ஜெய்சங்கர் 85 | வ(ந)ல்லவன் ஒருவன்!

‘வந்தாளே மகராசி’
‘வந்தாளே மகராசி’
Updated on
4 min read

மக்கள் ஏற்றுக் கொண்டாடும் நாயக நடிகராகத் திரையுலகில் வெற்றிபெற இன்று தோற்றம் அவசியமில்லை. திறமை போதும். 50களின் நிலைமையே வேறு. அப்போது வசீகரமான தோற்றம் வேண்டும், நாடக உலகில் புகழ்பெற்று, அது கோடம்பாக்கத்தின் காதுகளை எட்டியிருக்க வேண்டும். தோற்றமும் இருந்து, திறமையும் இருந்தாலும் கைதூக்கிவிட, கும்பிடப் போன தெய்வங்களாகச் சிலர் குறுக்கே வரும்போதுதான் திருப்புமுனை நிகழும்.

கூத்தபிரான்
கூத்தபிரான்

ஜெய்சங்கரின் கலை வாழ்க்கையில் திருப்புமுனை நிகழ மூன்று தரமான கலைஞர் கள் காரணமாக இருந்தார்கள். ‘வானொலி அண்ணா’ என்று பிற்காலத்தில் அழைக்கப்பட்ட நாடகக் கலைஞர் கூத்தபிரான், திரையிசையின் மூதறிஞர் டி.ஆர்.பாப்பா, பொழுதுபோக்கு அம்சங்களுடன் நீதிபோதனைப் படங் களைத் தந்த சிட்டாடல் நிறுவனர் ஜோசப் தளியத் ஆகியோர்தான் அந்த மூவர்.

‘பாலாபிஷேகம்’
‘பாலாபிஷேகம்’

சங்கர் பி.ஏ. - கும்பகோணத்தைப் பூர்விகமாகக் கொண்டிருந்தாலும் திருநெல்வேலியில் விருப்பமுடன் குடியேறி வாழ்ந்த சுப்ரமணியன் - யோகாம்பாள் தம்பதியின் மகனாகப் பிறந்தார் சங்கர். அப்பா மாவட்ட நீதிபதி. வீணை கற்றிருந்த அம்மாவோ வீட்டில் அன்றாடம் இசையை வழிந்தோடச் செய்வார். பணி நிமித்தம் குடும்பம் சென்னை மயிலாப்பூரில் குடியேறியபோது, சங்கர் பயின்றது பி.எஸ்.உயர்நிலைப் பள்ளி. பி.ஏ, படித்து முடித்தபின், சட்டம் பயின்று வழக்கறிஞர் ஆக வேண்டும் என்பது அப்பாவின் கட்டளை.

அதற்குக் கட்டுப்பட்டு, மயிலாப்பூர் விவேகானந்தா கல்லூரியில் இளங்கலை வரலாறு எடுத்துப் படித்தார். பள்ளி நாடகங்களில் தவறாமல் இடம்பெற்ற சங்கர், கல்லூரியில் நுண்கலை மன்றத்துக்குச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது கல்லூரியின் ஆண்டுவிழாவில் நிகழ்த்தப்பட்ட ‘மிஸ்டர் வேதாந்தம்’ என்கிற நாடகம் சங்கருக்குள் ரசவாதம் செய்தது.

அன்றைய சென்னையில் புகழ்பெற்று விளங்கிய பத்துக்கும் அதிகமான அமெச்சூர் நாடகக் குழுக்களில் ஒன்றான சாம்பு நடராஜனின் திருவல்லிக்கேணி ஃபைன் ஆர்ட்ஸ் குழுவினர் அந்த நாடகத்தை நடித்தார்கள். நடிகர்களின் உடல்மொழி, வசன உச்சரிப்பு ஆகியவற்றுக்கு மாணவர்களிடம் கிடைத்த கரவொலியும் விசிலும் சங்கரை உசுப்பிவிட்டன. நாடக மேடை தான் நமது களம் என உறுதி செய்துகொண்டார்.

‘வாக்குறுதி’
‘வாக்குறுதி’

அப்போது ஓர் அழகிய வாய்ப்பு அவரைத் தேடி வந்தது. கிறிஸ்துவத் தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு நிதி திரட்டுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட ‘காதலுக்கு மருந்து’ என்கிற நாடகத்தில் கால் காசும் வாங்காமல் முதன் முதலாகக் கதாநாயகனாக நடித்துக் கொடுத்து பார்வையாளர்களின் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்றார். தொடர்ந்து அமெச்சூர் நாடகக் குழுக்களில் நடிக்க வாய்ப்புத் தேடத் தொடங்கினார். நடிப்பில் ஆர்வம் பெருகிவிட்டாலும் படிப்பில் கோட்டை விடாமல் பி.ஏ. முதல் வகுப்பில் தேறினார். நாடக வட்டாரத்தில் அவரை ‘சங்கர் பி.ஏ’ என்றே அழைத்தார்கள்.

கல்கி கதைகளின் நாயகன்: சங்கரின் நாடக வேட்கைக்குக் கடிவாளம் போடும்விதமாக மகனைச் சட்டக்கல்லூரியில் சேர்த்தார் அப்பா. ஆனால், நடிப்பின் மீதான ஆர்வம், அவரைப் படிப்பிலிருந்து பாதியில் வெளியேற வைத்தது. அச்சமயத்தில் சோ ராமசாமியின் அண்ணன் அம்பி என்கிற ராஜகோபால் தலைமையில், தாங்கள் படித்த கல்லூரியின் பெயரிலேயே ‘விவேகா ஃபைன் ஆர்ட்ஸ்’ என்கிற அமெச்சூர் குழுவைத் தொடங்கி நாடகங்களை நடித்து வந்தனர்.

அக்குழுவுக்காக சோ ராமசாமி முதன் முதலாக எழுதிய ‘If i get it’ என்கிற நாடகத்தில் சங்கருக்கு இன்ஸ்பெக்டர் வேடம் கிடைத்தது. அதன்பிறகு அக்குழுவின் ‘சப்ஸ்டிட்யூட்’ நடிகராகத் தொடர விருப்பமின்றி வெளியேறினாலும் தனது கல்லூரியின் சீனியரான சோ உடன் நட்பு பலப்பட்டது.

நாடகமொன்றில் ஸ்ரீவித்யாவுடன்
நாடகமொன்றில் ஸ்ரீவித்யாவுடன்

அண்ணனுக்குப் பிறகு விவேகா ஃபைன் ஆர்ட்ஸ் நாடகக் குழுவை சோ நடத்தி வந்தபோது, அவருக்காக நாடகங்களை இயக்கி வந்தவர்தான் கூத்தபிரான். அவரிடம் சங்கரை அறிமுகப்படுத்தினார் சோ. ‘இவ்வளவு அழகான இளைஞரை, அதுவும் நாடக அனுபவம் கொண்டிருப்பவரை யாரும் கதாநாயகன் ஆக்கவில்லையா?!’ என்று கூத்தபிரானுக்கு ஆச்சர்யம்! அதைத் தான் செய்துவிடுவது என்று அப்போதே முடிவு செய்தார்.

காலவோட்டத்தில் எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பெயரால் கல்கி ஃபைன் ஆர்ட்ஸ் என்கிற புதிய குழுவைத் தொடங்கினார் கூத்தபிரான். கல்கியின் சிறந்த 10 கதைகளை நாடகமாக்கி அரங்கேற்றினார். அவை அனைத்திலும் சங்கர் தான் கதாநாயகன். கல்கியின் அழுத்த மான கதாநாயகக் கதாபாத்திரங்கள், கூத்தபிரானின் நாடகப் பிரதியில் மேலும் வலிமை பெற்றன. சென்னையின் நாடகக் கலா ரசிகர்கள் மத்தியில் ‘சங்கர் பி.ஏ’ எனும் துடிப்பான இளம் நாய கனைக் கொண்டுசேர்த்தன.

நாடகமே உலகம் என்றிருந்த சங்கர், சரியான திரைப்பட வாய்ப்பைத் தேடிக் கொண்டிருந்த நேரத்தில், அவரை இசையமைப்பாளர் டி.ஆர். பாப்பாவிடம் அழைத்துகொண்டு போனார் சங்கரின் நண்பரான ராமதாஸ். இவர் திரையுலகில் தொடர்புகளைக் கொண்டிருந்த சங்கரின் பக்கத்து வீட்டுக்காரர். சங்கரின் கதாநாயகக் கனவை நன்கு புரிந்துகொண்டவர்.

‘இரவும் பகலும்’ படத்துக்கு நாயகன் - நாயகியாக இரண்டு புதுமுகங்களைத் தேடிக் கொண்டிருந்த ஜோசப் தளியத்திடம் சங்கரை அறிமுகப்படுத்தி, ‘தகுதியும் திறமையும் இருந்தால் பரிசீலனை செய்யுங்கள்’ என்றார். டி.ஆர்.பாப்பா அறிமுகப்படுத்திய அன்றே ஸ்கிரீன் டெஸ்ட் எடுத்துப் பார்த்து வியந்த தளியத், ‘ஜெய்சங்கர்’ எனப் பெயர்சூட்டி சங்கரை ஆக்‌ஷன் நாயகனாக இரட்டை வேடங்களில் அறிமுகப்படுத்தினார்.

குடும்ப சஸ்பென்ஸ் த்ரில்லராக 1965, பொங்கல் நாளில் வெளியாகி வெற்றிபெற்ற ‘இரவும் பகலும்’ படத்துக்குப் பிறகு நமக்குக் கிடைத்தவர்தான் ஜெய் சங்கர் என்கிற மக்களின் நட்சத்திரம். அறிமுக நடிகர் என்று சொல்ல முடியாத நடிப்பை சங்கர் முதல் படத்தி லேயே கொடுத்ததற்கு நாடக மேடையில் அவருக்குப் கிடைத்த பயிற்சியே காரணமாக அமைந்தது.

முற்றிலும் புதிய முன்மாதிரி: இளம் மனங்களை ஈர்க்கும் ஜெய்சங்கரின் நடிப்பு, ஸ்டைலான ஸ்டண்ட் திறமை இரண்டையும் கவனித்த ஏவி.எம் நிறுவனம் ’இரவும் பகலும்’ வெளியான அதே ஆண்டில் அவரை வைத்து ‘குழந்தையும் தெய்வமும்’ கொடுத்தது. அதன்பிறகு கோடம்பாக்கம் ஜெய்சங்கருக்கு சிவப்புக் கம்பளம் விரித்தது. குடும்பக் காதல் கதைகளில் துறுதுறுவென நடிக்கத் தொடங்கினார் ஜெய்சங்கர்.

அதேநேரம், மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர். சுந்தரத்தின் மகன், பொறியியல் பட்டதாரியான ராமசுந்தரத்துக்கும் பி.ஏ. பட்டதாரி நடிகரான ஜெய்சங்கருக்கும் முதலாளி - தொழிலாளி என்பதைத் தாண்டிய நட்பு துளிர்த்தது. விளைவாக, ‘இரு வல்லவர்கள்’, ‘வல்லவன் ஒருவன்’, ‘நான்கு கில்லாடிகள்’, ‘சி.ஐ.டி. சங்கர்’, ‘கருந்தேள் கண்ணாயிரம்’ என ‘ஸ்பை த்ரில்லர்’ வகைப் படங்கள் வரிசை கட்டி வெளியாகி ‘தென்னகத்தின் ஜேம்ஸ் பாண்’டாக ஜெய்சங்கரை மாற்றின.

ஏவி.எம், மாடர்ன் தியேட்டர்ஸ் போல் பெரிய நிறுவனங்கள், பிரபல இயக்குநர்கள் மட்டுமே படம் தயாரிக்க முடியும் என்கிற இரும்புக் கோட்டையாக விளங்கியது கோடம்பாக்கம். அதன் கதவுகளைத் தனது பரந்த மனதாலும் நட்சத்திர ஆளுமையாலும் நொறுக்கியெறிந்தவர் என்கிற கம்பீரமான அடையாளம் ஜெய்சங்கருக்கு உண்டு.

15 ரூபாய் தினப்படி வாங்கிய லைட்மேன், 35 ரூபாய் தினச் சம்பளம் வாங்கிய ஒப்பனையாளர், 55 ரூபாய் சம்பளம் வாங்கிய தயாரிப்பு நிர்வாகி என அடிமட்டத்தில் இருந்த சினிமா தொழிலாளர் களையும் சில லட்சங்கள் கூட இல்லாத எளியவர்களையும் தயாரிப்பாளர் ஆக்கி, சினிமா தயாரிப்புத் தொழிலை ஜனநாயகப்படுத்திய முன்மாதிரிக்குச் சொந்தக்காரர்..

பெரிய நிறுவனங்களிடமும் கறார் காட்டாமல் கொடுப்பதை வாங்கிக்கொண்டு நடித்தார். தனது படங்கள் லாபத்தைக் கொட்டியபோது அவர் பங்கும் கேட்கவில்லை, ஊதியத்தையும் உயர்த்தவில்லை. இதனால், திரையுலகில் அவருக்கு எதிரிகள் என்று யாருமே இல்லை. திரையில் ஈட்டிய பணத்தை உதவி எனக் கேட்டு வருகிற யாருக்கும் இல்லை என்று சொல்லாமல் தன் வாழ்வின் இறுதிக்காலம்வரை கொடுத்து வாழ்ந்தார்.

‘என்.எஸ்.கிருஷ்ணனுக்குப் பிறகு எம்.ஜி.ஆருக்குப் பிறகு,சிவாஜி கணேசனுக் குப் பிறகு சத்தமில்லாமல் அள்ளிக் கொடுத்த ‘திரையுலகக் கர்ணன்’ என்று ஜெய்சங்கரைக் குறிப்பிடுகிறார் எழுத்தாளர், ஆய்வாளர் இனியன் கிருபாகரன். ஜெய்சங்கரின் வாழ்க்கை வரலாற்றை விரிவாக ஆய்வு செய்து, ‘திரையுலக் கர்ணன் ஜெய்சங்கர் - கருணாயாளனாய் வாழ்ந்த ஒரு கதாநாயகனின் கதை’ என்கிற செறிவான நூலில், ஜெய்சங்கரின் சமகாலத்த வர்களான சிவகுமார், கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட நட்சத்திரங்களின் ஆச்சர்யகரமான முன்னுரைகளும் அவரது மகன், கண் மருத்துவர் விஜய்சங்கரின் அங்கீகார உரையும் இடம்பெற்றுள்ளன. (ஜெய்சங்கரை மிகத் துல்லியமாக ஆவணப்படுத்தியிருக்கும் அந்நூலின் தரவுகளைக் கொண்டே இக்கட்டுரை எழுத்தாக்கம் செய்யப்பட்டுள்ளது).

படங்கள் உதவி: ஞானம்

நூலைப் பெற: இனியன் பதிப்பகம்,
13/6. கண்ணன் காலனி முதல் தெரு,
ஆலந்தூர்,
சென்னை - 600016
தொடர்புக்கு: 77086 97977

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in