

மெட்டுக்கு 15 நிமிடங்களில் அந்தப் பாடலை எழுதிவிட்டார் நா.முத்துக்குமார். ‘நீங்கள் எழுதியிருக்கும் இந்த வரிகளில் மாயாஜாலம் இல்லை. மிகவும் எளிமையாக மட்டுமே இருக்கிறது’ என்றார், அவருக்குப் பின்னாளில் நெருங்கிய நண்பராகிவிட்ட அந்த புதிய இயக்குநர். ஆனால், நா.முத்துக்குமார் பிடிவாதமாக "இது ஓர் எளிய இளைஞனின் சொல்லத் தெரியாத மன அவஸ்தை; அவனுக்கு இந்தச் சூழ்நிலையில் மாயாஜாலம் தேவையில்லை" என்றார்.
அந்த வரிகள் ‘தேவதையைக் கண் டேன்.. காதலில் விழுந்தேன்’. இந்தப் பாடல் புத்தாயிரத் தலைமுறையின் சித்தத்தில் பித்தாக இறங்கியதைக் கண்டு வியப்படைந்தார் இயக்குநர். இளைஞர்களோ யுவன் - செல்வா - முத்துகுமார் என்கிற மூவரி ணைக்காகத் தவமிருக்கத் தொடங்கினர்.
எளிமை, நவீனக் கவிதைகளின் நிழல், சங்க இலக்கியத்தின் கவித்துவ, தத்துவச் சாயல், ஹைக்கூ, சென்ரியூ போன்ற இறக்குமதியான கவிதைகளின் தடம் எனத் தனது வரிகளின் பன்முகத் தன்மையை உள்ளார்ந்து ஒற்றைப் புள்ளியில் இயங்கவைத்தார் நா. முத்துக் குமார். அவரது வரவு, நவீனத் தமிழ்க் கவிதைகளையும் கவிஞர்களை யும் இணையத்திலேனும் தேடி வாசிக்கும் பழக்கமாகப் புத்தாயிரத் தலை முறைக்குள் குடிபுகுந்து கொண்டது.
தத்துவப் பாடல்கள் வழக்கொழிந்து விட்ட காலம். அப்போது, ‘கடல் தாண்டும் பறவைக்கெல்லாம் இளைப்பாற மரங்கள் இல்லை, கலங்காமலே கண்டம் தாண்டுமே’, ‘எத்தனை கோடி கண்ணீர் மண் மீது விழுந்திருக்கும் அத்தனை கண்ட பின்னும் பூமி இன்னும் பூப்பூக்கும்’ என்பன உள்ளிட்ட முத்தான தத்துவத் தெறிப்புகளைக் காதல் பாடல்களின் நடுவில் பத்திரமாகப் பதியமிட்டுச் சென்று விடுவார்.
‘ஆனந்த யாழில்’ தகப்பனாகவும் ‘அழகே அழகே’வில் மகளாகவும் கூடு விட்டுக் கூடு பாய்ந்து உறவுகளின் உணர்வுகளை வரிகளில் வடித்ததாலேயே இரண்டு பாடல்களுக்கும் தேசிய விருது பெற்றார்.
‘அவள் அப்படி ஒன்றும் அழகில்லை’, ‘பூக்கள் பூக்கும் தருணம்’, ‘உனக்கென இருப்பேன்’ போன்ற பாடல்கள் மொழியின் ஜாலங்கள் தெரியாத எளியவர்களின் காதல் மொழியாக முத்துக்குமாரின் வரி களில் மனங்களுக்கிடையில் மருத்துவம் செய்தன.
‘கறுப்பு வெள்ளைப் பூக்கள் உண்டா? உன் கண்கள் வண்டை உண்ணும் பூக்கள் என்பேன்’, ‘கல்லறை மீது பூத்த பூக்கள் என்றுதான் வண்ணத்துப்பூச்சிகள் பார்த்திடுமா?’ என்று காதலின் சாமானிய இயல்பையும், ‘முதல் முறை முறிந்த கிளை ஒன்று பூக்குதே’ என முறிந்த மனதில் துளிர்க்கும் காதலையும் காட்சி மொழியை வரிகளில் விரிக்கும் வலி கலந்த கொண்டாட்டம் அவரது பாட்டு உலகம்.
இன்னொரு பக்கம் ‘காட்டிலே காயும் நிலவு கண்டுகொள்ள யாருமில்லை’, ‘இருட்டினிலே நீ நடக்கையிலே நிழலும் உன்னை விட்டு விலகி விடும்" என ஹைக்கூவின் ஏகாந்த மௌன வெளியைத் திரைப்பாடல்களுக்குள் பிடித்து அடைத்தது நா.முத்துக்குமாரின் சத்தம் இல்லாத சாதனைகளில் ஒன்று.
நவீனத் தமிழ்க் கவிதை சென்றடையும் வீச்சு அதன் எளிமைதான் என்பதற்குச் சாட்சி, பல லட்சம் பிரதிகளைக் கடந்து விற்றுக்கொண்டிருப்பதற்கு நா.முத்து குமாரின் கவிதை நூல்கள். நாவல் முயற்சி, திரைப்பட எழுத்து, இயக்கம் என அவருடைய கனவுகள் சிலவற்றைக் காலம் எடுத்துக்கொண்டிருக்கலாம்.
ஆனால், காற்றில் அலையும் அவரது திரையிசை வரிகள், தற்காலத்தின் நவீனத் தமிழ்க் கவிதையைத் தேட வைத்தன. இது தமிழ் அவரிடம் பெற்றுக்கொண்ட கொடை.
- tottokv@gmail.com