Published : 27 May 2018 04:46 AM
Last Updated : 27 May 2018 04:46 AM

செம- விமர்சனம்

தா

யுடன் வசிக்கும் ஜி.வி.பிரகாஷ், தனது உறவுக்கார நண்பன் யோகிபாபுவுடன் சேர்ந்து காய்கறி, மீன் ஆகியவற்றை வண்டியில் வைத்து விற்கும் தொழில் செய்யும் இளைஞன். அவருக்கு 3 மாதங்களுக்குள் திருமணம் நடக்காவிட்டால், அதற்குப் பிறகு 6 ஆண்டுகள் தாமதமாகும் என்கிறார் ஜோசியர். இதனால், மகனுக்கு உடனே திருமணம் செய்யத் தீர்மானிக்கிறார் தாய். பல இடங்களில் பெண் பார்த்தும், யாரும் ஜி.வி.பிரகாஷை திருமணம் செய்ய சம்மதிக்கவில்லை. வெளியூரைச் சேர்ந்த மன்சூர் அலிகான் - கோவை சரளாவின் மகளான அர்த்தனா பினுவை (கதாநாயகி) பெண் பார்க்கச் செல்கின்றனர். அவர்கள் திருமணத்துக்கு சம்மதிக்கின்றனர். அப்போது, உள்ளூர் எம்எல்ஏவின் மகனால் தடங்கல் வருகிறது. ஊர் முழுக்க கடன் வாங்கியிருக்கும் மன்சூர் அலிகானிடம், அனைத்து கடன்களையும் அடைப்பதாகச் சொல்லி அவன் பெண் கேட்கிறான். இதனால், நடக்க இருந்த திருமணத்தை கடைசி நேரத்தில் நிறுத்துகிறார் மன்சூர் அலிகான். நின்றுபோன திருமணம் என்ன ஆனது? ஜோசியர் சொன்னபடி 3 மாதங்களுக்குள் திருமணம் நடந்ததா? என்பது மீதிக் கதை.

இதைக் கலகலப்பாக சொல்ல முயன்றிருக்கிறார் அறிமுக இயக்குநர் வள்ளிகாந்த். அரதப் பழசான கதைக்களம் என்றாலும் காட்சிகள் மூலம் சுவாரசியத்தை தந்திருக்கலாம். ஆனால், அதற்கும் இயக்குநர் பெரிதாக மெனக்கடவில்லை. இரண்டாம் பாதி முழுவதும் நம்பகத்தன்மையோ, சுவாரசியமோ இல்லாமல் ஏனோதானோ என்று நகர்கிறது. மன வருத்தம் காரணமாக நாயகனின் தாய் தொடர்ந்து தற்கொலைக்கு முயற்சிக்கிறார். அவரை நாயகன் காப்பாற்றியும் விடுகிறார். ஆனால், தந்தை, உடன்பிறந்தவர்கள் யாருமே இல்லாமல் தனக்கு ஒரே ஆதரவாக இருக்கும் தாயின் இந்தப் பிரச்சினையை சரிசெய்ய நாயகன் எந்த முயற்சியும் எடுக்காதது ஏன்? இதுபோல பல லாஜிக் ஓட்டைகள். சரி, லாஜிக்கை மறக்கும் அளவுக்கு நகைச்சுவையாவது கைகொடுக்கிறதா என்றால் அதுவும் இல்லை.

ஜி.வி.பிரகாஷ் ஓவர் ஹீரோ பில்டப் இல்லாமல் அடக்கி வாசிக்கிறார். வேலை இல்லாமல் ஊரைச் சுற்றும் இளைஞனாக, ரவுடியாகக் காட்டாமல், பொறுப்புள்ள பையனாக காட்டியிருப்பது ரசிக்க வைக்கிறது. அம்மாவிடம் பாசத்தைக் காட்டுவதிலும், காதலியிடம் காதலைப் பொழிவதிலும் பாஸ் மார்க் வாங்குகிறார். நாயகி அர்த்தனா பினு, குறைவின்றி நடித்திருக்கிறார். நாயகனின் அம்மாவாக ‘பசங்க’ சுஜாதா. அவரது நடிப்பு மனதில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. வம்பு பேசும் பெண்ணாக வருபவரின் முகபாவங்களும், வட்டார வழக்கு தோய்ந்த வசன உச்சரிப்பும் மனதில் பதிகின்றன.

மன்சூர் அலிகான், கோவை சரளா, யோகிபாபு ஆங்காங்கே சிரிக்க வைக்கின்றனர். ஆனால், ஒட்டுமொத்தப் படத்தையும் தூக்கி நிறுத்த இது போதுமானதாக இல்லை. பெண்களை யோகிபாபு தரக்குறைவாக விமர்சிக்கும் காட்சிகளும், வயதில் மூத்தவர்களை கவுண்டமணி பாணியில் ‘வாடா போடா’ என்பதும் எரிச்சலை ஏற்படுத்துகின்றன. வில்லன் பில்டப்புடன் ஒரு இளைஞரை (எம்எல்ஏ மகன்) காட்டி, கடைசியில் அவரையும் டம்மிபீஸ் ஆக்கிவிட்டார்கள். தயாரிப்பாளர் பாண்டிராஜின் வசனம் படத்துக்கு பலம். அதற்காக, எல்லா இடத்திலும் கதாபாத்திரங்கள் பேசிக்கொண்டே இருப்பது ஒருகட்டத்தில் அலுப்பு தட்டுகிறது. ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் ரசிக்கும்படி இருக்கின்றன. குறிப்பாக ‘சண்டாளி’ பாடல் காட்சி ரசனை. விவேக் ஆனந்த் ஒளிப்பதிவும் பிரதீப் ஈ.ராகவ் படத்தொகுப்பும் படத்தை முட்டுக் கொடுத்து நிறுத்துகின்றன.

கலகலப்பான படம் எடுக்கும் ஆசை, அரைகுறையாக நிறைவேறியிருக்கிறது. திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி, வலுவான திருப்பங்களை சேர்த்திருந்தால் படம், ‘செம’யாக இருந்திருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x