

அ
வெஞ்சர்ஸ் நாயகர்களில் ஒருவர் ‘ஆன்ட் மேன்'. தனது தனிப்பட்ட வாழ்க்கைக்கும் சாகச அவதாரத்திற்கும் இடையே அவர் அல்லாடுவதையும் அப்படியே அதிரடி நாயகியான ‘த வாஸ்ப்’ உடன் இணைந்து இதுவரை வெளிப்படாத ரகசியங்களை வெளிக்கொண்டு வருவதுமே ‘ஆன்ட்-மேன் அண்ட் த வாஸ்ப்’ திரைப்படம். ஜூலை 6 அன்று அமெரிக்காவிலும், இந்தியாவில் ஜூலை 13 அன்றும் வெளியாக உள்ளது.
அறுபதுகளில் காமிக்ஸிலும், எண்பதுகளில் தொலைக்காட்சி தொடர்களிலும் எறும்பு மனிதனின் வீரதீரங்கள் பிரபலமாக இருந்தன. இப்படி மார்வல் காமிக்ஸில் முக்கிய இடமிருந்தாலும், தனி ஆவர்த்தன திரைப்படமாக எறும்பு மனிதனின் பராக்கிரமங்கள் ‘ஆன்ட் மேன்’ஆக 2015ல் வெளியாகி வசூலில் வாரிக் குவித்தது. இதன் தொடர்ச்சியாக தற்போது `த வாஸ்ப்’ கூட்டணியுடன் வருகிறார் ஆன்ட் மேன்.
இப்படத்தின் கதை ‘கேப்டன் அமெரிக்கா: சிவில் வார்’ மற்றும் ‘அவெஞ்சர்ஸ்:இன்ஃபினிட்டி வார்’ ஆகிய திரைப்படங்களின் கதைக்களன்களுக்கு இடையே நடைபெறுகிறது. சிவில் வார் தொடர் நடவடிக்கையாக எறும்பு மனிதனான ’ஸ்காட் லங்’ வீட்டுச் சிறையில் வைக்கப்படுகிறார். ஒரு தந்தையாக தனது குடும்ப வாழ்க்கைக்கும், எறும்பு மனிதனாக தனது சூப்பர் ஹீரோ கடமைகளுக்கும் இடையே ஸ்காட் தடுமாறித் தவிக்கிறார்.
அப்போது கடந்த காலத்தின் ரகசியங்கள் சிலவற்றை மீட்டுவரும் பொறுப்பு அவருக்கு வழங்கப்படுகிறது. அதனை சாதிக்க சக பெண் சூப்பர் ஹீரோவான ’த வாஸ்ப்’ உடன் இணைந்து போராடுவதும், அவர்கள் எதிர்கொள்ளும் புதிய சவால்களுமே கதை.
முதல் பாகத்தை இயக்கிய பெய்டன் ரீட், இரண்டாம் பாகத்தையும் இயக்கியுள்ளார். பால் ராட் (Paul Rudd), எவாஞ்சலின் லில்லி, வால்டன் காகின்ஸ் உள்ளிட்டோர் நடித்த திரைப்படத்தை மார்வல் ஸ்டுடியோஸ் தயாரிக்க, வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் வெளியிடுகிறது.