

கடந்த ஜூன் 2 அன்று இசைஞானி இளையராஜாவின் 75-ஆவது பிறந்தநாள். அவரது ரசிகர்கள் திகட்டத் திகட்டக் கொண்டாடினார்கள். இளையராஜாவைப் பற்றி திரை இசை சாராத சில ஆளுமைகள் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டதன் தொகுப்பு இது:
“ 1970-களின் மத்தியில் தமிழ் சினிமாவில் மெலடிகள் கிட்டத்தட்ட காணாமல் போயிருந்தன. அதை மீண்டும் கொண்டுவந்தவர் இளையராஜா. மெலடிகளில் ஒரு விதமான செறிவூட்டிய அனுபவத்தை இளையராஜா கொண்டுவந்தார். இளையராஜாவின் ஆரம்ப காலப் பாடல்களிலிருந்தே அவரது மெட்டுகளில் ஒரு ஏகாந்தம் இருந்ததை பார்க்க முடியும். ஒரு அலாதியான அத்துவான வெளி ஒன்று திறக்கும். இரண்டாவது, அவர் வாத்தியங்களைப் பயன்படுத்திய விதம். இசைக் கருவிகள் தனித் தனியாக கேட்பது மாதிரியான மெட்டுகள், இசைக் கோர்வைகளை அவர் கொண்டுவந்தார்.
பெரும்பாலும் கிராமியப் புழக்கத்தில் இருந்த தாளக் கருவிகளை திரைப் பாடல்களில் கொண்டுவந்தவர் அவர்தான். அவருடைய தாளங்கள் வித்தியாசமானவை. ‘எல்லாம் இன்பமயம்’ படத்தின் ‘ஒண்ணும் ஒண்ணும் ரெண்டுதானே’, நாடோடித் தென்றல் படத்தின் ‘யாரும் விளையாடும் தோட்டம்’ ஆகிய பாடல்களில் அவர் பயன்படுத்திய தாளங்கள் முழுக்க தமிழ் சினிமாவுக்கே வித்தியாசமானவை. தமிழ் சினிமாவில் அதுவரை புழங்கியிராத தாள அமைப்பு அந்தப் பாடல்களில் இருந்தது.
கர்னாடக,. இந்துஸ்தானி, கிராமிய மேற்கத்திய சங்கீதம் அனைத்திலும் அவருக்கு இருந்த புலமை அவரது இசையமைப்பில் தொடர்ந்து தெரிந்துகொண்டே இருந்தது. அவரது மெட்டுக்களில் அவரது தனித்துவமான முத்திரை இருக்கும். மெட்டையோ இடையிசையோ கேட்கும்போது இது இளையராஜா பாடல் என்று நமக்குத் தெரிந்துவிடும். இது விஸ்வநாதன்-ராமமூர்த்தி, ஜி.ராமநாதன், இளையராஜா போன்ற சிலருக்கே இருந்தது.
- யுவன் சந்திரசேகர், எழுத்தாளர்
”இசையுலகத்துக்கு, தமிழ்நாட்டுக்கு இந்தியாவுக்கே ஒரு விலை மதிக்க முடியாத பொக்கிஷம் இசைஞானி இளையராஜா. அவரது இசையைக் கேட்காமல் நகரவே நகராது என்று சொல்லும் அளவுக்கு நம் வாழ்க்கையுடன் ஒன்றிப்போய்விட்ட இசை அவருடையது. மெலடி, கிராமிய இசை, கர்னாடக இசை, சோகப் பாடல், ஆட்டத்துக்கான பாடல், டிஸ்கோ பாடல் என எந்தப் பாடலாக இருந்தாலும் அதற்கேற்ற மெட்டும் அவருக்கு எப்படிக் கிடைக்கிறதோ! தென்றல் வருடும் இதமும் ஆக்ரோஷமாக மலை உச்சியிலிருந்து விழும் அருவியும் பாயும் கம்பீரமும் அவரது இசையில் இருக்கும்.
அவரது இசையில் எல்லாவிதமான உணர்வுகளும் பாவமும் இருக்கும். மிகவும் கலங்கி இருக்கும் ஒரு மனதை பதப்படுத்தவும் இதமாவதற்குமான குணமும் அந்த இசைக்கு இருக்கும். அமைதியான மனநிலையுடன் கேட்கும்போது அந்த மனதுக்கும் ஒரு பாதிப்பு ஏற்படும்படியாகவும் அவரது இசை இருக்கும். அமைதியான மனதில்கூட அந்த இசை ஒரு தாக்கத்தை உருவாக்கும்.
எத்தனையோ கர்னாடக ராகங்களில் பாடல்களை அமைத்திருக்கிறார். நளினகாந்தி, சூர்யா, ஜெகன்மோகினி, கெளளை, சலநாட்டை போன்ற அரிதான ராகங்களில் அவர் பாடல்களை உருவாக்கியிருக்கிறார். இதை அவரது முக்கியமான பங்களிப்பாகப் பார்க்கிறேன்.”
--நித்யஸ்ரீ மகாதேவன், கர்னாடக இசைப் பாடகர்
”இளையராஜா ஒரு சகாப்தம். நம்முடைய தமிழ் மண்ணின் வாசனையை நாட்டுப்புறப் பாடல்கள் மூலமாகவும் கர்னாடக இசை ராகங்கள் மூலமாகவும் உலகம் முழுக்கப் பரப்பியவர். அவர் நீண்ட காலம் வாழவேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன். நிறைய இசை வடிவங்களை கர்னாடக இசையிலிருந்து வடித்திருக்கிறார். ஒரு உதாரணம்சொல்ல வேண்டும் என்றால். ‘தென்றல் வந்து என்னைத் தொடும்’ என்று ஒரு பாடலை உருவாக்கியிருந்தார்.
‘ஹம்சநாதம்’ என்கிற அழகான கர்னாடக ராகத்தின் அடிப்படையில் அந்தப் பாடலுக்கு மெட்டமைத்திருப்பார். அந்த ராகத்தின் அழகை அவ்வளவு சிறப்பாக ஜனரஞ்சமாக பிரதிபலிக்க வைத்து அப்படி ஒரு பாடலை ஒரு மேதையால்தான் செய்ய முடியும். இது ஒரே ஒரு உதாரணம்தான். கர்னாடக இசை சார்ந்து இந்த மாதிரி நிறைய சாதனைகளை நிகழ்த்தியவர் அவர்.
-அருணா சாய்ராம், கர்னாடக இசைப் பாடகர்