சினிப்பேச்சு: கோலிவுட்டைக் கலக்கும் திபு

சினிப்பேச்சு: கோலிவுட்டைக் கலக்கும் திபு
Updated on
2 min read

‘மரகத நாணயம்’ படத்தின் மூலம் கோலிவுட்டில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் திபு நைனன் தாமஸ். அதன்பிறகு சிவகார்த்திகேயன் தயாரித்து, அருண்ராஜா காமராஜ் இயக்கிய ‘கனா’ படத்துக்கு அட்டகாசமான பாடல்களைக் கொடுத்தார். தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘பேச்சிலர்’, சசிகுமாரின் ‘கொம்பு வச்ச சிங்கமடா’, சித்தார்த் நடித்து, தயாரித்த ‘சித்தா’ என வரிசையாக ஹிட் ஆல்பங்களைக் கொடுத்துக்கொண்டிருக்கிறார்.

தமிழில் முதன்மையாக இசையமைத்தாலும் மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகளிலும் நிதானமாகப் படங்களை ஒப்புக்கொண்டு வெற்றிப் பாடல்களைக் கொடுத்துவருகிறார். அந்த வரிசையில் ‘மின்னல் முரளி’ படத்தின் மூலம் இந்திய ரசிகர்களை ஈர்த்துள்ள டோவினோ தாமஸ் ஹீரோவாக நடித்துள்ள ‘ஏ.ஆர்.எம்’ படத்துக்குத் தற்போது இசையமைத்துள்ளார்.

அப்படம் விரைவில் வெளியாகவிருக்கும் நிலையில், ‘கிளியே’ என்கிற பாடல் வெளியாகி வைரல் ஆகியிருக்கிறது. அடிப்படையில் மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்ட திபு, அங்கே உருவாகி தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட ஒரு படத்துக்கான பாடல் என்கிற உணர்வு ஏற்படாத வண்ணம், தமிழ் பதிப்புக்கான பாடலைத் தந்திருப்பதை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

மாணவர்களுக்காக ஒரு படவிழா! - காட்சி ஊடகவியல் பயிலும் மாணவர்களை அணிதிரட்டி, அவர்கள் மத்தியில் சினிமா ரசனையை வளர்க்கும் விதமாக ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது ‘தி கார்னர் சீட்ஸ் சர்வதேசத் திரைப்பட விழா’. இந்த ஆண்டு அப்படவிழாவை, வீ எண்டர்டெயின்மென்ட்ஸ், பாரத் பல்கலைக்கழகத்தின் விஸ்காம் துறை, ஷார்ட் ஃபிளிக்ஸ் ஓடிடி தளம் (ShortFlix OTT) ஆகியவை இணைந்து முன்னெடுத்தன.

ஆகஸ்ட் 30ஆம் தேதி சென்னையில் உள்ள பாரத் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இப்படவிழாவை, டாக்டர் ஜெகத்ரட்சகன், டாக்டர் ஸ்வேதா, டாக்டர் சந்தீப் ஆனந்த், வீ எண்டர்டெயின்மென்ட்ஸ் விஜய், சபரிநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். குறும்படங்களுக்கான போட்டிப் பிரிவுக்கு 500க்கும் அதிகமான சர்வதேச, இந்தியக் குறும்படங்கள் வந்து குவிந்தன.

அதேபோல், பல நாடுகளிலிருந்து இணையம் வழியாக அனுப்பி வைக்கப் பட்டிருந்த முழுநீளச் சர்வதேசத் திரைப்படங்களிலிருந்து அதிகாரபூர்வத் திரையிடலுக்காகத் தேர்வு செய்யும் பணி கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வந்தது.

பல நாடுகளின் கலை, கலாச்சாரம், வரலாறு ஆகியவற்றுடன் தற்கால வாழ்வைப் புரிந்து கொள்ளும் விதமாகவும் பண்பாடும் அரசியலும் இல்லாமல் சினிமா இல்லை என்கிற பார்வையைக் காட்சி ஊடகவியல் பயிலும் மாணவர்களுக்கு உணர்த்தும் விதமாகவும் இப்படவிழாவுக்கான படங்களின் தேர்வு அமைந்தது.

குறும்படப் போட்டிப் பிரிவில் வென்ற மாணவப் படைப்பாளிகளுக்கு, தமிழ்த் திரையுலகிலிருந்து இயக்குநர் தரணி ராஜேந்திரன், கலை இயக்குநர் மூர்த்தி, எடிட்டர் செல்வா உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினர்.

தாயம்மா குடும்பத்தார் - 150: ராதிகா சரத்குமார் முதன்மைக் கதா பாத்திரத்தில் நடிக்கும் மெகா தொடர்களைக் கொண்டு டி.ஆர்.பியை பெருக்கிக்கொண்ட தனியார் தொலைக்காட்சி அலைவரிசைகள் பல. அந்தப் பலனைத் தற்போது அரசுத் தொலைக்காட்சி அலைவரிசையான தூர்தர்ஷனுக்குக் கொடுத்திருக்கிறார் ராதிகா. தனது ராடன் மீடியா வொர்க் நிறுவனத்தின் தயாரிப்பில், அவர் நடித்து வரும் புதிய மெகா தொடரான ‘தாயம்மா குடும்பத்தார்' தூர்தர்ஷன் தொலைக்காட்சி அலைவரிசையில் ஒலிபரப்பாகிவரும் நிலையில், சமீபத்தில் 150வது எபிசோடைக் கொண்டாடியிருக்கிறது.

டி.ஆர்.பியில் குறை வைக்காத இத்தொடரை விக்ரமாதித்தன் இயக்கி வருகிறார். இதையொட்டி ‘தாயம்மா குடும்பத்தார்’ தொடரின் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தூர்தர்ஷன் நிர்வாகிகள் எனப் பலரும் குழுவாகப் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். இந்நிகழ்வில் ராதிகா பேசும்போது: “தூர்தர்ஷன் என்பது உறங்கும் சிங்கத்தைப் போன்றது. அதன் உறக்கத்தைக் கலைப்பதற்காக அனைவரும் தீவிர முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்நிறுவனத்தின் 50வது ஆண்டில் ‘தாயம்மா குடும்பத்தார்' தொடர் ஔிபரப்பாகி வெற்றி பெற்றிருப்பதைப் பெருமிதமாகக் கருதுகிறேன். இந்த வெற்றி தொடரும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in