

ஐ படத்தின் படப்பிடிப்புக்கு வெற்றிகரமாக பூசணிக்காய் உடைத்துவிட்ட சந்தோஷத்துடன் பிறந்தநாளைக் கொண்டாடி முடித்திருக்கிறார் இயக்குநர் ஷங்கர். தனக்கு நெருக்கமான நண்பர்களை மட்டும் பிறந்தநாள் பார்ட்டிக்கு அழைப்பதை வழக்கமாக வைத்திருக்கும் இவர், இம்முறை மறக்காமல் அழைத்தது நடிகர் விஜயை. கத்தி மீதான சர்ச்சை ஒரு பக்கம் கழுத்தை நெரித்தாலும், அதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, ஷங்கருடன் அளவளாவித் திரும்பியிருக்கிறார் விஜய்.
பழகுவதில் மென்மை, படப்பிடிப்பில் அமைதியான ஆனால் அசராத மனிதர் என்று பெயர் வாங்கியிருக்கும் ஷங்கர் அடுத்து எந்திரன் இரண்டாம் பாகத்தைக் கையிலெடுக்க முடிவு செய்து ரஜினியிடமும் பேசினாராம். ஆனால் லிங்காவுக்குப் பிறகு கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கொள்ள ரஜினி முடிவு செய்திருப்பதாகவும், அதனால் ரஜினி தயாராகி வருவதற்குள் விஜயை வைத்து ஒரு ஆக்ஷன் படத்தை முடித்துவிடலாம் என்று ஷங்கர் முடிவு செய்திருப்பதாகவும் கூறுகிறார்கள்.
இது பற்றி விஜய் வட்டாரத்தில் விசாரித்தால், கத்தியை முடித்த கையோடு விஜய் அடுத்து நடிக்க இருப்பது சிம்புதேவன் இயக்கத்தில் என்கிறார்கள். இதில் விஜயுடன் ஸ்ருதி ஹாசன், சுதீப், ஸ்ரீதேவி ஆகியோர் நடிக்கும் முழு நீள ஃபாண்டஸி படமாம். அதனால் இதற்கு விஜய் ஆறு மாதம் ஒதுக்கி இருக்கிறார், முதல் கட்டப் படப்பிடிப்பு சாலக்குடியில் நடக்க இருக்கிறதாம். இந்தப் படத்துக்குப் பிறகே விஜய் தனது அடுத்த படத்தை முடிவு செய்வார் என்கிறார்கள்.
ஷங்கர் வட்டாரத்தில் விசாரித்தால் எந்திரன் பார்ட் 2 என்கிற திட்டத்தையே இப்போதைக்கு கையில் எடுக்கப் போவதில்லையாம் அவர். வேறொரு கதையை தீவிரமாக உருவாக்கிக்கொண்டிருக்கிறார். அதற்கான டிஸ்கஷன் வேலைகள் தொடங்கிவிட்டன. இந்தக் கதை விஜய்க்கும் அற்புதமாகப் பொருந்தக்கூடியதுதான் என்று பொடி வைக்கிறார்கள்.