திரைச்சொல்லி - 10: கருணையற்ற தாக்குதல்

திரைச்சொல்லி - 10: கருணையற்ற தாக்குதல்
Updated on
3 min read

‘கொட்டுக்காளி’ படத்தை முன்வைத்து இயக்குநர் அமீர் தனது கருத்துகளை வெளிப்படுத்தி இருப்பது முரண்பாடுகளின் கூட்டுக் கலவை. உலகளாவிய விருதுகளைப் பெறும் கலைப்படங்களைத் திரையரங்குகளில் வெளியிடத் தேவையில்லை என்பது அவரது வாதம். பின்னிணைப்பாக, ‘வெகுஜன சினிமாவுக்குப் பழகிப்போயிருக்கும் பார்வையாளர்களுக்குப் பணமும் நட்டம், பொழுதும் நட்டம்’ என்கிறார். ‘அத்தகைய படத்தைக் காண விரும்புபவர்கள் ஓடிடியில் பார்த்துக்கொள்ளட்டுமே’ என்று ஆலோசனையும் தருகிறார்.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உலகளாவிய நாடுகளில் எங்குமே திரைப்பட விழாக்களில் பங்குபெறும் ஒற்றை நோக்கத்துடன் படங்கள் எடுக்கப்படுவதில்லை. மக்கள் பார்க்கவேண்டும் என்பதே அனைத்துப் படைப்புகளினதும் இறுதி இலக்கு. மேலை நாடுகளைப் பொறுத்தவரை, கலைப்படங்கள் விருதுகளைப் பெறுகிறதோ இல்லையோ குறிப்பிட்ட காலத்துக்குள் திரையரங்குகளுக்கு வந்துவிடுகின்றன.

கலைப்படங்களுக்கும் வர்த்தகப் படங்களுக்கும் என வெவ்வேறு பிளவுபட்ட ரசிகப் பிரிவுகள் அங்கில்லை. காரணம், படத்தின் உருவாக்கத் தரத்திலும் திரைக்கதை ஒழுங்கிலும் அவை இணை யானவை. அதன் காரணமாக, ரசனை சார்ந்த பாரதூரமான குழப்பங்கள் அங்கிருக்கும் பார்வையாளருக்கு ஏற்படுவதில்லை.

முக்கியமாக, கண்மூடித்தனமான நாயக வழிபாடு இல்லை. ‘கட் அவுட்’டுக்குப் பாலாபிஷேகம் செய்யும் ரசிகப் பட்டாளம் இல்லை. தமது திரைப் பிரபலத்தை மட்டுமே முதலீடாக வைத்து அரசியலில் விளையாட விரும்பும் நபர்களை அவர்கள் ஆதரிப்பதில்லை. உலகை ஆயுதங்களால் தகர்த்தெறிய விரும்பும் கதைகளை உமிழும் ஹாலிவுட் சாசகப் படங்களின் தீவிர ரசிகர்கள்கூட இத்தகைய மனப்பக்குவம் வாய்த்தவர்கள்தாம்.

எதற்காக இந்த முயற்சிகள்? - ஒப்பீட்டளவில், இந்தியப் பார்வையாளர்களுக்கு, குறிப்பாக, அதீதப் பராக்கிரமம் காட்டும் சாகச நடிகரைத் தெய்வத்துக்கு இணையாக மதிக்கும் தமிழ்ப் பார்வையாளர்களுக்குத்தான் ரசனை சார்ந்த கூறாய்வு வலுவாகத் தேவைப்படுகிறது. அவர்களது ரசனையைத் தரமுயர்த்தும் பொருட்டு, பல படைப்பாளர்கள் இங்கே மிகவும் பாடுபட்டிருக்கிறார்கள். பாலுமகேந்திராவின் ‘வீடு’ மற்றும் ‘சந்தியா ராகம்’ ஏன் வரவேண்டும்? ருத்ரய்யாவின் ‘அவள் அப்படித்தான்’ ஏன் வரவேண்டும்? மகேந்திரனின் ‘உதிரிப்பூக்கள்’ ஏன் வரவேண்டும்? பாலச்சந்தரின் ‘ஒரு வீடு இரு வாசல்’ ஏன் வரவேண்டும்? இன்னும்கூட எடுத்துக்காட்டப் பல படங்கள் வந்திருக்கின்றன. அதுவரையிலான வழமைப் பட்ட ரசனையிலிருந்து மேலான நகர்வுக்குப் பார்வையாளர்களை உள்படுத்தவே இந்த முயற்சிகள் இங்கே அரங்கேறின.

வெகுஜன சினிமா தளத்தில் நின்றுகொண்டே கமல்ஹாசனும் பல பரிசோதனை முயற்சிகளைத் துணிச்சலாக மேற்கொண்டார். அவரது முதல் தயாரிப்பில் வெளிவந்த ‘ராஜ பார்வை’ படத்தில் கதாநாயகனைக் கண்பார்வையற்றவனாகத் தோன்றச் செய்தார். தமிழ் சினிமாவில் நிகழாத சாதனையாக உரையாடலே இல்லாமல் ‘பேசும் படம்’ என்கிற மௌனப் படத்தை எடுத்தார். ‘ஹே ராம்’ படத்தை இந்திய அளவிலான கதைக்கூறுகளுடன் இணைத்துத் தந்தார். புதிய அம்சங்களால் நேரப்போகிற இழப்புகளைக் கருத்தில்கொள்ளாமல் மக்களின் ரசனை மேம்படவேண்டும் என்கிற ஒற்றைக் குறிக்கோளில் நிகழ்த்தப்பட்டவை மேற்குறிப்பிட்ட படங்கள்.

சிவகார்த்திகேயன் - சூரிக்கு என்ன அவசியம்? - ரசனையில் தேர்ச்சி பெறாதிருக்கும் பார்வையாளருக்கு, எந்தவொரு புதிய அம்சமும் அணுகலும் கொண்ட படம் அதிர்ச்சியை உண்டுபண்ணவே செய்யும். மண்ணுக்கு வலிக்கும் என்றெண்ணினால் குழியெடுத்து விதையிட முடியாது. அத்தகைய படத்தை ஏற்பதும் நிராகரிப்பதும் பார்வையாளரது அறிவுப் பக்குவத்தைப் பொறுத்தது. அவர்களது தனிப்பட்ட உரிமையும்கூட. அந்தப் படத்தை அவர்களுக்குக் காட்டக் கூடாது, விரும்பினால் ஓடிடியில் பார்த்துக்கொள்ளட்டும் என்று மிகையுரிமை எடுத்துக் கொண்டுத் தீர்ப்புக் கூறுவது ஆரோக்கியமான போக்கல்ல.

பார்வையாளரது பணம் நட்டமடைவதாகக் கரிசனம் காட்டுவது இன்னும் அபத்தம். ஏன், நம்பிப்போய் பார்த்த வெகுஜன ஃபார்முலா படங்களில் பல நமது பணத்தைப் பிடுங்கிக்கொண்டதில்லையா? ‘எதிர்பார்த்த மாதிரிப் படம் இல்லை, பணம் வேஸ்ட்’ என்கிற குறைகூறும் பார்வையாளர்களது விமர்சனங்கள் காலம் காலமாக வழக்கில் இருப்பவைதானே. அப்படியொரு குற்றச் சாட்டை ‘கொட்டுக்காளி’ படத்தின்வழி வைப்பதும், அதன் திரையரங்க வரவை நிராகரிப்பதும் நியாயமானதல்ல.

வழக்கமாகப் பார்த்த படங்களைவிட ‘கொட்டுக்காளி’ போன்ற கலை அல்லது விருதுப் படங்கள் பார்வையாளருக்கு ஏதேனும் ஒரு ரசனை உயர்வை, புதிய திரை அனுபவத்தைத் தரவே முயலும். அவ்வகையில், அப்படத் துக்காகப் பணத்தை இழப்பதை ஒரு மாற்றுக் கலைவடிவத்துக்கான சிறு பங்களிப்பாகக்கூட நாம் பெருந்தன்மை யாகக் கருதிக்கொள்ளலாமே. இதே வெகுஜன சினிமாவில் நட்சத்திர நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் இதைத் தயாரிக்க முன்வந்தது, சூரி அதில் நடித்தது ஆகியன, இணை சினிமாவும் நம் பார்வையாளர்களுக்குச் சென்றுசேர வேண்டும் என்கிற நல்ல எண்ணத்தால் அல்லவா?

மலையாள சினிமாவின் தேர்ச்சி: மலையாள சினிமா இன்றைக்கு ஓர் ஆரோக்கியமான போக்கில் நடைபோடு வதற்கு வித்திட்டவர்களில் ஒருவர் அடூர் கோபாலகிருஷ்ணன். அவருடைய படங்களனைத்தும் உலக விருதுகளையும் அதேவேளையில் திரையரங்க வெற்றி களையும் பெற்றவை. உலகப் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் பிரசன்ன விதானகேவினது படங்களும் அத்தகைய பண்பை இலங்கையில் நிகழ்த்திக் காட்டியவை. இவ்விரு நிலப்பரப்புகளிலுமே திரை ரசனை மேலோங்கியிருப்பதற்கு விருதுப்படங்கள் திரையரங்குகளுக்கு வந்து மக்களைச் சந்தித்த அனுபவக் கூறுகளால் விளைந்தவை.

மேலதிகமாக, படைப்பு என்பது மக்களுக் கானது, அவர்களது விழிப்புணர்விற்கானது என்கிற கோட்பாட்டை மையமாக வைத்து இயங்கும் புரட்சிகரக் கலையுலகமும் ஒன்றுண்டு. இந்தப் பேருண்மையின் அடித்தளத்தில் நின்றுதான், மலையாளத் திரை மேதை ஜான் ஆப்ரஹாம் ஒவ்வொரு கிராமமாகச் சென்று மக்களிடம் பணம் பெற்று தன்னுடைய உலகப் புகழ் பெற்ற ‘அம்ம அறியான்’ திரைப்படத்தை எடுத்தார். பணம் கொடுத்த மக்களுடைய வீதிகளுக்கே சென்று அப்படத்தைத் திரையிட்டுக் காட்டினார்.

கலைப்படைப்பு மட்டுமே விழிப்புணர் வையும் அதன் வழியான அரசியலுணர்வையும் வழங்கி, மேலும் அர்த்தத்தை நோக்கி நமது இருப்பை நகர்த்துவது. பார்வையாளர்களின் ரசனையையும் பணத்தையும் சுரண்டும் பெரும்பான்மை வெகுஜனப் படைப்புகளுக்கு மத்தியில், அதிலிருந்து விடுபடும் உரிமை கொண்ட பார்வையாளருக்கான வாய்ப்பை யாரேனும் மறுத்தால், அது மனிதநேயத்தைத் தனது மூல ஊற்றாகக் கொண்ட படைப்பின் மீதான கருணையற்ற தாக்குதலாகத்தான் கலை வரலாற்றில் கறை படிந்து நிற்கும்.

- viswamithran@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in