அஞ்சாத சிங்கம்

அஞ்சாத சிங்கம்
Updated on
1 min read

சீக்வல்கள் (Sequels) எனப்படும் ஒரு திரைப்படத்தின் தொடர்ச்சி,ஹாலிவுட்டில் மிகப் பிரபலம். வெற்றிபெற்ற ஒரு திரைப்படத்தை ஒட்டி, அதன் தொடர்ச்சியாகவோ, இடம்பெற்ற பாத்திரங்களின் தொடர்ச்சியாகவோ அடுத்தடுத்து பாகம் 1, 2 எனத் தொடர்ந்து எடுத்து கல்லா கட்டுவது அங்கே தொன்றுதொட்டுத் தொடரும் வழக்கம்.

இதில் இருப்பது முழுக்க முழுக்க வணிக நோக்கம் மட்டும்தானே தவிர வேறொன்றுமில்லை. பணம் கொட்டுமென்றால் ஹாலிவுட்டைப் பின்பற்றி வரும் பாலிவுட்டின் கமர்ஷியல் மேதைகள் இதைப் பின்பற்றாமல் இருப்பார்களா என்ன? இன்று பாலிவுட்டில் வெளியாகும் சீக்வல் திரைப்படம் சிங்கம் ரிட்டர்ன்ஸ்

சூர்யா நடித்து, வசூலில் சக்கைப் போடு போட்ட தமிழ்த் திரைப்படம்தான் சிங்கம். அதுதான் அஜய் தேவ்கன் நடிக்க 2011-ம் ஆண்டு வெளியாகி 100 கோடிக்கு மேல் வசூலித்த இந்தி(ய)ச் சிங்கம். பாலிவுட் ஊடகங்கள் இந்திச் சிங்கத்தின் பிடறியைத் தனது விமர்சனங்களால் வெட்டித் தள்ளின.

அதனால் என்ன? ரசிகர்களின் பொழுதுபோக்கு ரசனைக்கு முழுமையாகத் தீனி போட்டதால் பாக்ஸ் ஆபீஸில் கம்பீர நடைபோட்டது. அஜய் தேவ்கன், தன் பங்கிற்கு உடம்பை முறுக்கேற்றி, நெஞ்சு விடைக்க வசனம் பேசி, ஒன்றரை டன் வெயிட்டை ஓங்கி அடித்ததில் இந்திச் சிங்கத்தின் இரண்டாம் பாகத்தை ஆவலுடன் எதிர்பார்க்க ஆரம்பித்தார்கள் ரசிகர்கள்.

ஆனால் இன்று வெளியாகும் ‘சிங்கம் ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்திற்கும், சென்ற ஆண்டு தமிழில் வெளியான சிங்கம் பாகம் 2 படத்திற்கும் எவ்விதச் சம்பந்தமும் இல்லை எனக் கூறப்படுகிறது.

இந்தி முதல் பாகத்தில் இடைவேளைக்குப் பிறகு வரும் காட்சிகளை மாற்றியமைத்திருந்த இயக்குநர் ரோஹித் ஷெட்டி, இதில் முழுக்க முழுக்க, கறுப்புப் பணப் பிரச்சினையை வைத்துப் புது கதையைச் சொல்ல முயன்றுள்ளாராம். அதேநேரம், பஞ்ச் டயலாக், புவியீர்ப்பு விசைக்குச் சவால் விடும் சண்டைக் காட்சிகள், வெடித்துப் பறக்கும் வாகனங்கள் எனக் கெத்து காட்டும் ஹீரோயிசத்தில் தமிழ் சிங்கம் இரண்டாம் பாகத்துக்கு எந்த விதத்திலும் சளைக்காமல் எடுக்கப்பட்டிருக்கிறதாம்.

சென்னை எக்ஸ்பிரஸ், போல் பச்சன், கோல்மால் 3 என ரோஹித் ஷெட்டி இயக்கிய படங்கள் எல்லாமே பாலிவுட்டின் மசாலா ஃபார்முலா அடிபிடித்துக் கமறினாலும் வெற்றி ருசி பார்த்தவை. பெருவாரியான ரசிகர்களின் நாடித் துடிப்பையே பாலிவுட்டின் வெகுஜன ரசனை என்று அழுத்தமாக நம்பும் ரோஹித், விமர்சகர்களின் வசவுக்கெல்லாம் அஞ்சுவதில்லை.

அதேபோல் விமர்சனங்கள் இவரது திரைப்படங்களை எவ்வளவு புரட்டி எடுத்தாலும், அவை வசூலில் விஸ்வரூபம் எடுத்துவிடுகின்றன. சிங்கம் ரிட்டர்ன்ஸ் முந்தைய பாகத்தின் வசூலை முறியடிக்குமா என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in