

அர்ஜூன் கபூர், பர்னீத்தி சோப்ரா நடிக்கும் ‘நமஸ்தே இங்கிலாந்து’ படத்தில் இடம்பெறப்போகும் ‘து மெரி மெய்ன் டேரா’ பாடலுக்காக 5.5 கோடியைச் செலவழித்திருப்பதாக இதன் தயாரிப்பாளர், இயக்குநர் விபுல் ஷா கூறியிருக்கிறர். பஞ்சாபில் தொடங்கும் இந்தப் பாடல் வங்கதேச எல்லை, டாகா, ப்ருசல்ஸ், பிரான்ஸ் நாட்டின் கலாய்ஸ் செக்-போஸ்ட், பாரிஸ் உட்பட 18 முதல் 20 இடங்களுக்குப் பயணப்பட்டு கடைசியில் லண்டனில் முடிகிறதாம். 11 நாட்கள் படமாக்கப்பட்டிருக்கும் இந்தப் பாடல்தான் இந்திய சினிமாவில் தற்போதைக்கு அதிக செலவில் படமாக்கப்பட்டிருக்கும் பாடல் என்று கூறியிருக்கிறார்.
அகமதாபாத் கிழக்கு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் பாலிவுட்டின் பிரபல நடிகருமாக இருப்பவர் பரேஷ் ராவல். இவர் தற்போது பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கவிருக்கிறார். 1993-ல் வெளியான ‘சர்தார்’ படத்தில் சர்தார் வல்லபாய் படேலாக நடித்ததன் மூலம் சர்வதேச அளவில் கவனம்பெற்றார் பரேஷ். இம்மாதம் வெளியாக இருக்கும் ‘சஞ்சு’ என்ற இந்திப் படத்தில் சஞ்சய் தத்தின் தந்தை சுனில் தத்தாக நடித்திருக்கிறார். ‘வோ சொக்ரி’, ‘சார்’ ஆகிய படங்களுக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது பெற்றிருக்கும் பரேஷ், நரேந்திர மோடியாக நடிக்கும் செய்தி சலசலப்புகளை உருவாக்கி இருக்கிறது!
நவாஸுதீன் சித்திக் நடித்திருக்கும் ‘மண்டோ’ திரைப்படம் சிட்னி திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது. இந்திய - பாகிஸ்தான் பிரிவினையை தன்னுடைய படைப்புகளில் பதிவு செய்த உருது எழுத்தாளரான சதத் ஹசன் மண்டோவின் வாழ்க்கை வரலாற்றை நடிகை, இயக்குநர் நந்திதா தாஸ் திரைப்படமாக்கி இருக்கிறார்.
தொகுப்பு: சு. அருண் பிரசாத்