

நரைத்த தலையுடன் கம்பு ஊன்றி, ‘சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா?’ எனக் கேட்ட முருகனி டம் ‘பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா தமிழ் ஞானப் பழம் நீயப்பா’ என பாடிய ஔவையைத் திரைப்படம் வாயி லாக அறிந்திருப்போம். வரலாற்றுரீதியாக ஐந்து, ஆறு ஒளவையார் வாழ்ந்திருக்கக் கூடும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
பொதுப் புத்தியில் கேள்விக் குறிபோல் திட்டமிட்டு பதிவேற்றப்பட்ட ஔவையின் உருவத்தை ஆச்சரியக் குறியைப் போல் நிமிர்த்துகிறது கவிஞர் இன்குலாப் எழுதி, அ.மங்கை நெறியாள்கை செய்திருக்கும் ‘ஔவை’ நாடகம்.
அப்பாஸ் கல்சுரல், பிரம்ம கான சபா, பார்த்தசாரதி சுவாமி சபா போன்றவற்றின் ஆதரவோடு ஷ்ரத்தாவின் தயாரிப்பாக சிவகாமி பெத்தாச்சி அரங்கில் சமீபத்தில் அரங்கேறியது மரப்பாச்சி குழுவின் ‘ஔவை’ நாடகம்.
சங்கப் பாடல்களையொட்டி, குறிஞ்சிப் பாட்டு போன்ற நாடகங்களையும் எழுதியிருந்த கவிஞர் இன்குலாப், முதன்முதலாக ‘ஔவை’ நாடகம் அரங்கேற்றப்பட்ட போது “ஔவை மீது சுமத்தப்பட்ட முதுமையைக் களைவதில் தொடங்கி, ஒடுங்க மறுக்கும் ஒரு பெண் குரலைக் கேட்கச் செய்வதுவரை இந்நாடகம் காட்சிப்படுத்தியது. முதுமை இயல்பு. அழகியது. ஆனால் இங்கே முதுமை என்பது ஆடவர் தருமத்தின் பாடமாகப் பார்க்கப்படுவதால் அந்த முதுமை களையப்படுகிறது” என் றார். ‘ஆத்திசூடி’ பாடிய ஒளவை யாராக இருக்கும்? அரிய நெல்லிக்கனியை அதியமானிடம் இருந்து பெற்ற ஔவை யாராக இருக்கும் என்னும் கேள்விக்கான பதில், நாடகக் காட்சி வாயிலாகவும் கதாபாத்திரங்களின் உரையாடல் வாயிலாகவுமே இயல்பாக ரசிகர்களுக்கு கடத்தப்படுவது நாடகத்தின் சிறப்பு. விளையாட்டு, பாட்டு, கள் குடுவை, களி நடனம் என ஔவையின் அறிமுகமே தமிழ்த் துள்ளல்.
சாதாரண கொச்சை கலந்த பேச்சுமொழியில் அமைந்த வசனங்களையும் ஆங்கிலம் கலந்த ‘தமிங்கிலீஷ்’ வசனங்களையும் மட்டுமே கேட்டு அலுத்துப்போன ரசிகர்களின் காதுகளில், “ஔவையே… நீ மட்டும் தகடூரில் இருந்தால், வாளுக்குப் பதில், உன்னுடைய யாழே பகைவர்களுக்கு பதில் சொல்லும்” என்பது போன்ற வசனங்கள் தேன் பாய்ச்சின. எளிய பொருட்கள், மிதமான பாவனை, செறிவூட்டும் வசனங்கள், நளினமான உடைகள், ஒளி அமைப்பு, இசை (சந்திரனின் முகவீணை, நெல்லை மணிகண்டன், சத்ய ஷரத்தின் பறை) இவற்றைக் கொண்டே சங்ககாலக் காட்சிகளை மேடையில் நிகழ்கால காட்சிகளாக தத்ரூபமாக தரிசனப்படுத்துகிறார்கள். போர்மேகம் சூழ்ந்த தகடூரை குறிப்பால் உணர்த்தும் அந்த நடுகற்கள் காட்சி ஒன்றேபோதும்.
அலெக்சிஸ், அஸ்வினி, ஆயிஷா, சௌமியா, முத்துமூர்த்தி, தமிழரசன், தமிழரசி, யாழினி, ரெஜின் ஆகியோர்‘ஒளவை’ நாடகத்தில் கவனம் ஈர்த்தனர்.
ஔவையின் மூலமாக பாணர்குலத்தின் வாழ்க்கை முறை, தமிழ்ச் சிந்தனை மரபில் வேரூன்றிய ஐந்திணைக் கூறுகள் சார்ந்த பெண் உலகம் என இரண்டையும் அற்புதமாக நாடகத்தில் தன்னுடைய நேர்மையான நெறியாள்கையின் மூலமாக வெளிப்படுத்துகிறார் அ.மங்கை. அதியமானின் மறைவுக்குப் பின், அவரின் நடுகல்லின் முன்பு ஔவை அமர்ந்து,
‘சிறிய கள் பெறின் எமக்கு ஈயும் மன்னே/பெரிய கள் பெறின்/ யாம் பாடத் தாம் மகிழ்ந்து உண்ணும் மன்னே’
- என்று பாடுவது உருக்கம். சங்ககால ஔவை பிற்கால ஔவையாரை சந்தித்து உரையாடும் காட்சி, ஆணாதிக்கவாதிகளை செய்யும் பகடி!