

அந்தோணி சென் சிங்கப்பூரைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர். அவரது முதல் படமான ‘இலோ இலோ’ (Mom and Dad are not Home) 2013 கான் படவிழாவில் விருதை வென்றது. 1997இல் ஆசிய அளவிலான பொருளாதார வீழ்ச்சி நிகழ்ந்தது.
அப்போது, பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து சிங்கப்பூரில் வீட்டுப் பணியாளாகத் தஞ்சம் புகுந்த நடுத்தர வயதுப் பெண் தெரசா. அவர் பணியில் சேர்ந்த குடும்பத்தில் அடங்காத குணம்கொண்ட சிறுவனாக இருக்கிறான் ஜியால். அவனைப் பேணிப் பாதுகாக்கும் தெரசாவுக்கும் ஜியாலுக்கும் இடையிலான பாசப் பிணைப்பைக் காட்சிப்படுத்தும் படமே ‘இலோ இலோ’.
அந்தோணி சென்னின் இரண்டாவது படம் ‘ஈரமான பருவம்’ (Wet Season). ஒரு விடலைப் பருவ மாணவனுக்கும் மலேசிய சீனப் பிரஜையான ஆசிரியைக்கும் இடையே ஏற்படும் காதலுணர்ச்சியைப் பற்றியது.
‘இலோ இலோ’ படத்தில் நடித்த கோ ஜியா லெர் என்கிற சிறுவனே ‘ஈரமான பருவம்’ படத்தில் விடலைப் பருவ மாணவனாக வருகிறார். ஆஸ்கர் விருதுப் போட்டியில் கலந்துகொண்டது உள்பட, பல விருதுகளைப் பெற்றுத் தந்த இப்படத்தைத் தொடர்ந்து அந்தோணி சென் இயக்கியிருக்கும் படம் ‘சறுக்குதல்’ (Drift).
போரின் மகள்: இந்தப் படமும் புலம்பெயர்வோரின் வாழ்வையே மையமிடுகிறது. எந்த நேரத்தில் யாரால் கொல்லப்படுவோம் என்பதே தெரியாமல் வாழ வேண்டிய நெருக்கடியைத் தருகிறது உள்நாட்டுப் போர். உள்நாட்டுப் போர் உக்கிரமாக இருந்த லைபீரியாவிலிருந்து கிரீஸ் நாட்டிலுள்ள ஒரு தீவின் கடற்கரைப் பகுதிக்குத் தஞ்சம் தேடி வருகிறார் கறுப்பின இளம் பெண்ணான ஜாக்குலின்.
அந்தக் கடற்கரை பிரதேசம் வெள்ளை யர்கள் சூரியக் குளியல் (Sun Bath) செய்து உல்லாசமாகத் திரியும் பகுதி. ஜாக்குலின் அவர்களது பாதங்களை நீவிவிடும் (Massage) பணியைச் செய்து, தனது வாழ்க்கை நடத்துகிறாள். திக்கற்றுப்போன நிலையில் அவளது மனமும் வாழ்வும் தத்தளிக்கின்றன.
ஒரு கட்டத்தில் பணியின்மையால் பட்டினியைப் பழகிக்கொள்ளும் நிலை. சுற்றுலாப் பயணிகளுக்குக் கடற்கரையை ஒட்டியுள்ள வரலாற்றுச் சின்னங்கள் குறித்து விவரிக்கும் வழிகாட்டியாக வரும் அமெரிக்கப் பிரஜையான கால்லி யுடன் ஜாக்குலினுக்கு நட்பு துளிர்த்து வளர்கிறது. ஜாக்குலினின் மனக் கொந்தளிப்பைப் புரிந்துகொள்ளும் கால்வி, அவளுடன் நட்பைப் பேணுகிறாள்.
லைபீரியப் போரின்போது தன்னுடைய பாசம் மிக்க பணக்காரப் பெற்றோரையும் தனது கர்ப்பிணி சகோதரி யையும் கொலை வெறித் தாக்குதலுக்குப் பலிகொடுத்தவள் தான் ஜாக்குலின். அந்தக் கொடிய சம்பவங்களின் வன்துரத்துதல் அவளது ஆழ்மனதில் நினைவெழும் போதெல்லாம் புத்திபேதலித்த உணர்ச்சிநிலைக்குச் செல்வது நிகழ்கிறது.
தமிழில் ஒரு மஞ்சு: இந்தக் கதாபாத்திர மாதிரியை நாம் தமிழ் சினிமாவிலும் பார்த்திருக்கிறோம். தமிழின் பெரும் திரை மேதையாகப் பரிணமித்திருக்க வேண்டியவர் ருத்ரய்யா. அவர் இயக்கிய ‘அவள் அப்படித்தான்’ படத்தில் தோன்றும் மஞ்சு (ஸ்ரீபிரியா) கதாபாத்திரம், தன்னைச் சுற்றி நிகழ்ந்த வன் சம்பவங்கள் காரணமாக அவ்வப்போது புத்திபேதலித்த நிலையை அடைவாள்.
அவளது அகக் கொந்தளிப்பைத் தணிக்க அருண் (கமல்ஹாசன்) முயல்வது தொடர் போராட்டமாக இருக்கும். அதேவிதமான புரிந்துணர்வோடு ‘சறுக்குதல்’ படத்தில் கால்லி ஒரு சிறந்த தோழியாக ஜாக்குலினது வேதனையை ஆற்றுப்படுத்த முயன்றபடி அவளைப் பின்தொடர்கிறாள். நாடுகள் கடந்த அந்த நட்புறவும் வேறுபாடுகள் களைந்த மானுட நேய மேன்மையின் வேர் அரும்புதலாக திரைப்பரப்பில் நம்மை ஆட்கொள்கிறது.
ஜாக்குலினாக வரும் பிரித்தானிய நடிகர் சிந்தியா எரிவோ, தோழியாக வரும் அலியா செளகத் ஆகிய இருவரது நடிப்பும் நாம் திரைப்படம்தான் பார்த்துக்கொண்டிருக்கிறோமா என்கிற சந்தேகத்தை உருவாக்குகிறது. அந்த அளவுக்கு இருவரும் நிஜக் கதாபாத்திரங்களாகவே வடிவ மெடுத்து தாளவொண்ணாத துயர அனுபவங்களை நமது பார்வைக்குப் பகிர்கி றார்கள். சிந்தியா எரிவோ நம்மைப் பல காட்சிகளில் கண்கலங்கச் செய்து விடுகிறார். ஏதிலி வாழ்வை அதுவும் ஒரு பெண்ணாக இருக்கும்போது எதிர்கொள்ளும் சிரமங் களை நமது உணர்வில் ஏற்றிவிடுகிறார்.
இலக்கியம் வழியாக.. சுற்றுலா வழிகாட்டியாக வரும் அலியா செளகத் கள்ளங்கபடமற்ற ஒரு சிறந்த தோழிக்கான மன வனப்பைத் தனது தோற்றத்திலேயே பெற்றிருக்கிறார். இவரைப் போன்ற நடிகர்கள் எவ்வளவு மணிநேரம் திரைப்பரப்பில் தோன்றினாலும், பிரஞ்சு திரை மேதை ழாக் ரிவெட்டின் (Jacques Rivette) திரைப்படங்களைக் காண்பதுபோல் பார்வையாளருக்குச் சலிப்பே வராது.
அலெக்சாண்டர் மகசிக் எழுதிய ‘A Marker to Measure Drift’ என்கிற நாவலை அடியொற்றி எடுக்கப்பட்ட இப்படத்தில் திரைக்கதையை மக்சிக்குடன் இணைந்து சூசன் ஃபெரல் எழுதியிருக்கிறார். “‘சறுக்குதல்’ திரைப்படம் நம்மை உள்ளிழுத்துவிடக் கூடியதும் ஆழமானது மான மனித சக்தியின் வலிமையைப் பற்றிய கதை.” என்கிறார் படத்தின் இயக்குநரான அந்தோணி சென். “புலம்பெயர்வோரின் வாழ்வை அதன் தனித்துவத்தோடும் அடர்த்தியோடும் சிந்தனைப்பூர்வமாகவும் விவரிப்பதால் இந்தப் படத்துக்குள் நான் ஈர்க்கப்பட் டேன்” என்று கூறுகிறார் நடிகை சிந்தியா எரிவோ. அவரே இந்தப் படத்தின் கூட்டுத் தயாரிப்பில் பங்காற்றியிருக்கிறார்.
1989 தொடங்கி 2003 வரை லைபீரியா வில் அடுத்தடுத்து நடைபெற்ற இரண்டு உள்நாட்டுப் போரில் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டார்கள். ஆயிரக்கணக்கானோர் புலம்பெயர்ந் தார்கள். ‘சறுக்குதல்’ படத்தின் காலகட்டம் இந்த இரண்டு போர்களின் பின்னணியில் தான் இடம்பெற்றிருக்கவேண்டும்.
ஆயினும், படத்தில் அதற்கான சுட்டுதல் இல்லை. சமகாலத்தில் நடப்பதுபோன்ற தொனியையே கொண்டுள்ளது. உலக சினிமாவில் பல திரைப்படங்கள் இவ்விதம் காலத்தைக் குறிக்காமல் எடுக்கப்பட்டிருக்கின்றன. உலகெங்கும் நிலவும் வன்முறை குறித்த பொதுக் குறியீடாகப் போரை அப்படங்கள் முன்வைத்திருக்கின்றன.
உதாரணத்திற்கு, பிரெஞ்சு இயக்குந ரான புருனோ டுமாண்டின் ‘கைவிடப் பட்டவர்கள்’ (Flanders) படத்தில் வரலாற்றுக் குறிப்பின்றிப் போர்க் காலம் சித்திரிக்கப்பட்டிருக்கும். அது ஒரு குறிப்பிட்ட நாட்டினது போராக முற்றுப்பெறாமல் உலகளாவிய போர்களின் மீதான விமர்சனமாக விரிவடைந்திருக்கும். திரைக்கதை சார்ந்து இந்த அர்த்தப்பூர்வ அணுகலை ஒரு சிறந்த உத்தியாகத்தான் நாம் அவதானிக்கவேண்டும்.
- viswamithran@gmail.com