

மலையாள சினிமாவின் மரபார்ந்த ஆணிவேர்களில் எம்.டி.வாசுதேவன் நாயர் ஒரு பேராளுமை. இங்கு இசைஞானி இளையராஜா எப்படித் தனது இசையால் கோலோச்சினாரோ அதே காலக்கட்டத்தில் கேரளத்தில் தனது திரைக்கதைகளின் வழியாகக் கோலோச்சியவர் எம்.டி.வி. அவரது 9 கதைகளைத் தொகுத்து ‘மனோரதங்கள்’ என்கிற பெயரில் ஒரு Anthology இணையத் தொடர் ஜீ5 தளத்தில் வெளியாகியிருக்கிறது.
‘வில்பனா’ தொடரின் முதல் கதை. எம்.டி.வியின் புதல்வியான அஸ்வதி தனது முதல் முயற்சியாக இயக்கியிருக்கிறார். கீதா பரேக் ஒரு பணக்காரப் பெண். தனது தனிமைத் துயரைப் போக்க, வீட்டிலிருக்கும் பொருள்களை விற்றுவிட்டு வேறிடம் செல்ல முயல்கிறாள்.
அவளது தட்டச்சு இயந்திரத்தை விலைக்கு வாங்க வருகிறான் பத்திரிகையாளரான சுனில். அச்சமயத்தில் இருவருக்குமிடையில் நீளும் உரையாடல் நம்பகத்தன்மைக்குச் சற்று அப்பால் இருக்கிறது. எனினும் கீதாவாக மதுபாலாவும் சுனிலாக ஆசிஃப் அலியும் நிறைவளித்திருக்கிறார்கள். அஸ்வதிக்குச் சிறந்த எதிர்காலம் இருப்பதை ‘வில்பனா’ கட்டியம் கூறுகிறது.
‘ஷிலாலிகிதம்’, பேராசிரியர் கோபாலன்குட்டி தன்னுடைய கிராமத்து வீட்டை விற்கும்பொருட்டு தாயைச் சந்திக்க வருவதை விவரிக்கிறது. மெதுவாக நகரும் காட்சிகளின்வழி, அடர்த்தியான இயற்கை வெளி சூழ்ந்த அக்கிராமத்தின் பேரெழிலை திவாகர் மணியின் ஒளிப்பதிவு நமது கண்களுக்கு வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.
‘ஷெர்லாக்’ இத்தொடரின் மூன்றாம் கதை. ஃபகத் ஃபாசில் பாபுவாக வரும் இதில் மூன்றே கதாபாத்திரங்கள். பாபு, அவனுடைய தமக்கை மற்றும் ஒரு குட்டி நாய். கனடாவில் வசிக்கும் தமக்கையோடு சில நாள்கள் தங்கியிருக்கும் பொருட்டு பாபு வருகிறான். அந்த வீட்டில் வசிக்கும் குட்டி நாய் பாபுவின் பிணைப்பைப் பெற முற்படுகிறது.
ஆனால் அது தன்னைக் கண்காணிப்பதாக எண்ணி மன அவசத்தை அடைகிறான். கணவனது வருகைக்காக ஏங்கும் தமக்கை, பாபு வின் அடையாளப்படுத்தப்படாத அகச்சிக்கல், பாபுவின் இருப்பில் புதிய உறவின் அணுக்கத்தைக் காண விரும்பும் நாய் ஆகிய மூன்று கதாபாத்திரங்களின் தனிமையே காட்சிகளின் பின்னலில் படத்தின் மதிப்பை உச்சமாக்கிவிடுகிறது.
ஃபகத் ஃபாசிலின் நடிப்பில் எப்போதும்போல் நாம் மெய்மறந்துவிடுகிறோம். தமக்கையாக வரும் நதியா நடிப்பில் முதிர்ந்திருக்கிறார். எம்.டி.வியின் கதையை, ஃபகத் ஃபாஸிலின் ஆஸ்தான இயக்குநரான மகேஷ் நாராயணன் ஒரு கவிதையாக வடித்துத் தந்திருக்கிறார்.
‘கடல் காற்று’, திருமண உறவை மீறிய காதலோடு அலையும் ஒரு கணவனது மன ஊசலாட்டத்தைப் பற்றியது. கிராமத்தில் அன்போடு கவனித்துக்கொள்ளும் மனைவி இருந்தாலும் மேலை நாகரிகத் தோற்றத்தில் பழகும் ஒரு பெண்ணிடம் மயங்கி ஏமாறும் கேசவ் கதாபாத்திரத்தின்வழி உண்மையான காதல் எங்குள்ளது என்பதை நமக்கு அறிவுறுத்துகிறது படம். இந்தக் கதைக்கருவை நாம் பல படங்களில் பார்த்திருந்தாலும், படத்தின் ஆற்றொழுக்கு நம்மை முழுவதுமாக ஈர்த்துவிடுகிறது.
‘கடுகன்னவா’வாக மம்மூட்டி நடித்தி ருக்கும் கதை. தன்னுடைய இலங்கைப் பயணத்தின்போது ஒன்றுவிட்ட தமக்கையைச் சந்திக்கச் செல் வது குறித்த ஓர் எளிய கதையாடல். அவ்வளவு தூரம் சென்று அவளைச் சந்திக்காமல் அவர் திரும்புவது சிறுகதைக்கு முத்தாய்ப்பான முடிவாக இருந்திருக்கலாம். ஆனால் திரைப்படம் என்று வரும்போது மேலான விரிவுகள் அவசியம். எதிர்பார்ப்பிலமைந்த படம் ஒருவித ஏமாற்றத்தையே தருகிறது.
‘காழ்ச்சா’, காதலற்ற திருமண உறவில் சலித்து, முதன்முதலான காதலுணர்வை அடையும் சுதா என்கிற இளம்பெண்ணின் மனோகதியை விவரிக்கும் படம். கவித்துவம் மிகுந்த இயக்குநரான ஷியாமபிரசாத்தின் திரை வண்ணம். கர்னாடக சங்கீதம் தரும் பிணைப்புணர்வில் சுதாவிற்கும் விஸ்வநாதன் என்கிற பாடகனுக்கும் வேர் விடும் பந்தம் குறித்த கவிதையாடல்.
ஷியாமபிரசாத் முன்னமே இயக்கிய ‘ஒரே கடல்’ என்கிற திரைப்படம் இதேவிதமான கதைக்கருவைக் கொண்டி ருந்தாலும், அந்தப் படத்தில் வந்த காதல் கலந்த காமவுணர்ச்சியே கதையின் சாராம்சம். இப்படத்தில் அந்த உறவு காதலுணர்வாக இடைநின்று மட்டுப்பட்டிருப்பது நல்லதொரு மெருகேற்றம்.
‘ஓலவும் தீரவும்’. இது, 1970இல்பி.என்.மேனன் இயக்கத்தில் திரைப்படமாக வெளியாகி மாநில விருதுகளைப் பெற்ற படம். அதே படத்தை மறு உரு வாக்கம் செய்து இக்கதைத் தொடருக்காக பிரியதர்ஷன் இயக்கியிருக்கிறார். இஸ்லாமிய இளைஞனான பாபுட்டி தன்னுடைய இறந்துபோன நண்பனின் தங்கையான நபீசாவைக் காதலிக்கிறான்.
ஆனால் நபீசாவின் அம்மா சேலத்தி லிருந்து புதிய பணக்காரனாகத் திரும்பி வந்து பகட்டு காட்டும் குஞ்சாலி என்பவனுக்கு அவளை மணமுடிக்கத் திட்டமிடுகிறாள். பாபுட்டி - நபீசாவின் காதலை அறிந்துகொள்ளும் குஞ்சாலி அவளைப் பாலியல் பலாத்காரம் செய்து விட, பாபுட்டி அவளை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருந்தும், நபீசா தற்கொலை செய்துகொள்கிறாள். காதலைத் துயரத்தின்வழி காவியமாக்கி அந்தக் காலக்கட்டத்தில் வெற்றியைப் பெற்றது.
ஆனால் 54 வருடங்கள் கடந்து, இன்றைய நவீன இந்திய சினிமாவின் சிந்தனை வளர்ச்சியின் அடிப்படையில் பார்க்கும்போது, பெண் நிலை சார்ந்து பிற்போக்குத்தனமான கதையாடலை முன்வைப்பதாகவே அதன் கதைச் சாரம் எஞ்சுகிறது. படத்தின் சிறப்பம்சமாக நான் காண்பது, சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு. நீரோட்டம் நிறைந்த மலையின் அடிவார கிராமத்தைக் கறுப்பு வெள்ளை நிறத்தில் இயற்கை மிளிரக் காட்டியிருக்கிறார்.
‘அபயம் தேடி வீண்டும்’ எம்.டி.வியின் கதைகளின் யதார்த்தப் போக்கிலிருந்து முற்றிலும் மாறுபட்டு சர்ரியலிச கதையாடலைக் கொண்டி ருக்கும் படைப்பு. பெயரிடப்படாத ஒரு வயோதிகர் கிராமம் பகுதி ஒன்றுக்கு வந்து வாடகைக் குடியிருப்பில் தங்குகிறார். சில நாள்களுக்குப் பிறகு அவர் அந்த வீட்டைக் காலிசெய்ய வற்புறுத்தப்படுகிறது. அவர் மறுப்பைக் காட்டினாலும் குறிப்பிட்ட நேரத்தில் அவரது மரணம் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்துகிறது.
வீடு என்பது இவ்வுலகச் சஞ்சாரம் எனவும், காலி செய்வது இறப்பை அடைவது எனவும், ஓர் இளம்பெண்ணின் தோற்றம் வாழ்வின் மீதான இச்சை எனவும், குட்டி நாயின் உறவு பந்தம் எனவும் படம் முழுவதுமே குறியீடுகளால் நிரம்பியது. வயோதிகக் கதாபாத்திரத்துக்கு நடிகர் சித்திக் பொருத்தமான தேர்ந்தெடுப்பு. சந்தோஷ் சிவனின் உள்ளாழ்ந்த இயக்கத்திலும் அற்புதமான ஒளிப்பதிவிலும் படத்திற்குள் மதிமயங்கிவிடுகிறோம்.
‘ஸ்வர்கம் துறக்குன்ன சமயம்’ இறுதிக் கதை. கைதேர்ந்த இயக்குநர்களில் ஒருவரான ஜெயராஜ் இயக்கியது. முதுமைக் காலத்தில் இறக்கப்போகிறவரின் மரணத்தை முன்கூட்டியே கணித்துச் சொல்லும் ஆற்றல் பெற்றவர் குட்டி நாராயணன். மரணப் படுக்கையில் இருக்கும் மாதவன் மாஷேவைக் காணப் பல ஊர்களிலிருந்தும் உறவுகள் வருகிறார்கள். அவர்களது எண்ணங்களில் பெரியவர் இறந்துவிட்டால் வீடு உள்ளிட்ட சொத்துகளை உடனடியாக விற்றுப் பங்குபோடும் திட்டங்களோடும் கூடுகிறார்கள்.
மாஷேவை குட்டிநாராயணன் அருகேயிருந்து பார்த்துக்கொள்கிறார். எளிய மூலிகை கஷாயத்தை மாஷேவுக்குத் தந்து அவரைப் பேணுகிறார். அவரது நோக்கம் மாஷே இறக்கும்வரை துன்பத்தை அனுபவிக்கக்கூடாது என்பது. ஆனால் விதியோ வலியது. மாஷே உடல் நலிவிலிருந்து மீண்டும் தெளிவாகப் பேசத் தொடங்குகிறார். உறவுகளின் மரண எதிர்பார்ப்பு தற்காலிகமாகத் தவிடுபொடியாக, அங்கிருந்து அகல்கி றார்கள். இறுதியாக குட்டி நாராயணனும் அகல்கிறார்.
எம்.டி.வி எழுதிய கதை ஓர் உச்சம் என்றால், அதை ஜெயராஜ் படமாக்கியிருக்கும் விதம் மற்றோர் உச்சம். மாதவன் மாஷேவாக வரும் நெடுமுடி வேணு உண்மையிலேயே மரண வேளையில் உள்ள ஒரு நோயாளியைப் போன்றே நடித்திருக்கிறார். குட்டி நாராயணன் நாயராக வரும் இந்திரன்ஸ் நடிகரா, இல்லை அந்த ஊரில் மரணகாலத்தில் உதவிசெய்து வாழும் நிஜ மனிதரா என்று வித்தியாசப்படுத்திப் பார்க்கவே முடியாத கதாபாத்திர அர்ப்பணிப்பை இக்கதைக்கு வழங்கி யிருக்கிறார். மலையாள சினிமாவிற்குக் கிடைத்த நடிப்புப் பொக்கிஷம் அவர்.
இந்த ஒன்பது கதைகளையும் வைத்துப் பார்க்கும்போது, எம்.டி.வியின் கதையுலகம், மாந்தர்களை அழுத்திய துயரப்பாடுகளை உள்ளீடாகக் கொண்டி ருப்பதை உணரமுடிகிறது. அதிலும் பெண்களின் குரலெழுப்ப முடியாத அழுகையும் அதைச் சாட்சியுருவில் அருகிருந்து காணும் ஆண்களின் கையறு நிலையும் கதைகளுக்கு நீடித்த உயிரோட்டத்தை வழங்குவதைக் காணமுடிகிறது. இந்த உணர்ச்சிகரம், கேரளம் தாண்டிய இந்திய நிலப்பரப்பில் வாழும் பெண்களின் ஓலமாகவும் விரவிச் செல்கிறது.
தொடரின் ஒவ்வொரு கதைக்கும் முன்பாகத் தனது கருத்தமைவுகளுடன் கமல்ஹாசன் உரையாற்றுகிறார். பார்க்க மகிழ்ச்சியாக இருந்தாலும் ஓர் ஏக்க உணர்வு மனதுள் எழுந்து தணிவதைத் தவிர்க்கமுடியவில்லை. எம்.டி.வியைப் போன்று தமிழ் இலக்கியத்திலும் சினிமாவிலும் தனித்த அடையாளம் பதித்தவர் ஜெயகாந்தன். அவரது கலையிருப்பைப் போற்றும்விதமாக அவரது தேர்ச்சிமிக்க கதைகளைத் தொடர் படங்களாக்கி, அதில் தமிழ் சினிமாவின் உயரிய நடிகரான கமல்ஹாசனின் உரை இடம்பெறவில்லையே என்கிற ஏக்கம்தான் அது.