

கோபால்! இவன் நல்லவனா கெட்டவனா? தமிழ்நாட்டில் பிறந்த தமிழனாக இருப்பினும் வெளிநாட்டு வாழ் இந்தியன். சரளமான ஆங்கிலம் பேசும் கோட் சூட் அணிந்த கனவான். எப்போதும் மலர்ந்த முகத்தோடு இருந்தாலும் மனதுக்குள் எதையோ மறைத்து வாழ்பவன். பல நேரம் பதற்றங்கள் அவன் முகத்தில் பல்லாங்குழி ஆடும். யாருமற்றவன். வேலைக்காரர்கள் மட்டுமே விசுவாசிகள். அன்புக்காக ஏங்குபவன். அவனால் பசுத்தோல் போர்த்திய புலிகளைப் போன்ற மனிதர்களை இனம் கண்டுகொள்ள இயலாது.
திரையில் நாம் கண்ட கோபாலின் வாழ்க்கை, நமக்கு எவ்வளவோ உணர்வுகளை அள்ளித் தந்திருக்கிறது. கோபாலுக்காக சந்தோஷப்பட்டி ருக்கிறோம், வருத்தப்பட்டிருக்கிறோம், பரிதாபப் பட்டிருக்கிறோம். அவனுக்காக வைக்கப்பட்ட பொறியை அறிந்து கொள்ள முடியாத அப்பாவியாக இருப்பதை நினைத்துக் கோபப்பட்டிருக்கிறோம்.
இப்படி ஒரு கதாபாத்திர வார்ப்பை நடிகர் திலகம் என்கிற மகா கலைஞனிடம் கொடுத்துவிட்டால், பார்வையாளருக்கு அதைவிட வேறொரு திரை விருந்து இருக்க முடியுமா? ஆங்கில மூலம் வழியாக வங்காளம் பேசிய படமொன்றின் தமிழ் வடிவம், ‘புதிய பறவை’ யாக உருக்கொண்டது சிவாஜி கணேசன் என்கிற கலைஞரை நம்பித்தான்.
இத்தனை வருடங்களுக்குப் பிறகும் திரைக்கதை பிரமிக்க வைக்கிறது. த்ரில்லர் கதைகளில் அதன் திரைக்கதையைக் கதாசிரியர்கள் முடிவிலிருந்து தொடங்கி எழுதிச் செல்வதுண்டு. அந்த உத்தி, ‘புதிய பறவை’க்குக் கச்சிதமாகப் பொருந்தியது.
‘டைட்டில் கிரெடிட்’டுடன் தொடங்கும் படத்தில், இரவு நேர நகரத்தில், தன்னைத் துரத்தும் காரிடமிருந்து தப்பிக்க ஒரு பெண் பதற்றத்துடன் ஓடுவதில் தொடங்கி, இறுதி வரை பரபர நகர்வுகளைக் கொண்டிருக்கும் விதமாகவும் ‘காதலை ஒரு பொறி’யாகவும் சித்தரிக்கும் மூலக் கதையின் கருவைச் சிதைக்காமல் திரைக்கதையை எழுதியவர் இப்படத்தின் இணை இயக்குநர் பி.பி.சந்திரா.
கப்பல் பயணத்தில் அறிமுகமாகிக் கொண்ட கோபாலும் லதாவும் மீண்டும் ஊட்டியில் சந்தித்துப் பழகி காதலர்கள் ஆகின்றனர். திருமண நிச்சயதார்த்தம் நடக்கும் நேரத்தில் இறந்துவிட்டதாக நினைத்த கோபாலின் மனைவி சித்ரா, ‘அத்தான்..’ என்று அலறியபடி காலில் விழும் இடைவேளை வரை சற்று மர்மமான தளத்தில் கதை பயணிக்கும். சித்ராவைப் போல் அச்சு அசலாக இருந்தாலும் வந்திருப்பது தன்னுடைய மனைவி அல்ல என்று நிறுவ நாயகனும் ‘இல்லை நான்தான் உங்கள் மனைவி’ என்று வந்திருப்பவரும் ஆதாரங்களை அடுக்க, வேகம் பிடித்து உச்சக்கட்டத்தில் அந்த அதிர்ச்சி முகத்தில் அறையும்போது பிரமிப்பு.
வசனக் காட்சிகளில் ஆழமாக வெளிப்படும் நடிகர் திலகத்தின் நடிப்பு, பாடல் காட்சிகளிலோ உணர்வுகளின் வானவில்லாக உருமாறும் விதம் வியப்பூட்டும். ‘உன்னை ஒன்று கேட்பேன்’ பாடலில் நாயகியின் மேல் ஈர்ப்பைக் கொட்டுவார். ‘பார்த்த ஞாபகம் இல்லையோ’ பாடலில் சோகம் மெல்லக் கரைந்து அகம் மலரும் புத்துணர்வைக் கடத்துவார். விரும்பிய பெண்ணுடன் வாழ்வு கைகூடும் மகிழ்வின் துள்ளலாக ‘மெல்ல நட’ எனச் சீண்டுவார்.
அமைதியை இழந்துவிடும் கையறு நிலையில் ‘எங்கே நிம்மதி’ எனப் புலம்பல் காவியம் படைப்பார். பொது வெளியில் எவருமே செய்யத் தயங்கும் மூக்கைச் சிந்தும் காட்சிக்குக்கூட கைதட்டல்களை அள்ளிக் குவிக்க நடிகர் திலகத்தால் மட்டுமே முடியும். நடிகர் திலகத்துக்கு நடிப்பில் ஈடுகொடுத்த சரோஜாதேவி, சௌகார் ஜானகி இருவருக்கும் பெரும் ஏற்றமும் திருப்புமுனையும் தந்தது ‘புதிய பறவை.
பாடல்களைத் தேன் கிண்ணத்தில் தோய்த்து, பின்னணி இசையில் மிரட்டிய மெல்லிசை மன்னர்கள், கேமரா கொண்டு ஓவியம் தீட்டிய கே.எஸ்.பிரசாத், வசனங்களால் இன்றும் வாழும் ஆரூர்தாஸ், அனைத்தையும் ஒருங்கிணைத்த படத்தின் இயக்குநர் தாதா மிராஸி சிவாஜிக்கு அப்பாவாகவும் கேமியோ ஏற்றிருப்பார். இவர்கள் அனைவரும் இணைந்தே 60 ஆண்டுகளைக் கொண்டாடும் ‘புதிய பறவை’யை 100 நாள்களைத் தாண்டிப் பறக்கவிட்டனர்.