

மேற்கத்திய நாடுகளில் காட்சி ஊடகமாக இருக்கும் திரைப்படங்கள், இந்தியாவில் வெறும் பேச்சு ஊடகமாகவே இருப்பதில் மகேந்திரனுக்கு பெரும் அதிருப்தி. அதன் வெளிப்பாடாக, ‘துக்ளக்’ இதழில் ஒரு விமர்சகராக அவர் எழுதிய கட்டுரைகள் மிகவும் பிரசித்தி பெற்றவை.
விமர்சகர்கள் இயக்குநர்களாவது வரலாற்றில் புதிதல்ல. குறிப்பாக ‘பிரெஞ்சு புதிய அலை’யின் கோடார்ட், ட்ரூஃபோ போன்ற உலகப் புகழ்பெற்ற இயக்குநர்கள் தொடக்கத்தில் Cahiers du Cinema போன்ற பத்திரிகைகளில் திரை விமர்சனம் எழுதியவர்களே!
‘Film Appreciation’ அல்லது Movie review என்பது Roast என்கிற வறுத்தெடுக்கும் அடிமட்ட பாணிக்கு நம்மூரில் மாறிப்போயிருக்கிறது. அதற்கு மாறாக, விமர்சனத்தை ஒரு கலையாகப் பயின்று, ஒரு சிறந்த திரைப்படம் எப்படியிருக்க வேண்டும் என்கிற இலக்கணமும் நுட்பமும் அறிந்த ஒருவர், அல்லது ஒரு விமர்சகர், மாற்றம் நிகழாது போன அதிருப்தியால் இறுதியில் தானே திரைப்படம் எடுக்க முன்வந்தால் என்ன மாதிரியான படங்கள் பார்வையாளர்களுக்குக் கிடைக்கும் என்பதற்கு நமது தமிழ் சினிமாவிலேயே மகேந்திரன் சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறார்.
கற்பனைக்கு இடமளிக்கும் காட்சிமொழி: அவருடைய காட்சிமொழி, கதை மாந்தர் குறித்துக் கடந்த சில வாரங்களாக வாசித்திருப்பீர்கள். அதைவிடுத்து, அவருடைய படங்களில் நினைவுகூர வேண்டிய மற்ற கலையம்சங்களில், கூர்மையான கத்தரிகளுடன் வெட்டப்பட்ட அவருடைய திரைப் படங்களின் நுட்பமான படத் தொகுப்பு முறையையும் இங்கே பேச வேண்டியது அவசியமாகிறது.
குறிப்பாக, அவருடைய திரைப் படங்களின் இறுதிக்காட்சிகள். அவை எப்போதும் நீண்டதாகவும் மிகுந்த நுணுக்கத்துடன் வெட்டப்பட்ட காட்சிகளாகவும் இருக்கும். அவற்றின் வடிவ மாதிரியும் (Pattern) ஒன்று போலிருக்கும். அதைவிட Parallel Editing என்று சொல்லப்படும் படத் தொகுப்பு முறையும் அவருடைய திரைப்படங் களில் தொடர்ந்து பயன்படுத்தப்படும்.
அவரது காலம் வரையிலான திரைப்படங்களில் காண்பிக்கப்பட்ட ஒரு காட்சி முறையை, முற்றிலும் வேறு வடிவத்தில் காட்சிப்படுத்தியதில் மகேந்திரன் ஒரு முன்னோடி.
எடுத்துக்காட்டாக, விஜயனும் சரத் பாபுவும் சண்டையிடுவதை நேரடியாகக் காண்பிக்காமல் பின்னணி இசையின்றி, வெறும் காற்றின் ஓசைப் பின்னணியில், புற்களையும் ஆற்றையும் காண்பித்து ஆற்றில் கைகழுவும் சரத்பாபுவின் முகத்தில் இருக்கும் ரத்தம், அவரது சட்டையில் படிந்திருக்கும் மண் கறை ஆகியவற்றின் மூலம் அங்கு ஒரு பெரிய சண்டை நிகழ்ந்திருப்பதைக் காண்பித்திருப்பார்.
நேரடியாகக் காட்சிப்படுத்துவதை விட, இப்படியாகக் காட்சிப்படுத்துவதில் அவர்களுக்குள் சண்டை எப்படி யெல்லாம் நடந்திருக்கும் என்று நம்மை ஊகிக்க வைத்துவிடுகிறார் மகேந்திரன். பார்க்கும் காட்சிகளை விட மனத்திரையில் நாம் கற்பனை செய்துகொள்ளும் காட்சிகள் தரும் அனுபவம் அலாதியானது. அதனால் தான் புத்தகங்களைத் திரைப்படங் களால் ஒருபோதும் வெல்ல முடிவதில்லை.
இசையும் படத்தொகுப்பும்: தன்னுடைய மனைவியின் தங்கையான செண்பகத்தை (மது மாலினி) திருமணம் செய்துகொள்ள முடியாது என்று உறுதியான பிறகு, சுந்தரவடிவேலு செண்பகத்தின் சேலையைக் கொஞ்சம் கொஞ்சமாக உருவியெறிந்து ஊராரின் கண்களுக்கு அவளைக் களங்கப்பட்டவள் எனக் காட்ட முயல்வான்.
அந்தக் காட்சி நிகழ்ந்துகொண்டிருக்கும் அதே சமயம், செண்பகத்தின் வரவுக்காக வயல்வெளியில் காத்திருக்கும் காதலன் பிரகாஷ் (வெங்கட்ராமன்) ஒரு பூவும் சில இலைகளும் கொண்ட ஒரு கொத்தை, கொஞ்சம் கொஞ்சமாகப் பிய்த்து எடுத்துக்கொண்டிருப்பார். உண்மையில் இரண்டும் வேறு வேறு காட்சிகள்.
காதலியின் வரவுக்கான காத்திருப்பின் அழுத்தத்தினால் அவன் இலைகளைக் கொய்கிறான். படத்தொகுப்பில் தொடர்பில்லாத இரு வேறு காட்சிகளையும் அடுத்தடுத்துக் காண்பிப்பதன் மூலம், ஒரு மலரை நிர்வாணப்படுத்துவது போல் பெண்ணை நிர்வாணப்படுத்துவதாக ‘குலஷோவ் விளைவு’ (Kuleshov effect) எனும் படத்தொகுப்பு முறை இக் காட்சியில் பயன்படுத்தப்பட்டி ருக்கும்.
இசையும் படத்தொகுப்பும் கைகோக்கும் இடங்கள், காட்சிகளின் தீவிரத்தன்மையை இன்னும் அதிகப் படுத்தும் வலிமை கொண்டவை. அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது மகேந்திரனின் திரைமொழி. திரைக்கதையின் உச்சக்கட்ட நிலைக்கு நம்மை அழைத்துச்சென்று, அதிலிருந்து மெல்ல நம்மை இறுதிக் காட்சிக்கு நகர்த்துவது மகேந்திரனின் பாணி. அதற்குத் தகுந்த வகையில் இளையராஜாவும் துல்லியமான இசையைத் தந்திருப்பார்.
எடுத்துக்காட்டாக, மேள தாளம் ஒலிக்கும் நீண்ட பின்னணி இசையில் தப்பியோட வழியின்றி ஊர்க்காரர்கள் பின்வர, வேறு வேறு கேமரா கோணங்களில் தன் முடிவை நோக்கி முன்னால் நடக்கும் விஜயன், ஊழிபோல் சுழித்தோடும் ஆற்றின் கரை முடிந்ததும் முன்னேறி நடக்க நிலமின்றிச் சட்டென்று நின்றுவிடுவார். அப்போது அந்த ஆக்ரோச இசையும் நின்றுவிட, ஆற்று வெள் ளத்தின் ஓசை உருவாக்கும் அமைதி விஜயனுக்குத் தன் முடிவை உணர்த்தும்.
எளிய குறியீடுகள்: ‘பூட்டாத பூட்டுக்கள்’ திரைப்படத்தில், தன் பாலியல் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாத கணவனை விட்டு மனைவி ஓடிப்போகிற செய்தி ஊரெல்லாம் பரவுகிறது. இதை, ஒரு பெண், இன்னொரு பெண்ணிடம் சொல்வது, வாசலில் சுத்தம் செய்யும் கரங்கள் நிற்பது, குடம் நிரம்புவது, ஒருவன் பல் துலக்குவது, யாருமற்று வாசலில் கிடக்கும் துடைப்பம், குழாயடியில் நிரம்பி வழியும் குடம் எனக் காட்சிகளைத் தொகுத்து, அதன் பின்னணியில் தாளமடிக்கும் இசையை இணைப்பதன் மூலம், பறையடித்து ஊருக்கெல்லாம் அறிவிப்பது போல் பெண்கள் எப்படி ஊரெங்கும் செய்தியைப் பரப்புகிறார்கள் என்று அக்காட்சியைப் படத்தொகுப்பின் வழியே வடிவமைத்திருப்பார்.
ஓடிப்போய் இறுதியில் திரும்பி வருகிற கன்னியம்மா (சாருலதா), உப்பிலியை (ஜெயன்) எதிர்நோக்க முடியாமல் சுவரைப் பார்த்தபடி நிற்பார். கன்னியம்மா மீது விழுந்திருக்கும் தூசியைத் தட்டிவிட்டு உள்ளே அழைத்துச்செல்வார் உப்பிலி. ஊரே அவளுக்கு எதிராக நிற்கும்போது, ‘உன் மீது ஊர் சுமத்தும் களங்கம் எனக்குத் தூசியைப் போன்றது’ என்று கணவன் தெரிவிப்பது போல் எளிய குறியீடுகள் கொண்ட காட்சியின் வழி உணர்த்திவிடுவார்.
அதே வகையில் பெண் அரசியலை ‘உதிரிப்பூக்க’ளில் நுட்பமாகக் கையாண்டிருப்பார். “இன்னொரு மனைவி வேண்டும் என நீங்கள் கேட்பதுபோல, இன்னொரு கணவர் வேண்டும் என நான் கேட்டால் நீங்கள் ஒப்புக்கொள்வீர்களா?” என லட்சுமி (அஸ்வினி) நினைப்பதை முதலில் உதட்டில் சொல்லிவிட்டு, அடுத்த ஷாட்டை உறைய வைத்து (Freezed Frame) “இப்படிச் சத்தம் போட்டுத் திருப்பிக் கேட்க எந்தப் பெண்ணுக்கும் வழி இல்லையே” என்கிற வசனத்தை லட்சுமியின் மனக் குரலாக அக்காட்சியின் மீது ஒலிக்கவிட்டிருப்பார்.
இவ்வளவு முற்போக்கான காட்சிப்படுத்துதல் என்பது அன்றைய காலகட்டத்தில் வங்காளத்தில்கூட நிகழ்த்தப்படவில்லை என்பதே உண்மை. ஐரோப்பிய நாடுகளில் ‘பிரெஞ்சு புதிய அலை’ சினிமா, அப்பிரதேசம் முழுக்க நிலைபெற்றிருந்த முந்தைய திரைப்படங்களின் திரைமொழியை முற்றாக மாற்றியமைத்தது.
அந்த வகையில் இந்தியாவின் வங்காளத்தில் சத்யஜித் ராய், மிருணாள் சென், ரித்விக் கட்டாக் போன்ற இயக்குநர்களின் மூலம் புதிய அலை ஏற்படுத்தப்பட்டிருந்தாலும் தமிழகத்தில் அப்படியொரு புதிய அலையின் அடித்தளத்தை அமைத்தவர் மகேந்திரன்.
மகேந்திரன் தனது மறைவுக்கு முன் ஒரு பேட்டியில், “இவ்வளவு ஆண்டுகள் கழித்தும் கண்களை மூடிக்கொண்டு காதால் கேட்கின்ற வசனங்களை வைத்தே இன்று வெளியாகிற பெரும் பாலான படங்களின் முழுக்கதையை என்னால் சொல்ல முடிகிறது!” என வருந்தியிருக்கிறார். அவரது வருத்தத்தைப் போக்கும் தலைமுறை தமிழ் சினிமாவில் உருவெடுக்கும்.
- கட்டுரையாளர், திரைப்படத் தொகுப்பாளர்.
(மனதோடு மகேந்திரன் 85 நிறைந்தது).