

அமெரிக்கத் திரை மேதை மார்ட்டின் ஸ்கார்செஸி (Martin scorsese), திரைப்படப் புத்துருவாக்கத் திட்டம் ஒன்றை உருவாக்கினார். கடந்த நூற்றாண்டில் வெளிவந்த சிறந்த உலகப் படங்களின் பிரதிகளை மீட்டெடுத்து, அவற்றை 4கே டிஜிட்டல் தர முறையில் மறு பிரதியாக்கம் செய்வதுதான் அத் திட்டம். அதன்கீழ், அந்தந்த நாடுகளின் திரைப் பண்பாட்டுத் துறைகளும் இணைந்தன. பழுது படுவதிலிருந்தும் சீர்குலைவி லிருந்தும் சிறந்த படங்களைக் காப்பாற்றும் இப்பணியில் ஈடுபடத் தொடங்கியுள்ளன.
இதன் பின்னணியில், இந்தியத் திரை மேதை சத்யஜித் ராயின் ‘பதேர் பாஞ்சாலி’ தொடங்கிப் பல முக்கிய மான படங்கள் அழிவிலிருந்து காப்பாற்றப்பட்டி ருக்கின்றன. அவை உலகத் திரைப்பட விழாக்களில் சிறப்புத் திரையிடல் செய்யப்பட்டு, இந்திய சினிமாவின் பெருமையைப் பறைசாற்றி வருகின்றன. ஷியாம் பெனகலின் ‘மந்தன்’ படத்தைத் தொடர்ந்து, இந்தியப் பாரம்பரியத் திரைப் பட அறக்கட்டளை (Film Heritage Foundation) ‘சடங்கு’ (Gadashraddha) என்கிற கன்னடத் திரைப்படத்தை 4கே டிஜிட்டல் தர முறையில் மறு பிரதியாக்கம் செய்திருக்கிறது. இப்படம் கன்னடத் திரைப்பட இயக்குநரான கிரீஷ் காசரவல்லியின் முதல் படைப் பாக 1977இல் வெளிவந்தது. தற்போது 2024 வெனிஸ் திரைப்பட விழாவில் ‘சடங்கு’ படத்தின் 4கே பிரதி திரையிடப் படவிருப்பது கூடுதல் சிறப்பு.
1940களில் கர்நாடகத்திலுள்ள ஒரு கிராமத்தில் நிகழும் கதை. உடுபா தனது வீட்டில் ஒரு வேத பாடசாலையை நடத்திக் கொண்டிருக்கிறார். இளம் வயதிலேயே விதவையாகிவிட்ட அவருடைய மகளான யமுனா அவருடன் வசிக்கிறாள். உள்ளூர் பள்ளி ஆசிரியர் ஒருவரின் மீது மையல் கொண்டு பழகும் யமுனா அவரது குழந்தையைக் கருவில் சுமக்கிறாள். இந்நிலையில், மற்றொரு கிராமத்திலிருந்து நானி என்கிற சிறுவன் உடுபாவின் வேத பாடசாலையில் பயில்வதற்காக வந்து சேருகிறான். யமுனாவிடம் ஒரு தம்பியைப் போல நானி நட்புணர்வு கொள்கிறான். அவளது கர்ப்ப விஷயம் குறித்து ஊரார் அறிந்திடாத வகையில் அவளைக் காக்கிறான். ஆனால், சூழ்நிலையால் யமுனாவின் விஷயம் வெளியே கசிந்துவிட, கிராமத்தார் அவளை ஊர் விலக்கம் செய்து தீர்ப்பிடுகின்றனர்.
இதற்கிடையில், மருத்துவச்சியின் உதவியுடன் யமுனாவின் கர்ப்பத்தைக் கலைத்துவிடுகிறார் பள்ளி ஆசிரியர். ஊராரின் தீர்ப்பை ஏற்கும் உடுபா, தன்னுடைய மகள் இறந்துவிட்டதாகப் பாவித்து ஈமக் காரியம் செய்கிறார். யமுனா மொட்டையடிக்கப்பட்டு ஊர் எல்லையில் விடப்படுகிறாள். பாடசாலை யில் படித்த அனைத்து மாணவர்களும் வெளியேறி விட, சிறுவன் நானியும் விருப்பமில்லாமல் வெளியேறுகிறான். தனித்துவிடப்பட்ட யமுனாவுடன் பழக முடியாத ஏக்கத்தோடு அவன் அக் கிராமத்திலிருந்து வெளியேறுகிறான். ஊருக்கு வெளியே ஒற்றை மரத்தடியில் யமுனா அழுதபடி அமர்ந்திருக்க, படம் இருளடைகிறது.
இப்படத்தின் கதை, கன்னடத்தின் பிரபல எழுத்தாளரான யூ.ஆர்.அனந்தமூர்த்தியின் ‘சடங்கு’ நாவலைத் தழுவியது. மதத்தின் வழி பெண்கள் மீது சுமத்தப்பட்ட ஆச்சார அனுஷ்டானங்கள் தளையாகவும் சுமையாகவும் ஒடுக்குத லாகவும் இருந்து வந்திருக்கின்றன. அவற்றின் மீது 45 வருடங்களுக்கு முன்னரே விமர்சனப்பூர்வமான சொல்லா டலை வைத்த விதிவிலக்கான படம் ‘சடங்கு’ எனலாம். வேத பாடசாலையில் படிக்கும் சாஸ்திரி என்கிற இளைஞனது கதாபாத்திரத்தின் வழியாக, ஒரு சாமானிய மனிதனிடம் வெளிப்படும் தீய குணங்களைச் சித்தரித்திருப்பது அக்காலக்கட்டத்தில் ஓர் அசாத்திய முயற்சிதான். தான் பின்பற்றவேண்டிய ஒழுக்கநெறிகளை மீறி சாஸ்திரி சீட்டாடு கிறான், புகை பிடிக்கிறான், தன்பாலின உறவுக்கு ஏங்குகிறான். சாதி ரீதியாகக் கட்டமைக்கப்பட்ட புனிதங்களைக் கட்டு டைப்பதாகச் சாஸ்திரியின் கதாபாத்திரம் இருக்கிறது.
யமுனா கதாபாத்திரம் மர்மம் நிறைந்தது. அவள் ஏன் விதவையானாள் என்பதும் பள்ளி ஆசிரியரோடு ஏன் நெருங்கிப் பழகினாள் என்பதும் அவிழ்க்கப்படாத விடுகதைகள். அதேபோல், யமுனாவுடனான நானியின் அன்பையும் பிணைப்பையும் வகைப்படுத்த முடியாது. யமுனாவிடம் நானி தாய்மையை உணர்கிறானா, தமக்கையின் பாசத்தைக் காண்கிறானா அல்லது விடலைக் காதலா என்பதும் புரிபடவில்லை. ஒரு சமயத்தில், யமுனாவின் கர்ப்ப வயிற்றில் அவன் உதைக்கும்போது, இனம்புரியாத மிகையன்பை வெளிப்படுத்துகிறானோ என்றுகூடக் குழப்பம் வருகிறது. தந்தை யான உடுபா மகளின் கர்ப்பம் குறித்து வினவாததும் கேள்விக்குரியது. இந்த இடைவெளிகளைப் பலவீனமாகக் கருதாமல், சற்று உள்ளார்ந்து யோசித் தோம் என்றால், மற்றவர்களிடம் எளிதில் பகிரமுடியாத புதிர் குணங்கள் நம் அனைவரிடமும் இருக்கவே செய்கின்றன என்பது புரிபடும்.
‘பதேர் பாஞ்சாலி’ படம் தொடுத்த தாக்கத்தால் விளைந்த இந்தியப் படங்களில் ‘சடங்கு’ படமும் ஒன்றெனக் கருதலாம். ஆயினும், கதாபாத்திரங்களின் உணர்வு மரத்துப்போன தன்மையிலும் புதிர் குணங்களாலும் படம் தன் பரப்பில் சற்று மாறுபடுகிறது. அதோடு ‘பதேர் பாஞ்சாலி’ படத்தில் விரவியிருந்த கலை அழகியல் இப்படத்தில் சிறிதும் இல்லை. கலை அழகியல் என்பது பார்வையாளரது ரசனையை மேம்படுத்தும் நுட்பமான திரைமொழிக் கூறு. ஆனால், தான் தழுவும் ஒரு நாவல் பிரதியைச் சற்றும் பிசகாமல் அப்படியே திரைப்படுத்தும் முறைமையில், இணை சினிமா எட்டவேண்டிய முற்றுமுழுதான இலக்கை அடைந்துவிடுகிறது ‘சடங்கு’.
படத்தில் தீவிரப்பட்டக் காட்சியொன்றைப் பற்றி இங்கே பகிரவேண்டும். அது, யமுனாவின் கர்ப்பம் கலைக்கப்படும் காட்சி. இரவு முழுக்க நீளும் கலைப்பின் வாதையைப் படம் நுட்பமான நகர்வில் சித்திரிக்கிறது. கர்ப்பம் கலைத்தல் என்பது ஒரு பெண்ணுக்கு எத்தகைய வேதனையை உண்டுபண்ணும் என்பதைக் கண் கூர்ந்து, பெண்களின் வலியறியாத ஆணாதிக்கக் கறைபடிந்த நமது மனசாட்சியை இக்காட்சி உலுக்கிவிடுகிறது.
கறுப்பு-வெள்ளை சினிமா காலகட்டத்தில், வழக்கமான உருவாக்கத்திலிருந்து பாதை விலகிநின்ற சில படங்கள் நாடெங்கும் உண்டு. சமூக மதிப்பீடுகளைப் புறந்தள்ளிச் சொல்லப்படாத கதைகளை அவை சொல்லிச்சென்றன. ‘சடங்கு’ யமுனாவினது கதாபாத்திரத்தின் வழி, கன்னட சினிமாவில் அத்துமீறும் ஒரு திரைத் தொடக்கத்தை நிறுவியது. இதன் மூலம் இந்திய அளவில் மரபை மீறும் சினிமாவின் பரவலுக்கு இந்தக் கன்னட சினிமா துணைசேர்த்தது காலம் நெய்த கலை வரலாறு.