

பைக் ரேஸை விட்டு விலகியிருக்கும் ஒருவன், காதலிக்காக எப்படி மீண்டும் பைக் ரேஸராக மாறுகிறான் என்பதுதான் இரும்பு குதிரை. ‘ஈரம்’ படத்தின் உதவி இயக்குநர் யுவராஜ் போஸ் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.
பிரித்வி (அதர்வா) பைக் ரேஸர். ஆனால் பைக் விபத்தில் அப்பாவை இழந்த பிறகு கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகிறான். பைக் ரேஸையே விட்டுவிட்டு ‘ஸ்லோ’ பீட்சா டெலிவரி செய்பவனாக மாறிவிடுகிறான். அப்பாவின் மரணம் ஏற்படுத்திய தாக்கத்தில் இருந்து மகனை மீட்பதற்கு பிரித்வியின் அம்மா (தேவதர்ஷினி) முயற்சி செய்துகொண்டிருக்கிறார்.
இந்நிலையில் பேருந்தில் சந்திக்கும் சம்யுக்தாவைப் (ப்ரியா ஆனந்த்) பார்த்தவுடனே காதலிக்க ஆரம்பிக்கிறான் பிரித்வி. பிரித்வியின் நண்பர்களான கிரிஸ்டினாவும் (ராய் லட்சுமி) ஜெகனும் அவன் காதலுக்கு உதவி செய்கிறார்கள். காதலியின் வற்புறுத்தல் காரணமாக ‘டுகாட்டி’ பைக் வாங்கும் பிரித்வி, வில்லன் ஜானி டிரை நுயனை எதிர்கொள்ள வேண்டிவருகிறது. ஜானி யிடம் மாட்டிக்கொள்ளும் சம்யுக்தாவை பைக் என்னும் இரும்புக் குதிரையை வைத்து எப்படி பிரித்வி காப்பாற்றுகிறான் என்பதுதான் படம்.
இயக்குநர் திரைக்கதையையே எழுத வில்லையோ என்ற கேள்விகூட எழுகிறது. பைக் ரேஸைப் பின்னணியாகக் கொண்ட காதல் கதை எப்படிப் பயணிக்க வேண்டுமோ அப்படி ‘இரும்பு குதிரை’ பயணிக்கவேயில்லை. படத்தில் கடைசி பதினைந்து நிமிடம் மட்டுமே ’பைக்’ பிரதான மாக வருகிறது. அந்தக் காட்சிகள் நன்கு படமாக் கப்பட்டிருந்தாலும் அது பார்வையாளர்களைத் திரையுடன் ஒன்றவைக்கவில்லை. காரணம், அந்தக் காட்சிக்குப் பாதை வகுக்கும் திரைக்கதையில் உள்ள பலவீனம்.
வசனம், ஜி.வி. பிரகாஷின் இசை, தாமரையின் பாடல்கள் என எதுவுமே மனதில் நிற்கவில்லை. திரைக்கதைக்குத் தொடர்பே இல்லாமல் வரும் பாடல்கள் எரிச்சலை ஏற்படுத்துகின்றன. அதிலும், லட்சுமி, அக்ஷராவின் ‘ஐட்டம்’ பாடல்கள் வலிந்து திணிக்கப்பட்டிருக்கின்றன.
படத்தின் முதல் பாதியில் எந்த சுவாரஸ்யமும் இல்லை. இரண்டாம் பாதியில், படத்தின் திருப்புமுனையான ப்ளாஷ்பேக்கை இரண்டு கதாபாத்திரங்கள் வாய்ஸ் ஓவரில் அலட்சிய மாக முடித்துவிடுகிறார்கள். மந்தமாக நகரும் படத்தில் கிளைமாக்ஸ் பைக் ரேஸுக்காகக் காத்திருக்கும் பொறுமை பார்வையாளர்கள் பலருக்கு இல்லை.
நடிப்பைப் பொறுத்தவரை படத்தில் தேவதர்ஷினி, ஜெகன், ஜானி மட்டுமே நடித்திருக்கிறார்கள். அதர்வா, பிரியா ஆனந்த் நடிப்பு, திரையில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. படத்தில் அதர்வா, பிரியா ஆனந்தைத் தீவிரமாகக் காதலிக்கிறார் என்ற விஷயத்தை வசனத்தால் மட்டுமே பார்வையாளர்களுக்கு நினைவூட்டுகிறார். அதுவும் மனதில் ஒட்டவில்லை. பிரியா ஆனந்த் படத்தில் வசனம் மட்டும் பேசுகிறார் அவ்வளவே. லட்சுமியைத் திரையில் பார்ப்பதற்கே பயமாக இருக்கிறது. அதர்வாவிற்கு பால்ய தோழியாகக் காட்டுவதற்கு வேறுயாருமே இயக்குநருக்கு கிடைக்கவில்லையா என்று எண்ணத் தோன்றுகிறது.
ஆமாம், இந்தப்படத்தில் பைக் ரேஸர் அலிஷா அப்துல்லா என்ன செய்கிறார்? இயக்குநர் அவரை நடிக்க அழைத்ததையே சுத்தமாக மறந்துவிட்டார் போல இருக்கிறது.
பைக் ரேஸிங் காட்சிகளிலும், பாண்டிச்சேரியைப் படம்பிடித்திருக்கும் விதத்திலும் மட்டுமே குருதேவ் மற்றும் கோபியின் கேமிராக்கள் வேலை செய்திருக்கின்றன.
இயக்குநர் யுவராஜ் போஸ் திரைக்கதையை எழுதிவிட்டு ‘இரும்பு குதிரை’யை ஓட விட்டிருக்கலாம்.