

தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், மற்ற மூன்று தென் மாநிலங்களிலும் கார்த்தி தனது ரசிகர் மன்றங்களை மக்கள் நல மன்றங்களாக செயல்பட ஊக்குவித்து வருகிறார். கடந்த மே 25, கார்த்தியின் 47வது பிறந்த நாள்.
அன்று அவருடைய ரசிகர்கள் தமிழகத்தின் பல மாவட்ட தலைநகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கூட்டமாகச் சென்று ரத்ததானம் செய்தனர். இதையறிந்த கார்த்தி, ரத்ததானம் செய்த 200 ரசிகர்களைச் சமீபத்தில் சென்னையில் உள்ள தனது அலுவலகத்துக்கு அழைத்து, சான்றிதழும் விருந்தும் அளித்து அவர்களைப் பாராட்டினார்.
அந்த நிகழ்ச்சியில் கார்த்தி பேசும்போது: “அரசு மருத்துவமனைக்குப் போய் பெரிய அளவில் யாரும் குருதிக் கொடை செய்வதில்லை. அவரவர் தங்களுடைய உறவினர்கள் சிகிச்சையில் இருக்கும்போது ரத்தம் தேவைப்பட்டால் கொஞ்சம் தயக்கத்தோடு கொடுப்பதைப் பார்த்திருக்கிறேன். ஆனால், யாரென்றே தெரியாதவர்களுக்கு உங்கள் குருதியைக் கொடையளித்திருக்கிறீர்கள்.
இது சாதாரணச் செயல் கிடையாது. அடுத்த பிறந்த நாளின்போது நானும் உங்களோடு குருதி கொடைக்கு முன்வரிசையில் நிற்பேன்” என்றவர், "தற்போது எனது நடிப்பில் இரண்டு படங்கள் முடிந்துவிட்டன, விரைவில் அவை வெளியாகும். அடுத்து ‘சர்தார் 2’ படமும் 2025இல் லோகேஷுடன் இணைந்து மீண்டும் பிரியாணி பக்கெட்டை கையிலெடுக்கவும் இருக்கிறேன்” என்று ‘கைதி 2’ படத்தைப் பற்றிக் குறிப்பிட்டு ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தினார்.
‘யோலோ’ காதல்: இயக்குநர்கள் அமீர், சமுத்திரக்கனி ஆகியோ ரிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய எஸ்.சாம் எழுதி இயக்கும் முதல் படம் ‘யோலோ'. எம்.ஆர்.மோசன் பிக்சர்ஸ் சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், தேவ் நாயகனாகவும் தேவிகா நாயகியாகவும் நடிக்கிறார்கள். இப்படத்தின் தொடக்க விழாவில் அமீர், சமுத்திரக்கனி, சுப்பிரமணியம் சிவா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
படம் குறித்து இயக்குநர் கூறும்போது; “வாழ்க்கையை ஒரு முறை தான் வாழப் போகிறோம். அதைச் சரியாக வாழுங்கள் எனும் கருத்தில், மனதை இலகுவாக்கி, முகத்தில் புன்னகை மலரச் செய்யும் காதல் படமாக இதை உருவாக்குகிறோம். இன்றைய தலை முறை வாழ்க்கையில் காதல் என்னவாக இருக்கிறது என்பதே படம். இதில் சினிமாத் தனம் இருக்காது” என்றார். அமீர் பேசும்போது “சாம் எனது சிறந்த தொடர்ச்சியாக இருப்பார்” என்றார்.
10 வது முறையாகக் கூட்டணி! - சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி - ஃபரியா அப்துல்லா நடிப்பில் உருவாகியுள்ள ‘வள்ளி மயில்’ திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. இதனால் தனது அடுத்த படத்தைத் தொடங்கிவிட்டார். படத்துக்கு ‘2கே லவ் ஸ்டோரி’ என தலைப்புச் சூட்டியிருக்கிறார். சிட்டி லைட்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்துக்கு இசை டி.இமான்.
இது சுசீந்திரனுடன் இமான் இணையும் 10வது படம். படம் குறித்து சுசீந்திரன் கூறும்போது: “திருமண போட்டோ, வீடியோ எடுக்கும் ஒரு இளைஞர்கள் குழுவின் வாழ்க்கையில் நடக்கும் எதிர்பாராத ஜிலீர் சம்பவங்கள்தான் கதை” என்றார். இப்படத்தில் ஜெகவீர் நாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார். இவர்களுடன் பால சரவணன், ஆண்டனி பாக்யராஜ், ஜெயபிரகாஷ், வினோதினி உட்படப் பெரும் நடிகர்கள் கூட்டம் படத்தில் இருக்கிறது.