

தனியார் திரைப்படக் கல்லூரி ஒன்றுக்குத் திரைப்பட வகுப்பெடுக்க அழைக்கப் பட்டிருந்தார் இயக்குநர் மகேந்திரன். அன்று ‘கதாபாத்திரங்களின் வடிவமைப்பு’ பற்றி வகுப்பெடுக்க வேண்டும்.
தன்னுடைய திரைப்படங்களில் இந்தக் கதாபாத்திரத்தை நான் இப்படி வடிவமைத்தேன் என்று சொல்லிச் செல் வது ஒருவிதமான கற்பித்தல் முறை. ஆனால் அன்று அவர் அந்தப் பாடத்தைத் தவிர்த்து, பாடல்கள் இல்லாமல் படமெடுப்பது எவ்வளவு முக்கியம்? அது திரைக்கதைக்கு எங்ஙனம் வலுச் சேர்க்கிறது என்பதைப் பல்வேறு திரைப்படங்களை உதாரணம் காட்டி விளக்கியவண்ணமிருந்தார்.
மாலை வகுப்பு முடிந்து அவர் கிளம்பியபோது, “நாளை காலை ஆறு மணிக்கு வகுப்பு - கோயம்பேடு மார்க்கெட்ல” என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார். ‘நாளைய வகுப்பு கோயம்பேடு மார்க்கெட்டிலா? திருவிழா போன்று கூட்டமும், பெரும் சப்தமும் நிறைந்து வழியுமே அங்கு எப்படி, என்ன வகுப் பெடுக்கமுடியும்?' என்று மாணவர்கள் குழம்பித் தவித்தனர்.
அடுத்த நாள் காலை ஆறு மணிக்கு மாணவர்கள் அனைவரும் கோயம்பேட்டில் குழப்பத்துடன் குழுமி இருந்தனர். மிகச் சரியாகக் காலை ஆறு மணிக்கு வழக்கமான தன் வெள்ளை ஆடையில் காரிலிருந்து இறங்கி வந்தார் மகேந்திரன். மாணவர்களை அழைத்துக் கொண்டு அங்காடிக்குள் நுழைந்து நடந்து போய்க்கொண்டிருந்தார். மாணவர்கள் ஒருவிதப் புதிருடன் அவரைப் பின்தொடர்ந்தார்கள்.
மகேந்திரனின் வகுப்பறை: கத்தரிக்காய் விற்றுக்கொண்டிருந்த ஒரு மூதிளம் பெண்ணின் அருகே தரையில் அமர்ந்து, ‘இந்தக் கத்தரிக்கா கிலோ என்ன விலைன்னு கேட்க ஆரம்பித்து, எந்த ஊரு காய் இது? நீங்க எந்த ஊரு? தெனம் எங்கிருந்து வர்றீங்க? உங்களுக்குச் சொந்தமா நெலமிருக்கா? எவ்வளவு லாபம் கிடைக்குது? உங்க கணவர் என்ன பண்றாரு? உங்களுக்கு எத்தன பசங்க? அவுங்க என்ன பண் றாங்க?” என்று ஒரு நெருங்கிய உறவின ரைப் போல விசாரிக்கத் தொடங்கினார்.
அந்தப் பெண்ணின் அன்றாட வாழ்வோடு ஒரு நீரைப் போல, நீரில் துள்ளித் திரியும் ஒரு மீனைப் போல் அவர் கலந்துவிட்டதைக் கண்கொட்டாமல் மாணவர்கள் பார்த்தபடியிருந்தனர். அந்தப் பெண்ணோ, தன்னுடைய இறைத் தூதனைக் கண்டடைந்ததுபோல் தன் மொத்தத் துக்கத்தையும் இறக்கி வைத்து இளைப்பாறுதல் பெற்றார்.
அந்தப் பெண்ணின் வியாபாரத் திறமை சார்ந்த நுணுக்கங்களும், அவர் பேசிய வட்டாரப் பேச்சு மொழியும் தனிப்பட்ட வாழ்க்கையும் ஒரு மணி நேரத்தில் ஒரு தனித்துவமான கதா பாத்திரமாகவும் திரைக்கதையாகவும் மலர்கின்ற அற்புதமான தருணத்தை மாணவர்களுக்கு நிகழ்த்திக் காட்டி விட்டுச் சொன்னார்:
“மண்ணைப் போல், மண்ணுக் கடியில் விளைகிற கிழங்கைப்போல், கதாபாத்திரம் என்பது இதுதான். உங்களைச் சுற்றி கதாபாத்திரங்களும் கதைகளும் கொட்டிக் கிடக்கின்றன.
இங்கே நீங்கள் பார்க்கின்ற பார்வையும் கோணங்களும் தான் உங்களுக்கான சினிமா” என்று சொல்லிவிட்டு, மொத்த மாக அழுக்காகிவிட்ட தன் வெள்ளை பேண்ட்டில் ஒட்டியிருந்த மண்ணைத் தட்டி விட்டபடி ஒரு கதாநாயகனைப் போல வெளியேறிச் சென்றார் என்று அந்தத் திரைப்படக் கல்லூரியில் பயின்ற மாணவர் என்னிடம் பகிர்ந்து கொண்டது நினைவுக்கு வந்தது.
தத்துவங்கள், கோட்பாடுகள், கணக்குகள் வாயிலாகக் கதாபாத்திரங் களின் வடிவமைப்பை விளக்கி, மாண வர்களைக் குழப்பாமல், இவ்வளவு எளிமையாக ஒரு கதாபாத்திரத்தின் தன்மையைப் பற்றிப் புரியவைத்ததைக் கேட்டதும், எனக்குள் சட்டென வெளிச்சம் பரவியது. நமக்கெல்லாம் எவ்வளவு பெரிய பாடமிது!
ஓர் ஏசி அறையில் அமர்ந்து கொண்டு கதாபாத்திரத்தின் தன்மைக்கு, வடிவமைப்புக்குப் பத்துத் தேநீர், பத்து சிகரெட் புகைத்து சாம்பலாக்கு கிறோம். ஆனால், வாழ்க்கை நெடுகக் கதாபாத்திரங்களும் கதைகளும் கொட்டிக்கிடக்கின்றன என்பதை இவ்வளவு எளிமையாக, அழகாக யாராவது சொல்லித் தரமுடியுமா என்று எண்ணிக்கொண்டிருந்தேன்.
இதனால்தான் அவரின் திரைப்படங் களில் சாலையில் முடி திருத்துபவர், உயரதிகாரி என்ன கேள்வி கேட்டாலும் ‘எஸ் சார்..! எஸ் சார்..!’ என்று சொல்கிற அரசு உதவியாளர்கள், கேபிள் கார் இயக்குபவர் என எப்படிப்பட்டக் கதாபாத்திரமும் உயிர்த்துடிப்புடன் படைக்கப்பட்டுள்ளன.
பாராட்டுப் பத்திரம்: மகேந்திரனின் திரைப்படங்களைக் காணத் தொடங்கும்போது, கொந்த ளிக்கிற மனம் மெல்ல மெல்ல அமைதியடைந்து, ஒரு தியான நிலைக்குச் செல்கிற அற்புதத்தைக் கதையும், கதாபாத்திரங்களின் முக பாவங்களும் நமக்குள் நிகழ்த்திக் கொண்டேயிருக்கும்.
‘முள்ளும் மலரும்’ படத்தில் ஷோபாவும் சரத் பாபுவும் ‘உதிரிப் பூக்கள்’ படத்தில் அஸ்வினியும் சாருஹாசனும் சரத்பாபுவும் அந்த உணர்வுகளை நமக்குள் விதைத்த வண்ணம் இருப் பார்கள். அவர்கள் பேச மொழி இல்லாத மனிதர்கள், பேச விரும்பாத மனிதர்கள், நாவிலிருந்து வெளியேறும் சொற்களின் கனம் அறிந்த மனிதர்கள், கூழாங்கற்களை நாவுக்குள் உருட்டிக் கொண்டிருக்கிற மனிதர்கள் அவரின் கதாபாத்திரங்கள்.
அவர் திரைப்படங்களில் வருகிற கிராமம் வெயிலோடி, வெறிச்சோடி, ஆள் அரவமற்று பெரிய ஆர்ப்பாட் டங்கள் இல்லாமல் மத்‘தியான” அமைதியோடு காட்சியளிக்கும். உண்மையான கிராமங்களின் நிலையும் அதுதானே! இயக்குநர் மகேந்திரன் தமிழ் சினிமா என்கிற மாபெரும் வானத் தில் முதன்முறையாக இடமிருந்து வலதாகப் பறந்த கிருஷ்ணப் பருந்து.
மாபெரும் வெற்றியடைந்த ‘தங்கப் பதக்கம்’ படத்தின் வசனகர்த்தா, இயக்குநராக உருமாறும்போது குறைவான வசனங்களோடு ஒரு திரை மொழியை வரையத் தொடங்கிய முதல் திரைப்படம் ‘முள்ளும் மலரும்’. “நல்ல நல்ல வசனமாக எழுதுவேன்னு தானே உன்னை வெச்சுப் படம் தயாரிச்சேன்! இப்படி வசனமே இல்லாமப் படத்தை எடுத்து என் வாழ்க்கையில மண்ணள்ளிப்போட்டுட்டியே பாவி!” இது ‘முள்ளும் மலரும்’ திரைப்படம் வெளியான முதல்நாள் வசூலைப் பார்த்து அதன் தயாரிப்பாளர் மகேந்திரனிடம் வாசித்த பாராட்டுப் பத்திரம். அடுத்தடுத்த நாள்களில் படம் வெற்றியடைந்தது வரலாறு.
இரண்டு சட்டகங்கள்: தமிழ் சினிமாவின் மகத்தான இரண்டு திரைப்படங்கள் உதிரிப்பூக்களும் முள்ளும் மலரும். தமிழ் சினிமாவின் சிறந்த பத்துத் திரைப்படங்களை வரிசைப்படுத்தினால் மகேந்திரனின் இந்த இரண்டு திரைப்படங்களைத் தவிர்க்க இயலாது. இவை தமிழ் சினிமாவின் முகங்கள் என்று சொல்ல லாம். எப்படித் தமிழ் சினிமாவின் முகமாக மாறுகிறது?
முதலில் திரைப்படம் என்றால் அது திரை மொழியைத் தன் முகமாகக் கொண்டிருக்க வேண்டும். இயக்குநர் என்பவர் திரை மொழியால் கதையைச் சொல்லக் கடமைப்பட்டவர். இசை, ஒலி, ஒளி, நிசப்தம், காட்சித் துணுக்கு, நடிப்பு, படப்பிடிப்புத் தளங்கள், கேமரா இப்படி 24க்கும் அதிகமான கலை மற்றும் கலைஞர்களின் துணையோடு திரையில் தீட்டப்பட வேண்டிய ஓவியம்தான் திரைப்படம் என்கிற புரிதல் அவருக்கு வெகுநாள்களுக்கு முன்பிருந்தே இருந்திருக்கிறது.
‘உதிரிப்பூக்கள்’ திரைப்படம் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது வசனங்களைத் தாண்டி கண்ணை விட்டு அகலாத ஓர் அற்புதமான காட்சிப் பிம்பம். ஒரு சின்னஞ்சிறு பெண் குழந்தை தன்னுடைய அண்ணனுக்கு உடல் முழுவதும் சோப்பு போட்டுக் குளிப்பாட்டிவிடும் அந்தக் காட்சி. அதன் பின்னணியில் ஒலிக்கும் ‘அழகிய கண்ணே’ பாடல் மனதைக் கனக்க வைக்கிறது.
அம்மாவை இழந்த துயரிலும் தங்களுக்கென யாரும் இல்லாத அனாந்தர நிலையில், அந்தக் குழந்தைகள் எவ்வளவு மகிழ்ச்சியுடன் இருக்கின்றன என்பதையும் அந்த மகிழ்ச்சிக்குப் பின்னால் ஒளிந்தி ருக்கும் பாலைவனத் தனிமையின் சோகத்தையும் அந்தக் காட்சிப் பிம்பம் நமக்குக் கடத்துகிறது.
அந்தப் படம் அம்மாவோடு அந்த இரண்டு குழந்தைகள் நின்றிருக்கும் ஒளிப்படத்திலிருந்து தொடங்கி அம்மா இல்லாமல் அந்தக் குழந்தைகள் தனியே நின்றிருக்கும் காட்சிச் சட்டகத் தோடு முடியும். ‘அம்மாவும் அம்மா இல்லாமல் போதலும்’ - அது தானே அந்தத் திரைப்படம்! மொத்தத் திரைப் படத்தின் கதையையும் இரண்டு காட்சிச் சட்டகங்கள் வாயிலாகக் கடத்த முடியும் என்று நிரூபித்தார் மகேந்திரன்.
(இக்கட்டுரையின் நிறைவுப் பகுதி அடுத்த வாரம்)
- vasantabalan@gmail.com