காளி- விமர்சனம்

காளி- விமர்சனம்
Updated on
2 min read

மெரிக்காவில் பிரபல மருத்துவராகப் பணிபுரிபவர் விஜய் ஆண்டனி. ஒரு குழந்தையை ஜல்லிக்கட்டு காளை துரத்துவது போலவும், பாம்பு கொத்த வருவது போலவும் அவருக்கு திரும்பத் திரும்ப கனவு வருகிறது. இந்நிலையில் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு, அவரது அம்மா மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். தனது ஒரு சிறுநீரகத்தை அம்மாவுக்கு கொடுக்க முன்வருகிறார் விஜய் ஆண்டனி. அப்போதுதான், அவர்கள் உண்மையான பெற்றோர் அல்ல என்பது தந்தை மூலம் தெரியவருகிறது. இந்தியாவில் ஒரு காப்பகத்தில் இருந்து தன்னை தத்தெடுத்து வளர்த்துள்ளனர் என்பதும் தெரிகிறது. தன்னைப் பெற்றவர்கள் யார்? தன்னை அவ்வப்போது துரத்தும் கனவுக்கு காரணம் என்ன? இந்தக் கேள்விகளுக்கு விடை தேடி இந்தியா வருகிறார். இங்கு வந்ததும் பெற்றோரைக் கண்டுபிடிக்க அவர் முன்னெடுக்கும் முயற்சிகள் என்ன? அவர்களை சந்தித்தாரா? இல்லையா? என்பதுதான் மீதிக்கதை.

அமெரிக்கா, அங்கு பரபரப்பாக இயங்கும் மருத்துவப் பணிச் சூழல் என்று வேகமெடுத்து திரைக்கதை நகரத் தொடங்குகிறது. பெற்றோரைத் தேடி தமிழகம் வரும் விஜய் ஆண்டனி முதல் வேலையாக, தனது கனவில் வந்த இடத்தைக் கண்டுபிடிக்கிறார். அந்தப் புள்ளியில் இருந்து, பெற்றோரைத் தேடுவதற்கான பயணத்தை தொடங்குகிறார். நல்ல விறுவிறுப்பான கதையாகத் தெரிந்தாலும், விஜய் ஆண்டனி அடுத்தடுத்து எடுக்கும் முயற்சிகளில் எந்தவித திருப்பங்களும் இல்லை. காட்சிகளிலும் பெரிதாக புதுமை இல்லாததால் இயக்குநர் கிருத்திகா உதயநிதியின் திரைக்கதை நகர்வு விறுவிறுப்பை இழக்கிறது.

படத்தில் 3 பிளாஷ்பேக்குகள். பிளாஷ்பேக் கதாபாத்திரங்களிலும் விஜய் ஆண்டனியே வருகிறார். தாடி வைத்த முகம், கிளீன் ஷேவ் முகம், ஆடைகள் ஆகியவை மட்டுமே மாறுகின்றன. உடல்மொழி மாற்றத்துக்கு விஜய் ஆண்டனி பெரிதாக மெனக்கட வில்லை.

நடப்பு கதை மற்றும் மூன்று முன் கதைகளுக்காக அஞ்சலி, அம்ரிதா, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத் என மொத்தம் 4 கதாநாயகிகள். 3 பிளாஷ்பேக்குகளில் ஒரே ஆறுதல், திருடன் கதை பகுதி. அதில் வரும் ஷில்பா மஞ்சுநாத் கவனிக்க வைக்கிறார். ‘அரும்பே அரும்பே’ பாடல் மனதை வருடுகிறது. இசையமைப்பாளராய் விஜய் ஆண்டனி அந்த இடத்தில் வெற்றி பெறுகிறார். பாதிரியார் பகுதி பிளாஷ்பேக்கில் வரும் சுனைனாவும் பாத்திரம் அறிந்து பயணப்படுகிறார். பாதிரியார் பகுதி பிளாஷ்பேக் சற்றே சமூக அக்கறையோடு பயணித்தாலும், பிரச்சார நெடி தூக்கலாய் தெரிகிறது.

பிளாஷ்பேக் கதைகளை நாயகனுக்குச் சொல்லும் பாத்திரங்களாக மதுசூதன ராவ், நாசர், ஜெயப்பிரகாஷ் வருகின்றனர். அவர்களுக்குப் பெரிதாக வேலை இல்லை. வில்லனாக வரும் வேல.ராமமூர்த்தி நடிப்பு கச்சிதம்.

படத்துக்கு பெரிய பலம் யோகிபாபு. கதையோட்டத்தின் நகர்வுக்கு பொருத்தமான காமெடி. அலட்டிக்கொள்ளாத இயல்பான நடிப்பு, பேச்சு என ஈர்க்கிறார். அவரும், விஜய் ஆண்டனியும் வரும் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.

படத்தின் பெரிய ஆறுதல் ரிச்சர்ட் எம்.நாதனின் ஒளிப்பதிவு. அமெரிக்காவில் நடக்கும் மருத்துவக் கருத்தரங்க பின்னணிக் காட்சிகள் தொடங்கி கிராமத்து பின்னணி வரை அழகூட்டியிருக்கிறார். மதன் மார்க்கியின் ‘மனுஷா மனுஷா’ பாடலும், விவேக்கின் ‘அரும்பே’ பாடலும் ரசனை.

ஒவ்வொரு பிளாஷ்பேக் காட்சியை யும் ஹீரோ நகர்த்தும் விதமாக திரைக்கதை அமைத்திருப்பது வித்தியாசம். ஆனாலும், ஒரேயடியாக மேலும் மேலும் பிளாஷ்பேக் என அடுக்கியதை தவிர்த்து, விறுவிறுப்பு கூட்டியிருந்தால் கெட்டிக்காரன் என பெயர் எடுத்திருப்பான் ‘காளி’.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in