

‘கா
லா’ படம் வெளியாகி நான்கு வாரங்கள் கடந்துவிட்டன. படம் வெற்றியா. தோல்வியா என்பதைத் தாண்டி, ரஜினிகாந்துக்கான மாஸ் காட்சிகள் படத்தில் மிகவும் குறைவு என்பது அவருடைய ரசிகர்கள் பலரை ஏமாற்றமடையச் செய்திருக்கிறது. ஆனால், எத்தனை காலத்துக்கு ரஜினி தன் மிகை நாயக பிம்பத்தை வைத்தே படங்களில் நடித்துக்கொண்டிருக்க முடியும்?
திரையுலகில் 42 ஆண்டுகளைக் கடந்துவிட்டார் ரஜினி. 30 ஆண்டுகளுக்கு மேலாக உச்ச நட்சத்திரமாக விளங்கிவருகிறார். ‘கோச்சடையான்’, ‘லிங்கா’ போன்ற அண்மைக் காலப் படங்களின் தோல்வியால் அவரது உச்ச நட்சத்திர அந்தஸ்து கேள்விக்குள்ளானது. இருந்தாலும், அவரது படத்துக்குக் கூட்டம் வந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால், தற்கால டிஜிட்டல் யுகத்து இளைஞர்களின் ரசனை பெருமளவில் மாறிவிட்டது. இன்று ஒரு நடிகனுக்காகவே படம் பார்ப்பவர்கள் அருகி வருகிறார்கள். படத்தின் வெற்றியை உறுதி செய்ய, கதையில் சுவாரசியமான விஷயங்களைச் சேர்க்க கூடுதல் சிரத்தை எடுக்க வேண்டியிருக்கிறது.
இந்த மாற்றத்துக்குப் பெரும்பாலான நட்சத்திரங்கள் முகம் கொடுக்கத் தொடங்கிவிட்டார்கள். முகம் கொடுக்காதவர்கள் கடுமையாக ட்ரோல் செய்யப்படும் நிலைக்கு ஆளாகியிருக்கிறார்கள். வணிக ஏணியில் இவர்களைவிட உயரத்தில் தன்னை வைத்துக்கொள்ள வேண்டிய ரஜினி, இதைக் கவனிக்காமல் இருக்க முடியாது. அதேநேரம் தன் தீவிர ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் முற்றிலும் புறந்தள்ள முடியாது.
ஆக ரஜினிக்கு இது ஒரு குழப்பமான காலகட்டம். அமிதாப் பச்சனைப் போல், நாயகன்-நாயகி -வில்லன் என்ற சட்டகத்துக்கு அப்பாற்பட்ட படங்களில் வலுவான கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெறுவதுதான் அவரது திரைப் பயணத்தின் அடுத்த கட்டமாக இருக்க முடியும். இது நடக்க வேண்டும் என்று பொதுவான ரசிகர்களில் ஒரு சாரார் எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டார்கள். ஆனால், அமிதாப் அது போன்ற படங்களில் நடிக்கத் தொடங்கியது, அவரது நாயக பிம்பம் தூக்கிப்பிடிக்கப்பட்ட படங்களுக்கு கிட்டத்தட்டச் சந்தை மதிப்பு இல்லாமல் போன காலகட்டத்தில்தான். இதுபோல் ரஜினிக்கு இன்னும் நிகழவில்லை.
ஆனால், சில சமிக்ஞைகளை நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ளலாம். அதில் ஒன்று ‘காலா’ படத்துக்கு டிக்கெட் முன்பதிவு வழக்கமான ரஜினி படத்துக்கு இருக்கும் அளவு இல்லாமல் இருந்தது. ஆனால் இதற்கு ரஜினி, தூத்துக்குடியில் போராட்டங்களைக் கொச்சைப்படுத்திப் பேசியது உட்படப் பல காரணங்கள் இருந்ததாக விவாதிக்கப்பட்டது. ஆனால், இதை வைத்து அவரது சந்தை மதிப்பு குறைந்துவிட்டதாக முடிவுக்கு வந்துவிட முடியாது.
அரசியல் நுழைவுத் திட்டத்தை அறிவித்திருக்கும் ரஜினி, ஒருகால் திரையிலும் நீடிப்பதென்றால் இன்னும் சில ஆண்டுகளில் அமிதாப் பச்சனின் இடத்துக்கு நகர்வதை அவர் தவிர்க்க முடியாது. ஆனால் திடீரென்று ‘சீனி கம்’, ‘பிளாக்’, ‘பிக்கு’ போன்ற படங்களில் அவர் நடித்துவிடவும் முடியாது எனத் தோன்றுகிறது. இதற்காகத்தான் ‘கபாலி’, ‘காலா’ போன்ற படங்களில் அவர் நடிக்கத் தொடங்கியிருக்கிறார் என்று தோன்றுகிறது. மாஸ் காட்சிகள், சண்டைக் காட்சிகள், நாயகனின் வீரத்தை விதந்தோதும் வசனங்கள் என ரஜினி படத்தில் எதிர்பார்க்கப்படும் விஷயங்களும் இந்தப் படங்களில் இருந்தன. சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான கருத்துகள், ரஜினியின் நிஜ வயதுக்கேற்ற நாயக வார்ப்பு, நாயகி உட்படப் பெண் கதாபாத்திரங்களைக் கண்ணியமாகச் சித்தரிப்பது போன்ற கடந்த 25 ஆண்டுகளில் நடித்த படங்களில் இல்லாத விஷயங்களும் இதில் இருந்தன.
‘எந்திரன்’ படத்தில் இருந்தே ரஜினி இந்தப் போக்கைத் தொடங்கிவிட்டார் எனக் கொள்ளலாம். பல ஆண்டுகளுக்குப் பின் அந்தப் படத்தில் வில்லத்தனமான வேடத்தில் நடித்தார். ‘மாஸ்’ நாயகர்களுக்கான அறிமுகக் காட்சியோ பாடலோ இருக்கவில்லை. அந்தப் படத்தில் ரஜினியின் சூப்பர் ஸ்டார் பிம்பத்துக்கென்று பெரிதாக எதுவுமே சேர்க்கப்படவும் இல்லை ‘கோச்சடையான்’ எனும் முற்றிலும் மாறுபட்ட முயற்சியில் பங்கேற்றார். ஆனால், இடையில் ஒரு வெற்றியைக் கொடுத்தே ஆக வேண்டிய அழுத்தத்தில் ‘லிங்கா’ படத்தில் நடித்துப் பார்த்தார். ஆனால், அதை ரசிகர்கள் நிராகரித்தார்கள்.
இப்போது இரஞ்சித்தைப் போலவே இளைய தலைமுறையைச் சேர்ந்த கார்த்திக் சுப்பாராஜுடன் இணைந்து தனது புதிய படத்தில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். இதுவரை இயக்கிய நான்கு படங்களிலும் பல்வேறு பரிசோதனை முயற்சிகளைச் செய்து பார்த்திருக்கும் கார்த்திக், தன்னை ஒரு ‘ரஜினி ரசிகர்’ என்று சொல்லிக்கொள்பவர். ‘இது முழுக்க முழுக்க சூப்பர் ஸ்டார்’ படமாகத்தான் இருக்கும் என்றும் சொல்லியிருக்கிறார்.
ரஜினி படமாக இருப்பதில் பிரச்சினையில்லை. ஆனால், தன் அடுத்த கட்டத்துக்காக ரஜினி தொடங்கியிருக்கும் பயணத்தைப் பின்னோக்கிச் செலுத்தும் படமாக அது அமைந்துவிடக் கூடாது என்பதே ரஜினியை மாறுபட்ட கதாபாத்திரங்களில் எதிர்பார்க்கும் டிஜிட்டல் யுக ரசிகனின் கவலை.
தொடர்புக்கு: gopalakrishnan.sn@thehindutamil.co.in