

சூப்பர் ஹீரோவுக்குக் குடும்பம் இருக்கலாம்; மாறாக, குடும்ப உறுப்பினர்கள் அனைவருவமே சூப்பர் ஹீரோக்களாக இருந்தால்..? அப்படியொரு சூப்பர் குடும்பத்தின் அதிரடி அத்தியாயமாக வெளியாக உள்ளது ‘இன்க்ரிடிபிள்ஸ்-2’.
2004-ம் ஆண்டு பிக்ஸார் அனிமேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பாக வெளியான ‘த இன்க்ரிடிபிள்ஸ்’ திரைப்படத்தை எழுதி இயக்கியவர் பிராட் பேர்ட். இவர் அறுபதுகளில் வெளியான தனது சிறுவயது காமிக்ஸ் கதைகளின் பாதிப்புடன், மத்திம வயது குடும்பஸ்தனாகத் தனது சொந்த அனுபங்களையும் கலந்து ஜாலியான சாகசத் திரைப்படத்தை உருவாக்கியிருந்தார்.
கம்ப்யூட்டர் அனிமேஷன் கதாபாத்திரங்களாக உலாவரும் மிஸ்டர். இன்க்ரிடிபிள் அவருடைய மனைவி எலாஸ்டிகேர்ள், இவர்களின் மூன்று சூரத்தனமான குழந்தைகள் என சூப்பர் ஹீரோ குடும்பத்தின் சுவாரசியமும் அவர்களின் ஆக்ஷன் பராக்கிரமுமாகப் படம் வெளியானது.
வசூலில் சாதனை படைத்ததுடன் காமிக்ஸ் தொடர்கள், வீடியோ விளையாட்டுகள், உணவு ரகங்கள் என இப்போதுவரை சந்தையில் இந்தக் கதாபாத்திரங்கள் இடம் பிடித்திருக்கின்றன.
முதல் பாகம் வெளியாகி 14 வருட இடைவெளியில் ‘இன்க்ரிடிபிள்ஸ்-2’ திரைப்படம் ஜூன் 15 அன்று வெளியாகிறது. முதல் பாகம் முடிந்த இடத்திலிருந்து கதை தொடங்குகிறது. அனிமேஷன் திரைப்படம் என்பதால் இத்தனை வருடத்தில் வளர்ந்திருக்கும் தொழில்நுட்ப பாய்ச்சலைச் சரியாகப் பயன்படுத்தி ஐமேக்ஸ், 3டி உட்பட பல்வேறு நவீன பதிப்புகளில் படம் வெளியாக இருக்கிறது.
எலாஸ்டிகேர்ள் கதாபாத்திரத்துக்குக் கூடுதல் முக்கியத்துவம், குடும்பத்தின் கடைக்குட்டி குழந்தைக்கும் ஆக்ஷன் காட்சிகள், வில்லன் ‘த அண்டர்மைனர்’ அறிமுகம் என இரண்டாம் பாகத்தில் பல புதிய சுவாரசியங்கள் காத்திருக்கின்றன.
பிராட் பேர்ட் எழுதி இயக்க, அனிமேஷன் கதாபாத்திரங்களுக்கு ஹாலிவுட் பிரபலங்களான ஹோலி ஹன்டர், க்ரைக் நெல்சன், சாமுவேல் ஜாக்சன் உள்ளிட்டோர் குரல் நடிப்பை வழங்கி உள்ளனர்.
கடந்த நவம்பரில் படத்தின் டீஸர் வெளியானபோது அதிகமானவர்களால் பார்க்கப்பட்ட முதல் அனிமேஷன் திரைப்பட டீஸர் என்ற சாதனையை ‘இன்க்ரிடிபிள்-2’ படைத்தது. வால்ட் டிஸ்னி வெளியீடாக வரும் இந்தப் படம் திரையிலும் அந்தச் சாதனையைப் படைக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.