக்கும் சமீராவாக நடித்திருக்கும் அதிதி ராவ் ஹைதரிதான் படத்தை அழகாக்கியிருக்கிறார். பாசாங்குகள் அதிகமில்லாத அம்மா ( கன்னட நடிகை பவித்ரா லோகேஷ்), தங்கை (ஹர்ஷி) என அனைத்துப் பெண் கதாபாத்திரங்களும் நேர்த்தியாகப் படைக்கப்பட்டிருந்தன.
தெலுங்குத் திரையில் வெளி மாநில நடிகைகள், நடிகர்கள் நடிப்பது, அலறும் வசனங்கள், நாவல்களுக்கு முக்கியத்துவம் குறைவது, சுத்தமான உச்சரிப்புக்கு முக்கியத்துவமில்லாதது போன்ற பல சமகால சினிமா விஷயங்களைப் பகடி செய்கிறார் இயக்குநர். பின் பகுதிகளில், சற்றே தடுமாறும் கதையோட்டம், குழப்பமான வில்லன் கதாபாத்திரம் எனச் சொதப்பினாலும் கதையின் முடிவு அழகாகக் கையாளப்பட்டிருந்தது.
விவேக் சாகரின் இனிமையான பாடல்களும் குறிப்பாக, அவரே பாடிய ‘மனசைனதேதோ’, பி.ஜி. விந்தாவின் கதைக்கேற்ற வண்ணமயமான ஒளிப்பதிவும் படத்துக்குக் கூடுதல் பலம். குறைகள் இருந்தாலும் குடும்பத்துடன் பார்க்கும்படியான ஒரு மென்மையான காதல் நகைச்சுவைப் படத்தை அளித்ததற்காக எழுத்தாளர்-இயக்குநர் மோகன் கிருஷ்ணாவைப் பாராட்டலாம்.