Last Updated : 20 Apr, 2018 10:15 AM

Published : 20 Apr 2018 10:15 AM
Last Updated : 20 Apr 2018 10:15 AM

தரணி ஆளும் கணினி இசை 28: எப்படி கேட்பது, எப்படி ரசிப்பது?

த்தனை நவீன இசையமைப்பாளர் என்றாலும் அவரது கற்பனையைப் பின்தொடர்ந்து வருவதன் மூலம் தனது தனித்த மரபைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது தமிழ்த் திரையிசை. இந்த மரபை மீறி, தாம் பணியாற்றும் திரைப்படத்தைப் பிரபலப்படுத்த திரையில் இடம்பெறாத பல இசைப் பணிகளைச் செய்கிறார் இன்றைய இசையமைப்பாளர். ஒரு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று மோசன் போஸ்டராக வந்து மிரட்டுகிறது. அந்த மோசன் போஸ்டருக்கு அமைக்கப்படும் பின்னணி இசை சில நொடிகளே என்றாலும் அந்தப் படத்தின் மையத்தை அது தொட்டுக்காட்டிவிடுகிறது. அடுத்து டீஸர் இசை, பின்னர் புரமோ பாடலுக்கான இசை, அதன் பின்னர் மேக்கிங் வீடியோவுக்கான பாடலும் இசையும், இவை அனைத்துக்கும் உச்சமாக ட்ரைலர் இசை வரை இந்தப் பட்டியல் தொடர்கிறது. இந்த இசைவேலைகள் திரையில் இடம்பெறப்போவதில்லை. ஆனால், இந்தப் படத்தைத் தவறாமல் பார்க்க வேண்டும் என்று ரசிகரைத் தூண்டி வசியம் செய்யும் இந்த இசைப்பணி. இதை ஊறுகாய் என்று ஒதுக்க முடியாது. எத்தனை ருசியான விருந்தாக இருந்தாலும் ஊறுகாய்க்கு இலையில் இடமிருக்கிறது. ஊறுகாய் என்பதே உணவை இன்னும் ருசியாக உண்ணுவதற்குத்தான். திரையில் இடம்பெறாத இந்த இசை, படம் குறித்து அழுத்தமான அறிமுகத்தைச் செய்துவிடுகிறது. ஆனால், இந்த இசையைப் படம் பார்க்கும் முன்பு ஊறுகாய்போல் தொட்டுக்கொள்ளும் ரசிகர் அதன்பிறகு திரையில் இடம்பெற்றுத் தன்னைக் கவர்ந்த பாடல்களை மட்டுமே மீண்டும் மீண்டும் கேட்டு ரசிக்கிறார். தனது ரசனைப் பட்டியலில் அத்தகைய பாடல்களுக்குத் தன் இறுதி மூச்சு இருக்கும்வரை இடமளிக்கிறார். இப்படித் திரையிசையை வாழ்வின் ஒரு அங்கமாக்கிக்கொண்டதன் வழியாக வளர்ந்து திரண்டு நிற்கும் இசை ரசனை, இந்திய ரத்தத்தில் ஊறி நம் நாளங்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.

ரசிப்பும் கேட்பும்

நமக்குப் பிடித்த ஒரு பாடல் நாசகாரமாக ஒலித்தால் காதுகளை மூடிக்கொள்கிறோம். திரையிசையை எப்படி ரசிப்பது என்று யாரும் நமக்குச் சொல்லித்தரத் தேவையில்லை. ஏனெனில், திரையிசை என்பதே எளிமைப்படுத்தப்பட்ட ஒரு ஜனநாயக இசை வடிவம். ஆனால், திரையிசையை எப்படிக் கேட்பது என்பதில் நமக்கு வழிகாட்டுதல்கள் தேவை. திரையிசை, வெகுஜனப்படுத்தப்பட்ட இசை இரண்டையும் தனியாக ரசிக்கும்போது அதன் இனிமையை அனுபவிக்கும் நாம், அதை மற்றவர்களும் கேட்கும்படி பரிந்துரைக்கிறோம். அதுவே கூட்டாக, கூட்டமாக ஒரு இசை நிகழ்ச்சியில் ரசிக்கையில் உங்களின் ‘நேயர் விரும்பம்’ நண்பர்களிடம் பகிரப்படுகிறது. நீங்கள் ரசிக்கும் பாடல் உங்கள் நண்பனுக்கோ தோழிக்கோ அவ்வளவாகப் பிடிக்காமல் போகலாம். இந்த இடத்தில்தான் மற்றவரின் ரசனையை மதித்தல் இசை ரசனையின் முக்கிய அம்சமாக மாறுகிறது. திரையிசையில் இருக்கும் தத்துவமும் உணர்ச்சிகளும் அரசியலும் நீங்கள் வாழும் நிலம், மொழி அதன் பண்பாடு ஆகியவற்றுடன் உங்களைத் தொடர்புபடுத்தும்போது அந்தப் பாடல் தரும் பரவசமும் பெருமிதமும் ரசனையின் உச்சமாக உங்களால் உணரப்படுகிறது. இத்தனை சிறப்பு மிக்க இசையை எப்படிக் கேட்பது?

நம் காதுகள் நுட்பமான தொழில்நுட்பத்தில் இயங்குபவை. சின்னச்சின்ன இசை ஒலிகளையும் துணுக்குகளையும் கூட நுட்பமாக உணர்ந்து ரசிக்கக் கூடியவை. இத்தனை நுணுக்கமான கேட்புத்திறன் கொண்ட செவிகளால் தரமான ஒலி எது என்பதைப் பகுத்துணர முடியும். இப்படித் தரமான ஒலியைப் பகுத்துணரும் ஆற்றல் கொண்ட நாம் அனைவருமே ஆடியோஃபைல் (Audiophile) வகை ரசிகர்கள்தாம். அதனால்தான் சிறந்த, தரமான ஒலிக் கருவிகளில் இசையைக் கேட்கும்போது நாம் அதன் வசமாகி நிற்கிறோம்.

எம்பி3 இல்லாமல் இசை இல்லை

இன்று நாம் கேட்கக்கூடிய அனைத்து வகையான இசைகளும் எம்பி3 வழியாகத்தான் பிளே ஆகிறது. இதில் எந்த ஃபைல் ஃபார்மேட் அளவில் பதிவுசெய்யப்பட்ட இசையை நாம் கேட்கிறோம் என்பது முக்கியமானது. ‘வேவ்’ ஃபார்மேட்டில் பதிவு செய்யப்பட்ட இசை எத்தனை தரம் குறைவான ஒலிக்கருவியில் கேட்டாலும் இனிமையாக ஒலிக்கும் என்ற எண்ணம் நம்மிடம் வேரூன்றிவிட்டது. எம்பி3-ல் 320 கேபிபிஎஸ் அளவில் பதிவுசெய்யப்படும் இசை, வேவ் ஃபார்மெட்டுக்கு இணையானது. ஐந்து நிமிடம் கொண்ட ஒரு பாடலை வேவ் ஃபார்மெட்டில் பதிவு செய்தால் 10 எம்பி அளவு எடுத்துக்கொள்கிறது என்றால், எம்பி3 அதில் பாதியாக 5 எம்பி அளவே எடுத்துக்கொள்ளும். இதனால் இசையை உங்கள் கையடக்கருவி, பெண் டிரைவ்கள் என எதிலும் சேமித்து வைத்துக்கேட்க முடியும். மின்னஞ்சல் வழியாக இசையை எளிதாக நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியும். நீங்கள் கேட்கும் எம்பி3 இசை தரமாக இல்லை என்று கருதினால் முதலில் எது எத்தனை கேபிபிஎஸ் அளவில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பதைக் கவனியுங்கள். குறைந்தது 256 கேபிபிஎஸ் அளவில் பதிவுசெய்யப்பட்ட எம்3 இசையில், இசையமைப்பாளரால் ‘மாஸ்டரிங்’ செய்யப்பட்ட அனைந்து அம்சங்களையும் சேதாரம் இன்றிக் கேட்க முடியும்.

அதேபோல் ஒலிக்கருவிகள் கொண்டு திரையிசையை எந்த ஃபார்மேட் வழியாகக் கேட்கலாம் என்று வருகிறபோது ஸ்டீரியோ ஃபார்மேட்தான் உலகம் முழுவதும் இன்றும் சிறந்த ஒன்றாக நின்று நிலைபெற்றிருக்கிறது. காரணம் நம் இரு காதுகளைப் போல இரண்டு ஸ்பீக்கர்களின் வழியாக நாம் ஸ்டீரியோவில் நாம் கேட்கிறோம். இசையை ஸ்டீரியோவின் வழியே கேட்கும்போது சப்-வூப்பருடன் கூடிய 2.1 இன்று மிகப் பிரபலமான ஒலிக்கருவியாக உலகம் கொண்டாடிவருகிறது. ஆனால் 5.1, 7.1 தடங்களின் வழியே இசையை கேட்டு ரசிக்கலாமா? இசையைக் கேட்க, எவை சிறந்த ஒலிக்கருவிகள்,எது சிறந்த ஹெட்போன், எது சிறந்த ஆம்ப்ளிஃபையர்? எவ்வளவு வாட்ஸ் ஸ்பீக்கர் பயன்படுத்தலாம்? ஒரு சவுண்ட் சவுண்ட் ஸ்டுடியோ உணர்வை வீட்டில் பெற என்ன செய்வது?

அடுத்தவாரம் பகிர்கிறேன்.

தொடர்புக்கு: tajnoormd@gmail.com

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x