

டைனோசர், மனித இனங்களுக்கு இடையிலான 6.5 கோடி வருடங்களை அழித்துவிட்டு, இரண்டையும் சம காலத்தில் உலவவிடும் ஒற்றைப் புள்ளியை மையமாக்கிப் பின்னப்பட்ட சுவாரசியமான அறிவியல் புனைவு சாகசக் கதைகளே ஜுராசிக் படங்களின் வரிசை. இதன் அண்மை வெளியீடாக ஜூன் 22 அன்று திரைக்கு வருகிறது ‘ஜுராசிக் வேர்ல்ட்: ஃபாலன் கிங்டம்’.
முந்தைய படமான 2015-ல் வெளியான ‘ஜுராசிக் வேர்ல்ட்’ கதை நிகழ்வின் நான்கு ஆண்டுகள் ஓட்டத்துக்குப் பின்னர் புதிய படத்தின் கதை தொடங்குகிறது. ஜுராசிக் பார்க்கின் நிர்வாகியான கிளாரியும் அவருடைய காதலனும் டைனோசர் பயிற்சியாளருமான ஓவெனும் மீண்டும் அந்தக் கற்பனைத் தீவுக்கு விஜயம் செய்கிறார்கள். வெடிக்கக் காத்திருக்கும் எரிமலைகளால் அழிவின் விளிம்பிலிருக்கும் அத்தீவில் எஞ்சியிருக்கும் அப்பாவி டைனோசர் குட்டிகளைக் காப்பாற்றுவது அவர்களின் நோக்கம்.
அந்த முயற்சியில் அதுவரை கண்டிராத பயங்கர, பிரம்மாண்டமான புதிய கலப்பின டைனோசர்களை அவர்கள் எதிர்கொள்கிறார்கள். மறுபக்கம் தீவின் எரிமலைகள் உயிர் பெற்று நெருப்புக் கங்குகளை உமிழத் தொடங்குகின்றன. அழியத் தொடங்கும் ஜுராசிக் பார்க்கில் நிகழும் இறுதி சாகசமாக, அச்சுறுத்தலான டைனோசர்கள் மற்றும் குமுறும் எரிமலை இவற்றுக்கு மத்தியில் மனிதர்களின் பராக்கிரமங்களுடன் அடுத்த படத்துக்கான எதிர்பார்ப்பை விதைப்பதே மீதி திரைப்படம்.
இது, ‘ஜுராசிக் பார்க்’ படங்களின் வரிசையில் ஐந்தாவது படம் மற்றும் ஜுராசிக் வேர்ல்ட் முத்தொகுப்பின் இரண்டாவது படமாகும். இதன் தொடர்ச்சியாக முத்தொகுப்பின் பெயரிடப்படாத மூன்றாவது படம் 2021, ஜூன் 11 அன்று வெளியாகும் என யுனிவர்சல் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தப் படத்துக்காக முந்தைய டைனோசர்களுக்கு மாற்றாகப் புதிய பயமுறுத்தும் இந்தோராப்டர் (Indoraptor) என்ற புதிய ரக டைனோசரை, அனிமட்ரானிக்ஸ் மற்றும் சி.ஜி.ஐ தொழில்நுட்பக் கலவையால் களமிறக்குகிறார்கள்.
கிறிஸ் பிராட், பிரைஸ் டாலஸ் ஹாவர்ட், டெட் லெவின் உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படத்தை ஜே.ஏ.பஜோனா (J.A.Bayona) இயக்கி உள்ளார். படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளர் ஜுராசிக் பார்க் பிதாமகனான ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்.