

‘மகேஷிண்ட பிரதிகாரம்’, ‘தொண்டிமுதலும் திருக்சாட்சியும்’ ஆகிய இரு வெற்றிப் படங்களின் மூலம் பல விருதுகளை அள்ளியவர் இயக்குநர் திலீஷ் போத்தன். மலையாள சினிமாவில் முன்னணி குணச்சித்திர நடிகராகவும் இருக்கிறார். லிஜோ ஜோஸ் பில்லிசேரி இயக்கத்தில் இவர் முக்கியக் கதாபாத்திரம் ஏற்று நடித்த ‘ஈ.மா.யூ’ வெற்றியாக ஓடிக்கொண்டிருக்கிறது. திலீஷ் இப்போது ‘கும்பளங்கி நைட்ஸ்’ என்னும் தனது அடுத்த படத்தை இயக்கிவருகிறார். இந்தப் படத்தில் ஃபகத் பாசில், ஷேன் நிகம் ஆகிய இருவரும் முக்கியக் கதாபாத்திரங்களை ஏற்றிருக்கிறார்கள். திலீஷும் இதன் கதையாசிரியரான ஷியாம் புஷ்கரனும் இணைந்து தயாரித்துவருகிறார்கள். அவர்களது தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் ‘ஒர்க்கிங் கிளாஸ்’.
தோற்றத்தை மாற்றி நடிப்பதில் மலையாள நடிகர்கள் கில்லாடிகள். மம்மூட்டி, திலீப், கலாபவன் மணி போன்ற நடிகர்கள் தங்கள் தோற்றத்தை சினிமாவுக்காகத் தலைகீழாக மாற்றி நடித்திருந்தனர். தற்போது அந்தப் பட்டியலில் சேர்ந்திருக்கிறார் ஜெயசூர்யா. ‘ஞான் மரியக்குட்டி’ என்னும் படத்தில் திருநங்கையாக நடித்துவருகிறார். இதற்காகத் தனது தோற்றத்தை முழுமையாக மாற்றியுள்ளார். சில வாரங்களுக்கு முன்பு வெளியான இந்தப் படத்தின் டீஸர், யூடியூபில் பரபரப்பானது. ஜெயசூர்யாவின் இந்தப் புதிய தோற்றத்தை கொச்சியில் இருக்கும் துணிக்கடை பயன்படுத்திக்கொண்டது. ‘சரிதா பொட்டிக்’ என்ற அந்தக் கடை ஜெயசூர்யாவின் மனைவியுடையது.
‘ஃபைவ் ஸ்டார்’ படத்தின் மூலம் அறிமுகமான கனிகா, மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். மம்மூட்டி, மோகன்லால் ஆகிய இருவருடனும் நடித்துள்ளார். மலையாள இயக்குநர் ரஞ்சித்தின் புகழ்பெற்ற படமான ‘ஸ்பிரிட்’டில் மோகன்லாலின் மனைவியாக நடித்திருந்தார். அதன் பிறகு மலையாள சினிமாவில் இவரைப் பார்க்க முடியவில்லை. சிறு இடைவெளிக்குப் பிறகு இப்போது ரஞ்சித் இயக்கும் புதிய படத்தில் மோகன்லாலுடன் நடித்துவருகிறார். ஒரு இடைவெளிக்குப் பிறகு தமிழில் மம்மூட்டி நடித்திருக்கும் ‘பேரன்பு’ படத்திலும் கனிகா நடித்திருக்கிறார்.
தொகுப்பு: விபின்