

கா
ல் டாக்ஸி ஓட்டுநர் அருள்நிதியும், மஹிமா நம்பியாரும் காதலர்கள். கருத்து வேறுபாட்டுடன் வாழும் ஜான் விஜய் - சாயா சிங் தம்பதியின் வீட்டில் நர்ஸாகப் பணியாற்றுகிறார் மஹிமா. ஒருநாள் இரவு, மஹிமாவை ஓர் ஆபத்தில் இருந்து காப்பாற்றும் அஜ் மல் அவளைப் பின்தொடர்கிறார். இது ஒரு கட்டத்தில் அத்துமீற, காதலன் அருள்நிதியிடம் இதுபற்றி சொல்கிறார் மஹிமா. சபல எண்ணம் கொண்டவர்களை மிரட்டி பணம் பறிப்பவர் அஜ்மல் என்ற உண்மையை சாயா சிங் மூலம் தெரிந்துகொள்கின்றனர். அஜ்மலை மிரட்ட, அவரது வீட்டுக்கு அருள்நிதி செல்ல, அங்கு அவரது கூட்டாளியான சுஜா வாருணி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறார். கொலையாளி யார் என்று அருள்நிதி பின்தொடர்வது தான் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’.
தமிழ் நாவல் உலகில் ஏராளமான ரசிகர்களை மகிழ்வித்த கணேஷ் - வசந்த்(சுஜாதா), பரத் - சுசீலா (பட்டுக்கோட்டை பிரபாகர்), விவேக் - ரூபலா (ராஜேஷ்குமார்) ஆகிய பெயர்களை முக்கிய கதாபாத்திரங்களுக்கு சூட்டியிருக்கிறார் அறி முக இயக்குநர் மு.மாறன். இரண்டு மணி நேர திரைக்கதை, படத்துக்கு பெரிய பலம்.
கதாபாத்திரங்கள் ஒவ்வொருவரையும் பின்னோக்கு உத்தியில் அறிமுகப்படுத்தும் போது படம் பரபரக்கிறது. ஆனால், ஏகப்பட்ட கதாபாத்திரங்கள், அவர்கள் அனைவருக்குமான ஃப்ளாஷ்பேக்குகள், திருப்பங்கள் ஆகியவை இடியாப்ப சிக்கலாகி படத்தின் வேகத்தை குறைக்கிறது. ஒரு கட்டத்தில், திரில்லிங்கைவிட கதையின் சிக்கல்கள் அதிகமாகிவிடுவதால், சாமானிய பார்வையாளர்களிடம் இருந்து படம் விலகுகிறது.
அருள்நிதியின் தனித்துவ மான திரைக்கதை தேர்வு இந்தப் படத்திலும் தொடர்கிறது. பக்குவமான நடிப்பை, சிறப்பான உடல்மொழியுடன் வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகி மஹிமாவும் நன்கு ஈடுகொடுக்கிறார். மஹிமா, சாயா சிங் கதாபாத்திரங்களுக்கும் ஓரளவுக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது.
அஜ்மலுக்கு, அவர் வழக்க மாக ஏற்று நடிக்கும் கதாபாத்திரம்தான். அதைச் சுற்றி தான் படம் பயணிக்கிறது. ஆனால், பார்வையாளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு அவரது கதாபாத்திரம் வலுவாக இல்லை.
ஜான் விஜய்க்கு உடலோடு கண்களும் பேசுகின்றன. ஆனந்தராஜை சபல எண்ணம் கொண்டவராகக் காட்டி சிரிக்கவைக்க முயற்சித்திருக்கிறார்கள். இவர்களைத் தவிர, லட்சுமி ராமகிருஷ்ணன், வித்யா பிரதீப், ஆடுகளம் நரேன் என பலர் நடித்திருக்கின்றனர்.
அரவிந்த் சிங் கேமரா, சாம். சி.எஸ். பின்னணி இசை ஆகியவை படத்துக்கு பெரிய பலம். எடிட்டர் ஜான் லோகேஷின் பங்களிப்பும் முக்கியமானது. படத்தின் பல குழப்பமான நகர்வுகள், அவரால் சற்றே எளிதாகியிருக்கிறது.
கிளைமாக்ஸ் காட்சியின் திருப்பம் பார்வையாளர்கள் எதிர்பாராததாக இருந்தாலும், வழக்கமான திரில்லர் போல, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள் - பார்ட் 2’ வுக்கான நோக்கத்துடன் படம் நிறை வடைகிறது.
படத்தில் கதாபாத்திரங்களின் படைப்பில் கூடுதல் வலிமையும், அழுத்தமும் கொடுக்கப்பட்டிருந்தால் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ சுவாரசியமான திரில்லராக அமைந்திருக்கும்.