

‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தில் ‘சுமார் மூஞ்சி குமாரு’வாக விஜய்சேதுபதிக்கு இயக்குநர் கோகுல் கொடுத்த அடையாளம் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது. தற்போது இதே கூட்டணி தங்களது ‘பிராண்ட் நகைச்சுவை’ முன்னிலைப்படுத்தி ‘ஜூங்கா’ படத்தை உருவாக்கியிருக்கிறது. ஷாயிசா சைகல், மடோனா செபாஸ்டியன் ஆகிய இரு கதாநாயகிகளுடன் விஜய்சேதுபதி நடித்திருக்கும் இந்தப் படத்தின் ட்ரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்திருக்கிறது. பெரிய பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் ‘ஜூங்கா’ படத்தின் இசைவெளியீட்டு விழாவில் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அருண்பாண்டியன் “என்னுடைய 35 வருட சினிமா வாழ்க்கையில் இப்படி ஒரு நடிகரைப் பார்த்ததில்லை” என்று புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.
‘ஆரோகணம்’, ‘நெருங்கி வா முத்தமிடாதே’, ‘அம்மணி’ ஆகிய படங்களை இயக்கிய லட்சுமி ராமகிருஷ்ணன், அடுத்து அசோக் செல்வன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க, ‘ஹவுஸ் ஓனர்’ என்ற படத்தை இயக்குவதாக அறிவித்திருந்தார். ஆனால் தற்போது இவர் இயக்கும் புதிய படத்தின் மூலம் நடிகை விஜி சந்திரசேகரின் மகள் லவ்லினைக் கதாநாயகியாக அறிமுகப்படுத்துகிறார். ‘ஆரோகணம்’ படத்தில் விஜி சந்திரசேகர் மையக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சூர்யா - கார்த்தி கூட்டணி!
நடிகர் சூர்யாவின் தயாரிப்பில், அவருடைய தம்பி கார்த்தி நடிப்பில், இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கடைக்குட்டி சிங்கம்’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படத்தின் நாயகன் கார்த்தி பேசும்போது, “ நகரங்களில் வேலை செய்யும் எல்லோரையும் கிராமத்துக்கு வந்து விவசாயம் செய்ய வைக்கும் ஒரு படமாக ‘கடைக்குட்டி சிங்கம்’ இருக்கும். நான் முதன்முறையாக இசையமைப்பாளர் இமான் இசையில் நடிக்கிறேன். பாடல்கள் நன்றாக வந்துள்ளன. அண்ணனுடைய தயாரிப்பில் நடிப்பேன் என்று நினைத்துக் கூடப் பார்த்தது இல்லை. முதன்முறையாக நாங்கள் இணைந்து பணியாற்றியதில் மகிழ்ச்சி. கூடிய விரைவில் நாங்க இருவரும் சேர்ந்து நடிப்போம்!’’ என்றார்.
‘காலா’ படத்தில் ரஜினியின் மனைவியாக செல்வி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஈஸ்வரி ராவ். அதற்காக அவருக்குப் பாராட்டுகள் கிடைத்துவருகின்றன. இதற்கிடையில் அவருக்கு பாலா இயக்கும் ‘வர்மா’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை இயக்குநர் வழங்கியிருப்பதாக இயக்குநர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் ‘வத்திக்குச்சி’ படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் திலீபன் ரஜினியின் மகனாக நடித்து கவனம் பெற்றார். தற்போது இவர், சீனுராமசாமியிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய சிவசக்தி இயக்கிவரும் ‘குத்தூசி’ படத்தில் நடிக்கிறார். ‘காலா’ படத்தில் அவரது கடைசி மகனின் காதலியாக நடித்திருக்கும் அஞ்சலி பட்டீல் இந்தியாவின் பல மொழிப் படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவரையும் தனது படத்தில் நடிக்க அழைத்திருக்கிறாராம் விக்ரமை இயக்கிவரும் முன்னணி இயக்குநர்.
குற்றவாளிக் கூண்டில் ஷங்கர்!
இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரனின் உதவியாளரான விக்கி இயக்கியுள்ள படம் ‘டிராஃபிக் ராமசாமி’. பொதுநல வழக்குகள் மூலம் அயராமல் போராடிவரும் சமூகச் செயற்பாட்டாளர் டிராஃபிக் ராமசாமியின் வாழக்கை வரலாறை மையமாக வைத்து இந்தப் படத்தை இயக்கியுள்ளார். படத்தில் ‘டிராஃபிக்’ ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன் நடித்திருக்கிறார். நீதிமன்றம் போல் அமைக்கப்பட்ட செட் அமைக்கப்பட்டு அதில் நடந்த இந்தப் படத்தின் இசை வெளியிட்டு விழா, கோடம்பாக்கத்தின் கவனத்தை ஈர்த்தது. இவ்விழாவில் இயக்குநர் எஸ்.ஏஸ்.சந்திரசேகரிடம் பணியாற்றிப் பின்னர் இயக்குநர்களாகப் புகழ்பெற்ற ஷங்கர், பொன்ராம், எம்.ராஜேஷ் ஆகியோருடன் கவிப்பேரரசு வைரமுத்துவும் ‘டிராஃபிக்’ ராமசாமியும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.
சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் குற்றவாளிக் கூண்டில் ஏறி அங்கே அமைக்கப்பட்டிருந்த ஒலிவாங்கியில் பேசினார்கள். இயக்குநர் ஷங்கர் பேசும்போது, ‘‘எங்கே விதிமீறல்கள் நடந்தாலும் அதைத் தட்டிக் கேட்பவர் ‘டிராஃபிக்’ ராமசாமி. அவர் ஒரு இன்ஸ்பயரிங்கான கேரக்டர். அவரிடம் ஒரு ஹீரோயிசம் தெரியும்! மனசுல அவருக்காகக் கை தட்டியிருக்கிறேன். இப்படி என் மனதில் பதிந்த அவருடைய கேரக்டரை வைத்து ஒரு படம் பண்ணணும் என்ற ஆசை என் மனதிலும் இருந்தது. காரணம், டிராஃபிக் ராமசாமி, கத்தியைக் கையில் எடுக்காத ஒரு இந்தியன்.
அதே மாதிரி ‘அந்நியன்’ படத்தில் வருகிற வயசான அம்பி கேரக்டர்! இந்த கேரக்டரை ரஜினி சாரை வைத்து எடுக்கணும் என்று கூட நினைத்தேன். அப்படி இருக்கும்போது இந்தப் பட அறிவிப்பு வந்தது. வட போச்சே என்று வருத்தப்பட்டேன்! ஆனால் அதில் எஸ்.ஏ.சி.சார் பண்றார் என்றதும் எனக்குச் சந்தோஷமாக இருந்தது. காரணம் ‘டிராஃபிக்’ ராமசாமியோட கதாபாத்திரத்துக்குப் பொருத்தமான நடிகர் அவர்தான்!” என்றார்.