

சி
ல ஆண்டுகளுக்கு முன், நெமிலி - பாலா பீடத்தில் மெல்லிசை நிகழ்ச்சி நடத்த வந்திருந்தார் பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி. மழலைப் பாடல்களைப் பாடுவதில் வல்லவரான அவரது மென்மையான மனதை அவருடன் உரையாடிக்கொண்டிருந்த போது உணர முடிந்தது. “ ‘நாம் இருவர்’, ‘பராசக்தி’, ‘வாழ்க்கை’, ‘முதலாளி’, ஆகிய படங்களில்தான் குமாரி கமலா, பண்டரிபாய், வைஜயந்திமாலா, தேவிகா ஆகியோர் கதாநாயகிகளாக அறிமுகம் ஆனாங்க. இவங்க எல்லாருமே நான் பாடின பாட்டுக்குத்தான் வாயசைச்சு நடிச்சாங்க.
‘களத்தூர் கண்ணம்மா’வில் குழந்தை நட்சத்திரமாக கமல் அறிமுகமாகி பாடிய ‘அம்மாவும் நீயே அப்பாவும் நீயே’ நான் பாடின பாட்டுதான்” என்று கள்ளமில்லாத சிரிப்போடு தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு அந்தக் காலத்தின் திரையிசை பற்றி மனம்விட்டுப் பகிர்ந்துகொண்டார்.
மதுரை சடகோபன் - ராஜசுந்தரி தம்பதிகளுக்கு மகளாக 1932-ல் பிறந்தவர்தான் எம்.எஸ்.ராஜேஸ்வரி. இவரது பெற்றோர் நாடக மேடைகளில் பாடிக்கொண்டும் நடித்துக்கொண்டும் இருந்த காரணத்தால் இயல்பாகவே கலைத்துறையின் பால் ஈர்க்கப்பட்டார். பதினைந்தாவது வயதில் குடும்ப நண்பர் பி.ஆர்.பந்துலு மூலமாக ஏ.வி.எம். நிறுவனத்தில் காலெடுத்து வைத்தார் எம்.எஸ்.ராஜேஸ்வரி. ‘கருணாமூர்த்தி காந்தி மகாத்மா’, ‘மகான் காந்தி மகான்’ என்று ‘நாம் இருவர்’ படத்தில் காந்தியின் புகழ் பாடியபடி அறிமுகமானார். ஏ.வி.எம். என்ற மாபெரும் விருட்சத்தின் நிழலில் வளர்ந்த விளம்பர வெளிச்சம் படாத இசைக்குயில் இவர்.
வசீகரமான குரல், தெளிவான உச்சரிப்பு, பாடலைப் பாடும்போது வார்த்தைகளைக் கையாளும் லாகவம், நளினம் எல்லாமே இவரது தனித்தன்மைகள். அறிஞர் அண்ணா எழுதிய ‘ஓர் இரவு’ படத்தில் எம்.எஸ்.ராஜேஸ்வரி பாடிய பாடல்கள் அவரை முதல்தரமான பாடகியாக அடையாளம் காட்டின. குறிப்பாக பாரதிதாசனின் ‘துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ’ என்ற தேஷ் ராகப் பாடல் போதும் இவர் திறமையைச் சொல்ல!
திரை இசைத்திலகம் கே.வி.மகாதேவனுக்குத் திருப்புமுனையாக அமைந்த ‘டவுன் பஸ்’ படத்தில் இவர் பாடிய ‘சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?’, ‘பொன்னான வாழ்வு மண்ணாகிப் போனால்’, ‘தை பிறந்தால் வழிபிறக்கும்’ படத்தில் இவர் பாடிய ‘மண்ணுக்கு மரம் பாரமா?’ உட்படப் பல பாடல்கள் கால வெள்ளத்தைக் கடந்து தமிழர் தம் மனதில் நீந்திக்கொண்டிருப்பவை.
‘கைதி கண்ணாயிரம்’ படத்தில்தான் ‘சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் கல்யாணமாம்’ என்று முதல்முதலாகக் குழந்தை நட்சத்திரத்துக்குப் பாட ஆரம்பித்தார். அதன் பிறகு கதாநாயகிக்காக இவர் பாடிய பாடல்கள்கூடக் குழந்தைப் பாடல்கள்போல் கொண்டாடப்பட்டது ராஜேஸ்வரியின் குரலுக்குக் கிடைத்த ரசிக விருது.
ஒரு காலகட்டத்தில் “குழந்தைப் பாடல்களா, கூப்பிடு ராஜேஸ்வரியை” என்ற அளவுக்குப் பிரபலமானார். அவரது சரிவுக்கு இதுவே காரணமாகவும் அமைந்துபோனது. “ராஜேஸ்வரியா, அவங்க... பாப்பா பாட்டுதானே பாடுவாங்க” என்று முத்திரை குத்தி இந்த இசைக் குயிலைக் கூட்டுக்குள்ளேயே அடைத்துவிட்டது காலம் செய்த கோலம்.
ஆனால் அதைத் தகர்த்தெறிந்தது ‘நாயகன்’ திரைப்படம். ‘நான் சிரித்தால் தீபாவளி’ - என்ற பாடலை இவரையும் ஜமுனா ராணியையும் இணைத்து பாடவைத்து ரசிகர்களின் புருவம் உயர வைத்தார் இளையராஜா. அதன் பிறகு மீண்டும் பாடும் வாய்ப்புகள் அமைந்தாலும் அவரை பேபி ஷாம்லிக்காக ‘பாப்பா பாடும் பாட்டு’ என்றே பாட வைத்தார்கள். அதனால் என்ன? குழந்தைகள் தெய்வத்துக்குச் சமம் என்பார்கள். அந்தக் குழந்தைகளின் மழலை மொழி மாறாத பிஞ்சுக் குரலின் இனிமையை உணரவைத்தது எளிதான ஒன்றல்லவே!
தொடர்புக்கு: pgs.melody@gmail.com
இதை மிஸ் பண்ணிடாதீங்க...