

மக்களின் வாழ்க்கையை, அவர்கள் வாழும் நிலத்தின் வெம்மையை, அங்கே வாழும் எளிய மக்களையே கதை மாந்தர்களாகவும் நடிகர்களாகவும் கொண்டு உருவான சுயாதீன சினிமாதான் பி.எஸ்.வினோத்ராஜும் அவரது குழுவினரும் உருவாக்கிய ‘கூழாங்கல்’.
உலகின் எந்தப் பகுதியில் திரையிட்டாலும், மொழி கடந்து மிகச் சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும் படைப்பாக வெளிப்பட்டிருந்தது ‘கூழாங்கல்’. அதனால்தான் உலகின் மிக உயரிய திரைவிழாக்களில் ஒன்றான ராட்டர்டாமில் தங்கப் புலி விருதை வென்றது. இந்தியா சார்பில் ஆஸ்கருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
அப்படிப்பட்ட ஒரு காத்திரமான படைப்பு எப்படி உருவானது, அதன் பின்னால் இருந்த படக்குழுவின் சுயாதீன உழைப்பு எப்படிப்பட்டது என்பதை, படத்தில் பணிபுரிந்த உதவி இயக்குநர்களில் ஒருவரான அரவிந்த் சிவா விவரித்திருக்கிறார். ஓர் உதவி இயக்குநரின் அனுபவக் குறிப்புகள்போல் இருந்தாலும் ஒரு சிறந்த சினிமா உருவாக, அதன் படைப்புக் குழுவுக்கு அப்பால், மக்களின் பங்களிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை எளிய ஆனால் ஈர்ப்பான மொழியில் நம் முன் வைக்கிறது.
கதை நடைபெறும் மதுரையின் அரிட்டாபட்டி கரட்டு மலைப்பகுதியைத் தேர்வு செய்தது, அதையொட்டிய கிராமங்களுக்குப் போய் மக்களையே நடிகர்களாகத் தேடிப் பிடித்ததில் தொடங்கி, இரண்டு ஆண்டுகள் இப்படத்தை உருவாக்கக் குடும்பமாக ‘கூழாங்கல்’ படக்குழு பட்ட பாடுகள், எந்த மிகையும் இன்றி ரத்த வியர்வையுடன் விவரிக்கப்பட்டிருப்பதுதான் இந்நூலின் சிறப்பு. நாளைய சுயாதீன படைப்பாளிகளுக்குப் பெரும் நம்பிக்கையை வாரித் தரும் கையடக்க கை(யே)டு. வினோத்ராஜின் ‘கொட்டுக்காளி’ பேசுபொருளாகியிருக்கும் நேரத்தில் இந்நூல் கூடுதல் கவனம் பெறுகிறது.
பி.எஸ்.வினோத்ராஜின் கூழாங்கல் திரைப்பட அனுபவங்கள்
அரவிந்த் சிவா
விலை ரூபாய் 150/-
வெளியீடு: நாடற்றோர் பதிப்பகம்
16, வேங்கடசாமி சாலை கிழக்கு,
இரத்தின சபாபதிபுரம்,
கோவை - 641002
தொடர்புக்கு: 94435 36779