வில்லனுக்காகச் சிதறும் கண்ணீர்! - மனதோடு மகேந்திரன் 85

உதிரிப்பூக்கள்
உதிரிப்பூக்கள்
Updated on
3 min read

மகேந்திரனின் திரையுலகில் அவருடைய கதாபாத்தி ரங்களின் தன்மை மற்றும் வடிவமைப்பைப் போன்று நீங்கள் வேறெங்கும் காண்பது அரிது. பொதுவாக, எதிர்மறை கதாபாத்திரம் ஓர் ஆண் எனில், அவன் ஆயுதங்களுடன் தோற்றம் அளிப்பவனாக, பொதுச் சமூகத்துக்குப் பெரும் இன்னல்கள் விளைவிக்கக் கூடியவனாக, பொய், புரட்டு, தீங்குகள் செய்பவனாக எப்போதும் திரைப்படங்களில் காட்சிப்படுத்தப்படுவான். இவை ஒரு மனிதனுடைய தீமையின் வெளித்தோற்றம்.

உண்மையில், எதிர்மறைக் கதாபாத்தி ரத்தின் அகத்தில் தோன்றுகிற உணர்ச்சி என்பது இதைவிடவும் மேலோங்கியது. அதற்கு ஒரு தொடர்ச்சியிருக்கிறது. மகேந்திரன் படைக்கும் எதிர்மறை கதாபாத்திரத்தின் உணர்ச்சி என்பது, காலங்காலமாக மனித மனங்களில் மண்டிக் கிடக்கிற அகங்காரம் மற்றும் ஆணாதிக்க மனப்பான்மையின் வெளிப் பாடு என்பதை ‘முள்ளும் மலரும்’, ‘உதிரிப் பூக்கள்’ படங்கள் வாயிலாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

அகந்தை தானே மனிதனுடைய அடிப்படை உணர்வு. அகந்தையின் வெளிப்பாடாகத்தான் மனிதன் எப்போதும் காட்சியளிக்கிறான். சமத்து வத்தை, அவனுக்குக் கலை - இலக்கியம்தான் போதிக் கிறது. அகந்தை, வர்க்க அடுக்கில் தனக்குக் கீழே இருக்கும் அனைவரையும் கீழாக நடத்தும். அந்த ஆணவம்தான் தீமை.

தன்னுடைய கதையின் முரணாக மனிதனின் அகந்தையை எடுத்துக் கொண்டு, அதற்கு இயல்பான நம் வீட்டில் காணக் கிடக்கிற அண்ணன், அப்பா கதாபாத்திரத்தில் பொருத்தும் போது, அது பார்வையாளர்கள் ஒன்றிப் போகிற சித்திரமாக மாறிவிடுகிறது.

பதற வைக்கும் கிளைமாக்ஸ்: இந்த அகந்தையின் வடிவமாகத் தான் ‘முள்ளும் மலரும்’ காளியும், ‘உதிரிப் பூக்கள்’ சுந்தரவடிவேலுவும் காட்சியளிப்பார்கள். காளி தன் அகந்தைக்குத் தன்னுடைய தங்கை யையே பறிகொடுக்கத் துணிகிறான். சுந்தரவடிவேலுவோ தன் மனைவியைப் பலியிடுகிறான். அதற்காக மகேந்திரன், கொழுந்து விட்டெரியும் மனிதனின் அகந்தையைச் சித்தரிப்பதுடன் கதையை நிறைவு செய்வதில்லை. அவருடைய படங்கள் முடியும்போது நம்மிடம் அன்பின் சிப்பிகளைத் திறந்து காண்பிக்கின்றன. அவை நம் கண்ணீர் முத்துகளை யாசித்து நிற்கின்றன. அவருடைய கதாபாத்திரங்கள் திசை யெங்கும் சக மனிதப் பேரன்பைப் பரப்பிய வண்ணம் இருக்கின்றன.

‘உதிரிப்பூக்கள்’ படத்தில் ஊர் மக்கள் ஒன்று கூடி ‘நீ வாழத் தகுதி இல்லாதவன். ஆக நீ செத்துப் போய்விடு’ என்று சுந்தரவடிவேலுவை ஆற்றை நோக்கி விரட்டியடிக்கிற காட்சி, உண்மையிலேயே இந்தியத் திரையுலகம் கண்டிராத மிக அற்புதமான கிளைமாக்ஸ்!

இந்த கிளைமாக்ஸ் காட்சியைப் பார்க்கும்போதெல்லாம் மனம் கொந்தளித்தபடி இருக்கும். அந்தக் காட்சியில் சுந்தர வடிவேலு கதாபாத்திரம், “நீங்க எல்லாரும் ரொம்ப நல்லவங்களா இருந்தீங்க. ஆனா, இன்னைக்கு உங்கள் எல்லாரையும் நான் என்னைப் போல் மாத்திட்டேன். நான் செஞ்ச தவறுகள்லயே பெரிய தவறு அதுதான்” என்று சொல்லும்போது அனை வரையும் குற்றவுணர்வில் தள்ளும். நல்லவர்களின் கள்ள அமைதி நம்மைத் தொந்தரவு செய்யும். அவர் ஓடும் ஆற்றில் இறங்கி தன்னை மாய்த்துக் கொள்ள முயலும்போது அவருடன் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியரோடு சேர்ந்து ஊரிலுள்ள சிலரும் அவரைக் காப்பாற்ற முயன்று தோற்பார்கள்.

அந்தக் காட்சியைப் பார்க்கும்போது நீ நினைப் பதுபோல் இல்லை மூடனே! இன்னும் மனிதத் தன்மையின் எச்சம் மிச்சமிருக்கிறது என்று மகேந்திரன் காட்ட முயல்கிறார். இன்னும் அதிகமாகத் தீமைக்கு எதிராக ஓர் அன்பின் மழையைப் பொழியச் செய்கிறார்.

‘அழகிய கண்ணே’ பாடல் ஒலிக்கும் போது விஜயன் குழந்தைகளை அருகே அழைத்து முத்த மிட்டு அழும்போது, வில்ல னோடு நாமும் சேர்ந்து அழுகிற ஓர் அற்புதமான மனிதத் தருணத்தை மகேந்திரன் நமக்குப் பரிசளிக்கிறார். வில்லனோடு சேர்ந்து நாமும் ஏன் அழுகிறோம்? அது தான் மகேந்திரன். எதிர்மறைக் கதாபாத்திரத்தைக் காப்பாற்ற நீண்ட கைகள் அன்பின் கைகள் தான். ஒரு கலை இலக்கியத்தின் வேலை என்பது எதிரியை வேரோடு அழிப்பதில் முடிவதில்லை. அந்தக் கெட்டவனுக்குள்ளும் ஒரு மனிதன் இருக்கிறான் என்று காட்டுவதில்தான் நிறைவடைகிறது. அதை உதிரிப்பூக்கள் திரைப் படத்தில் மிக அழுத்தமாகக் காட்சிப்படுத்தியுள்ளார்.

களியின் பேரன்பு: ‘முள்ளும் மலரும்’ படத்தில் ‘கெட்ட பய சார் இந்தக் காளி’ என்று சொல்கிற அந்த வசனம், கதையின் மையத்தைக் குறிக்கிற குறியீட்டுச் சொல் என்றே கருதுகிறேன். கெட்டது என்பது மனிதனுடைய அகந்தை. மனிதனுடைய அகந்தை காளி என்கிற பாசமான அண்ணனை, அன்பான கணவனை, சமூகத்தில் மதிப்புள்ள மனிதனை, எவ்வளவு கீழ்த்தரமான செயலைத் தன் சொந்தத் தங்கைக்கே செய்யத் தூண்டுகிறது என்பதை அழகாக விளக்கியிருக்கிறார் மகேந்திரன்.

‘அய்யப்பனும் கோஷியும்’, ‘டிரைவிங் லைசென்ஸ்’, ‘பார்க்கிங்’ போன்ற இன்றைய திரைப்படங்களில் பேசுகிற அகந்தையைக் கையாண்டு அன்றே தமிழின் அற்புதமான காவியத்தை உருவாக்கியிருக்கிறார். ‘முள்ளும் மலரும்’ படத்தைப் பொறுத்த வரை காளி, வள்ளி, இஞ்சினியர், மங்கா இப்படி எந்தக் கதாபாத்திரத்தின் வாயிலாக இந்தத் திரைப்படத்தை அணுகும் போதும் அந்தக் கதா பாத்திரத்தின் தன்மை, அதன் நியாயம் மிகச் சரியாக வெளிப்படுவதுபோல் எழுதப்பட்டதுதான் இந்தக் கதையின் மாபெரும் சிறப்பு.

காளியின் கதாபாத்திரம் சின்ன வயதில் இருந்தே தன் தங்கையை ஓர் அண்ணனாக, அப்பாவாகத் தூக்கி வளர்க்கிறது. தமிழ் நிலத்தில் வெளிப்படும் அண்ணன், தன் தங்கை மீது வைக்கிற கண்மூடித்தனமான அன்பு, அவனின் அகந்தையுடன் இணைந்து பேரன்பாக வெளிப்படுகிறது.

பேரன்பு எப்போதும் ஆபத்தானது. எப்போதும் அது மற்றவர்களின் உணர்வுகளை, அவர்களின் தனிப்பட்ட விருப்பங்களை மதிக்காது. அதனாலே அந்தக் கதாபாத்திரத்தை நாம் வெறுத்து ஒதுக்கிவிட முடியாது. இவன் நமக்கு மட்டுமானவன், இவள் நமக்கு மட்டுமானவள் என்று ஒரு காதலன் காதலியை எண்ணுவது போல், ஓர் அக்கா தனக்கான தம்பி என்று எண்ணுவது போல், ஒரு தாய் தன் மகனை நம் ரத்தம் அவன் என எண்ணுவது போல் இது நம் வாழ்வில் நாம் எளிதில் காணக் கிடைக்கிற படிமம். அந்தப் படிமம்தான் காளி.

முள்ளும் மலரும்
முள்ளும் மலரும்

காளி நம் மண்ணின் நாயகன். கரடு முரடானவன். ஆனால் பேரன்பு பூக்கிற மனிதன். படத்தில் இறுதியில் தங்கை தன்னை விட்டுப் பிரிந்து செல்லும்போது, கையிழந்த காளி தனித்து நிற்கிறான். அவன் எதிர்பார்ப்பது தங்கையின் சிறு அன்பை மட்டுமே. மனைவி உள்பட மொத்த ஊரும் அவனை எதிர்த்து ஒதுக்குவது அவனுக்கு ஒரு பொருட் டில்லை. அகந்தை நொதித்துக் கிடக்கும் அந்த மனம் அன்புக்காகவே ஏங்கி நிற்கும். மலைமுகட்டில் காளி தனித்து நிற்கும் காட்சிப் பிம்பம், ஐரோப்பியப் படங்களில் காண்கிற பிம்பத்தை நமக்கு நினைவுபடுத்துகிறது. தங்கை ஓடி வந்து அண்ணனைக் கட்டிக்கொள்ளும் போது இன்றும் கண் கலங்குகிறது.

படம் பார்க்கும் அனைவரையும் காளியாக மாற்றியதுதான் மகேந்திரன் மேஜிக். 45 வருடங்கள் கழித்தும் அந்த மேஜிக் அப்படியே திரையில் இருக்கிறது. எண்ணற்ற திரைப்படங்கள் காலம் கடந்த பின்னர், அந்தக் கதையின் உணர்ச்சிகளுக்கு உயிர் இல்லாமல் போவதைக் கண்டிருக்கிறோம். ஆனால் ‘முள்ளும் மலரும்’, ‘உதிரிப் பூக்கள்’ அப்படியில்லை. அவற்றின் ஒப்பனைகள் இன்னும் கலையவில்லை, சாயம் வெளுக்கவில்லை, அவற்றின் கண்ணீர் கேலி செய்யப்படவில்லை, வசனங்கள் பழசாகிப் போகவில்லை. அத்திரைப்படங்கள் இன்று எடுக்கப் பட்டவைப் போல் அவ்வளவு உயிர்ப்புடன் இருக்கின்றன.

எங்கள் தமிழ் சினிமா என்று யாரிடம் வேண்டுமானாலும் நாம் முதலில் பரிந்து ரைக்கிற படங்களாக அவை அப்படியே அதனதன் இடத்தில் தங்கத்தின் மாசு மரு குறையாமல் இருக்கின்றன. இப்படங்கள் திரைப்பட எழுத்தாளர்களுக்குச் சூத்திரம் போன்றவை. கதாபாத்திரங்களின் உணர்வு முரண்கள் வழியாக மகேந்திரன் காவியங்களை எழுதி உள்ளார். இத்திரைப்படங்களின் மூலக் கூறை மட்டும் வைத்துக் கொண்டு புதிய நூறு திரைக்கதைகளை எழுதிவிட முடியும். அப்படிப்பட்ட படைப்பாளுமை யான மகேந்திரனைக் கொண்டாடுவது தமிழ் சினிமாவைக் கொண்டாடுவதைப் போன்றது.

ஜி.வசந்தபாலன்
vasantabalan@gmail.com

படங்கள் உதவி: ஞானம்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in