இலக்கியம் இவரால் பெருமை பெற்றது! - மனதோடு மகேந்திரன் 85

இலக்கியம் இவரால் பெருமை பெற்றது! - மனதோடு மகேந்திரன் 85
Updated on
3 min read

சிறுவயதில் இலங்கை வானொலியில் ‘தங்கப் பதக்கம்’ படத்தின் ஒலிச் சித்திரத்தைப் பலமுறை கேட்டதுண்டு. வளர்ந்ததும் திரையில் அவர் நடித்த படங்களைப் பார்த்து வளர்ந்தவர்களில் நானும் ஒருவன். ‘தங்கப் பதக்க’த்தில் எஸ்.பி.சௌத்ரியாக வாழ்ந்திருந்த சிவாஜி கணேசன் தனது மனைவி லட்சுமி இறந்த துயரச் செய்தியைக் கேட்டு வீட்டுக்கு வருவார். சீருடையின் மேல் சட்டையைக் கழற்றி வைத்துவிட்டு, மனைவியின் உடல் அருகில் ஆராவாரம் இல்லாமல் போய் அமர்ந்து, “லட்சுமி, எப்போதுமே நான் லேட்டா வருவேன்.

நீ எனக்காகத் தூங்காம காத்திருப்பே! இன்னிக்கு நான் சீக்கிரம் வந்திருக்கேன். நீ தூங்கிட்டியே!” என்று அழுவார். வசனங்கள் இல்லாமல் அவர் வீட்டுக்குள் நுழைவது, மனைவி இறந்திருக்கும் வலியான தருணத்தில் அந்த ஒரே வசனத்தை மட்டுமே அவர் பேசியது, வழக்கமான சிவாஜி படங்களில் அவரது உணர்ச்சிவசப்பட்ட நடிப்பைக் கண்டு ரசித்திருந்த எனக்கு ஏமாற்றத்தையும் வியப்பையும் ஒருசேர அளித்தது.

இத்தகைய காட்சியாக்கத்தை நிர்ப்பந்தித்தது அப்படத்துக்கு எழுதப்பட்டிருந்த அளவான வசனங்கள். வசனம் வழியாக கதையை நகர்த்தி வந்த தமிழ் சினிமாவை, அதே வசனத்தாலேயே மாற்ற முடியும் என்று காட்டியவர்தான் மறக்க முடியாத நம் மகேந்திரன்!

காட்சியும் வசனமும்: வசனகர்த்தாவாக இருபத்தைந்து திரைப்படங்களுக்கு மேல் பணியாற்றியிருந்தும், வசனங்களின் தொகுப்பாக இருந்த தமிழ் சினிமாவை, இயக்குநராக அவர் மாறியபோது காட்சியின் கலை என எடுத்துக்காட்டியவர். அதேநேரம் ஒரு சில வார்த்தைகளைக் கொண்ட ஒற்றை வசனத்தின் மூலம் கதாபாத்திரங்களின் குணநலன்களையும் சூழலையும் நிறுவிக் காட்டிவிடும் இலக்கியத் தரமான வசனப் பொருண்மையும் அவரது எழுத்தில் இருந்தது.

‘முள்ளும் மலரும்’ படத்தில் புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் உயர் அதிகாரியான சரத்பாபுவிடம் காளியாக வரும் ரஜினியைப் பற்றி அலுவலக உதவியாளர் ஒருவர் எதிர்மறையான கருத்துக்களை அடுக்குவார். உதவியாளரின் சுயநலத்தை உணர்ந்த பொறியாளர், “நம்ம ஆபிஸ்ல தம்பியே இல்லாத குமாஸ்தா யாரும் இருக்காங்களா? ஏன்னா காளியைப் பத்தின உண்மையான விபரத்தை தெரிஞ்சுக்க விரும்புறேன்” என்பார். காட்சியும் வசனமும் கைகோத்த சிறப்பான காட்சி அது.

அவருடைய திரைப்படங்களில் கவனிக்கப்படாத ஒன்றாக நான் கருதுவது, ‘பூட்டாத பூட்டுக்களை’த்தான்! அதில், கணவனின் பார்வையிழப்பால், ஓடு வேய்ந்த தனது வீட்டையே உணவகமாக மாற்றி தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து வருவார் நாயகி. அந்த ஊருக்குப் புதிதாக வரும் வங்கி அலுவலர், நாயகியின் உணவகத்துக்கு வந்துச் சாப்பிட உட்காருவார்.

அப்போது, உணவு பரிமாறும் நாயகியை இச்சையான பார்வையால் துளைத்தெடுப்பார். அப்போது, நாயகி அலுவலரின் பார்வையைத் தனது ஓட்டு வீட்டின் கூரையை நோக்கி திசை திருப்புவார். அவர் திசை திருப்பிய இடத்தில் ஒரு பிய்ந்த விளக்குமாறு செருகி வைக்கப்பட்டிருக்கும். அடுத்த அண்மைக் காட்சியில் அலுவலரின் முகம் வெலவெலத்து வியர்த்திருக்கும். வந்தவனின் நோக்கத்தையும், நாயகியின் நிலைப்பாட்டையும் பார்வையாளர்களுக்குக் காட்சி வழி உணர்த்த மகேந்திரன் பயன்படுத்தியது நான்கு சிறிய ஷாட்கள்தான்!

‘உதிரிப் பூக்க’ளில் தனது மனைவியின் தங்கையைத் தானே இரண்டாவதாக மணமுடிக்கப்போவதாக சுந்தரவடிவேலு தனது மாமனாரிடமே அதிகாரத் தோரணையுடன் சொல்வார். அப்போது, அவரது மாமனார் “நான் என் குழந்தைகளுக்குத் தகப்பனாகவே இருக்க விரும்புறேன்” என்பார். இந்த பதில் சுந்தரவடிவேலுவுக்கு முகத்தில் அறைந்தாற் போல் இருக்கும். இந்த வசனத்தைக் கழிவிரக்கம் காரணமாக அன்றி, தன்மானம் கருதியே மாமனார் பேசுவதாக மகேந்திரன் காட்சியை அமைத்திருப்பார்.

‘உதிரிப் பூக்க’ளில் மற்றொரு காட்சி. சுந்தர வடிவேலு தனது மனைவியையும் குழந்தைகளையும் மாலைக் காட்சி திரைப்படத்துக்கு அழைத்துச் செல்வதாகக் கூறும்போது, மனைவி வியந்து வீட்டுக்கு வெளியே வந்து வானத்தைப் பார்க்கிறாள். வெளிர் நிறமாக வெறித்துக் கிடக்கிறது வானம்! காட்சிமொழியை நாடாத ஓர் இயக்குநரின் திரைப்படமென்றால் மனைவி தனது கணவனிடம், ‘இன்னிக்கு மழை ஏதும் வருதா?’ என்று கேட்டு வசனம் வழி தனது எதிர்வினையைக் காட்டியிருப்பார்.

இலக்கியத்துக்குப் பெருமை: மகேந்திரன் இறுதியாக இயக்கியிருந்த படம் ‘சாசனம்’. அதில் அப்பச்சியான நாயகன், தனது வீட்டில் பணியாளாக இருந்த பெண்ணின் மகளுடன் முறையற்ற உறவில் விழுந்திருப்பார். இவ்விவகாரம், அவரது மனைவியான ஆச்சிக்குத் தெரியவரும்போது ஆச்சியின் வசனங்களில் அப்படியொரு நிதானமும் பக்குவமும் படர்ந்திருக்கும்! அந்த உரையாடல் முழுவதும் வீட்டுத் திண்ணையில் நடக்கும்.

முடிவில் ஆச்சி அந்தப் பெண்ணை வீட்டுக்குள் அழைத்துச் செல்வார். தனது கணவனின் செயலில் உடன்பாடு இல்லையென்றாலும் எந்தவொரு நாடகமும் இன்றி பாதிக்கப்பட்ட பெண்ணை ஏற்றுக்கொள்ளும் விதம் காட்சி வழியாகவே உணர்த்தப்பட்டிருக்கும்.

அவருடைய திரைப்படங்களால்தான் நவீனத் தமிழ் இலக்கியம் பெருமை பெற்று பொதுச் சமூகத்தில் மேலெழுந்து வந்தது. உமா சந்திரனின் ‘முள்ளும் மலரும்’. புதுமைப்பித்தனின் ‘சிற்றன்னை’ ( உதிரிப்பூக்கள்), பொன்னீலனின் ‘பூட்டாத பூட்டுக்கள்’, சிவசங்கரியின் ‘நண்டு’ என வாசிப்பின் வழி தன்னைக் கவர்ந்த நாவல்களில் மையச் சரடுகளைக் கொண்டு காட்சி மொழி சினிமாக்களாகப் படைத்துத் தந்தார்.

நமது இலக்கியத்தில் கதைகளுக்கு வறுமையில்லை எனக் காட்டிச் சென்றிருக்கிறார். தி ஜானகிராமன் அவர் பெரிதும் விரும்பி வாசித்த எழுத்தாளர். அவரது ‘மோகமுள்’ நாவலைத் திரைப்படமாக ஆக்குவதற்காகப் பலமுறை அந்த நாவலை வாசித்து திரைக்கதை எழுதி வைத்திருந்தார். கல்கியின் ‘பொன்னியின் செல்வ’னுக்கு எம்.ஜி.ஆரின் வேண்டுகோளை ஏற்றுத் திரைக்கதை எழுதினார். இந்த இரண்டுமே நமக்கு அவரிடமிருந்து கிடைக்காமல் போய்விட்டன.

தமிழ் சினிமா உலகத்தரத்தை எட்டுவதற்குப் பாடல்கள் பெரும் தடையாக இருப்பதாக மகேந்திரன் கூறியிருக்கிறார்.அதே வேளையில், கதையை நகர்த்திச் செல்லவும் கதாபாத்திர உணர்ச்சியை மேலெழச் செய்யவும் திரைப்பாடல்களைக் காட்சிகளின் தொகுப்பாகப் பயன்படுத்தமுடியும் என உணர்த்திச் சென்றவர். ‘ஜானி’ திரைப்படம் இசையைப் பற்றியதாக இருந்ததால் மட்டுமே, அந்தப் படத்தின் பாடல்களுக்குக் கதை மாந்தர்களை வாயசைக்க அனுமதித்து இருப்பார்.

மகேந்திரனின் இந்தக் காட்சிவழி முயற்சியே இன்றைய தலைமுறை வரை தாவிப் படர்கிறது. தனது திரைப்படங்களில் பின்னணி இசையின் பங்கைக் குறித்துப் பெருமிதமாகப் பேசுவார் மகேந்திரன்! “இளையராஜாவின் பின்னணி இசை மட்டும் இல்லை என்றால், என்னுடைய படங்கள் வெறும் காட்சிகளின் தொகுப்பு தான்” என்று தனது சக கலைஞனுக்குப் பெரு மதிப்பளித்தார். இளையராஜா, பாலு மகேந்திரா, அசோக் குமார் ஆகிய கலைஞர்கள் மகேந்திரனின் படைப்புலகில் சாகா வரம் பெற்றவர்கள். மகேந்திரனோ என்றைக்கும் மறக்க முடியாதா மகா கலைஞன்.

- கட்டுரையாளர், இந்தியக் கடலோரக் காவல் படையில் கமாண்டன்ட்; nsscg1992@gmail.com

அடுத்த வாரம் மகேந்திரனைக் கொண்டாடவிருப்பவர் இயக்குநர் வசந்தபாலன்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in