Last Updated : 20 Apr, 2018 10:21 AM

 

Published : 20 Apr 2018 10:21 AM
Last Updated : 20 Apr 2018 10:21 AM

சி(ரி)த்ராலயா 14: திரையுலகில் ஒரு கடப்பாரை நீச்சல்!

 

சி

வாஜியின் தம்பி வி.சி.சண்முகம் லண்டனில் படித்துவிட்டு வந்து, அண்ணன் சிவாஜியின் பட விவகாரங்களைக் கவனிக்கத் தொடங்கியிருந்த நேரம். ராணுவ அதிகாரியைப் போல வெட்டு ஒன்று துண்டு இரண்டாகப் பேசுபவர். ஆனால், பழகப் பனித்துளிபோல மென்மையான மனிதர். அவருக்கு நல்ல நகைச்சுவை உணர்வும் உண்டு. இதனால் கோபுவுடன் நெருங்கிய நண்பராகிவிட்டார்.

‘விடிவெள்ளி’ என்ற படத்தை சிவாஜியின் பிரபுராம் நிறுவனத்துக்காக இயக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார் ஸ்ரீதர். முழுக்கதையும் தயாரானவுடன் கோபுவுடன் சென்று சிவாஜியைச் சந்தித்துக் கதையைச் சொன்னார். சிவாஜிக்குக் கதை மிகவும் பிடித்துவிட்டது. ஸ்ரீதருக்கும் கோபுவுக்கும் ஒரே குழப்பம். சி.வி.சண்முகம் கூறியதுபோல சிவாஜி எந்த நிபந்தனையும் நமக்கு விதிக்கவில்லையே என்று குழம்பினார்கள். சண்முகத்தைப் பிடித்து உட்கார வைத்து “ சிவாஜி அண்ணா பெரிய நிபந்தனை போடுவார் என்றீர்களே, அப்படி எந்த நிபந்தனையையும் அவர் போடவில்லையே?” என்று கேட்டனர்.

அதற்கு சண்முகம், “நூறு நாள் ஓடும்படியாகப் படத்தின் கதை இருக்க வேண்டும் என்பதுதான் அவர் போட்ட நிபந்தனை” என்றார் சண்முகம். “இது என்ன பெரிய நிபந்தனை! எங்க படங்கள் எல்லாமே நூறு நாட்களுக்குக் குறையாமல் ஓடும்” என்றார் கோபு. “கதை விவாதத்துக்கு முன்பே அப்படிக் கொளுத்திப் போட்டாத்தான் எங்களுக்கு நல்ல கதையைத் தருவீங்க என்று அப்படிச் சொன்னேன். நான் நினைச்ச மாதிரி நடந்திருச்சு. இல்லேன்னா நல்ல கதையை நீங்களே தயாரிச்சுடுவீங்களே!” என்று சிரித்துக்கொண்டே சொன்னார் சண்முகம். ‘விடிவெள்ளி’ படம் சிவாஜியும் சண்முகமும் எதிர்பார்த்தது போலவே நூறு நாட்களைக் கடந்து ஓடி வெற்றிபெற்றது. படத்தின் வெளிப்புறக் காட்சிகள் அனைத்தும் பொள்ளாச்சி அருகே உள்ள வேட்டைக்காரன்புத்தூர் கிராமத்தில் படப்பிடிப்பு செய்யப்பட்டன. படப்பிடிப்பு நடந்த நாட்களில் அந்தக் கிராமம் சித்திரைத் திருவிழா கண்டதுபோல அல்லோலகல்லோலப்பட்டது. அப்போது நடந்த ஒரு சம்பவத்தை கோபுவால் இன்னும் மறக்க முடியவில்லை!

கடப்பாரை நீச்சல்

வேட்டைக்காரன்புதூர் கிராமத்தின் நிலச்சுவான்தார்களில் ஒருவர் முத்துமாணிக்கம். சிவாஜியின் நெருங்கிய நண்பர். படக் குழுவினருக்காக அனைத்து வசதிகளையும் அவர்தான் செய்து கொடுத்திருந்தார். முத்துமாணிக்கத்துக்குச் சொந்தமான விவசாயப் பண்ணையில் தென்னை, மா, பலா, வாழை, பாக்கு, நெல்லி என்று பசுமைப் பாய் விரித்திருந்த பிரம்மாண்டமான தோப்பு இருந்தது. சுமார் இருபது கயிற்றுக் கட்டில்களைத் தருவித்த சண்முகம், அவற்றை அந்தத் தோப்பில் வரிசையாகப் போட்டு வைத்தார். படப்பிடிப்பு முடிந்ததும் இரவு சிவாஜி உள்பட அனைவரும் அந்தக் கயிற்றுக் கட்டிலில்தான் படுத்துத் தூங்குவார்கள். சிலுசிலுவென்ற தென்றல் காற்று விடியவிடிய உடலைத் தழுவிக்கொண்டே இருக்கும். மாசு மருவற்ற காற்றை அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவே யாரும் மேற்சட்டை அணியாமல் அந்தத் திறந்தவெளி ரிசார்ட் சூழ்நிலையை அனுபவித்தார்கள். காலையில் எழுந்து காலைக் கடன்களை முடித்தபின் பண்ணைத் தோப்பிலிருந்து சற்றுத் தூரத்தில் பக்கத்துத் தோட்டத்தில் இருந்த பெரிய மண்டைக் கிணற்றில் குளிக்கச் செல்ல வேண்டும்.

கிணற்றில் குளிப்பதில் எல்லோரையும் சிவாஜி முந்திக்கொள்வார். அவர் குளித்து முடித்து மேக்-அப் போட சென்ற பிறகு டைரக்‌ஷன் டீம் குளியலுக்குக் கிளம்பும். ஸ்ரீதர், கோபு, சண்முகம், நாணு ஆகிய நால்வரும் அன்று எடுக்கப்போகும் காட்சியைப் பற்றிப் பேசிக்கொண்டே கிணற்றை நோக்கி நடப்பார்கள். கிணற்றின் படிவழியே உள்ளே இறங்கிக் குளித்துவிட்டு மேலே வர வேண்டும். ஒருநாள் கோபு கிணற்றின் பிரம்மாண்டத்தை எட்டிப்பார்த்து ரசித்துக்கொண்டிருந்தார். குறும்புத்தனத்துக்குப் பெயர் போன சண்முகம், நாணுவை பார்த்து கண்ணசைத்தார். அவ்வளவுதான் கோபு சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில், நாணு அவரை அலேக்காகத் தூக்கிக் கிணற்றுக்குள் எறிந்தார்.

‘தொபீர்…’ என்ற சத்தத்துடன் தண்ணீருக்குள் தலைகுப்புற விழுந்த கோபு, தண்ணீருக்கடியில் போய்ச் சடரென்று மேலே வந்ததும் மூச்சு முட்டியது. இரண்டு மூன்று மிடறு தண்ணீரையும் குடித்துவிட்ட கோபுவுக்குத் யாரோ தன் கால்களைப் பிடித்து கிணற்றுக்குள் இழுப்பதுபோன்ற ஒரு பிரம்மை. அவ்வளவுதான் நம் கதை முடிந்தது என்று நினைத்து மீண்டும் உள்ளே மூழ்க வேண்டிய நேரத்தில், கோபு பின்னாலேயே கிணற்றில் குதித்திருந்த சண்முகம், அவரது தலைமுடியை கொத்தாகப் பற்றிப் பிடித்துகொண்டு, “பயப்படாதே கோபு… மூழ்கிட மாட்டே.. கை, கால்களை உதறிக்கிட்டே உடம்பை அசைச்சு எதிரே இருக்கிற படிக்கட்டுக் கல்லைப் போய்ப் பிடி. நான் சாப்போர்ட் கொடுக்கிறேன்” என்று கூறியபடியே 10 மீட்டர் விட்டம் கொண்ட அந்த மண்டைக் கிணற்றின் எதிர்பக்கம் இழுத்துச்சென்று கோபுவைப் பாதுகாப்பாகப் படிக்கட்டைப் பிடித்துக்கொள்ளச் செய்தார். மூச்சை நன்கு இழுத்துவிட்ட கோபு, “இதுக்குப்பேருதான் பாழுங்கிணத்துல தள்ளுறதா?” என்றார் கோபு.

“இல்ல…இதுக்குப் பேரு கடப்பாரை நீச்சல்!” சொல்லிவிட்டுச் சிரித்தார் வி.சி.ஷண்முகம். மறுநாள் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் கோபுவே கிணற்றில் தொபீர் என்று குதிக்க, ஸ்ரீதர், சண்முகம், நாணு என எல்லோரும் வாயடைத்துப்போனார்கள். அதன்பிறகு சண்முகத்தின் பயிற்சியில் கடப்பாரை நீச்சலில் கைதேர்ந்தவர் ஆனார் கோபு. இந்தக் கடப்பாரை நீச்சல் சம்பவத்தை வைத்தே நடிகர் பாண்டியராஜன் - ஊர்வசி தொடர்பான காட்சி ஒன்றை ‘பாட்டி சொல்லைத் தட்டாதே’ படத்தில் வைத்தார் கோபு.

திறந்துகொள்ளும் லாக்கெட்

கயிற்றுக் கட்டிலில் இரவு தூங்கும்போது கோபுவைத் தேட ஆரம்பித்துவிடுவார் சிவாஜி, “ஆச்சாரி, நீதான் சிரிக்க சிரிக்கப் பேசுவியே எதையாவது பேசு” என்று குழந்தைபோல் கெஞ்சுவார். தனது மிமிக்ரி திறமைகளை வைத்து சிவாஜிகணேசனைச் சிரிக்க வைப்பார் கோபு. ஸ்ரீதர் உட்பட அத்தனைபேரும் விலா நோகச் சிரித்தபடி உறங்கச் செல்வார்கள். சிவாஜியோ கொஞ்ச நேரம் நினைத்து நினைத்துச் சிரித்துவிட்டுத் தூங்கிப்போவார்.

‘விடிவெள்ளி’ படத்தில் சிவாஜி கணேசனுக்கு அற்புதமான கதாபாத்திரம். தங்கை எம்.என் ராஜத்துக்குத் திருமணம் நடக்க வேண்டும் என்பதற்காக ஒரு வைர நெக்லஸைத் திருடித் தருவார். அந்த நெக்லஸில் லாக்கெட் ஒன்று இருக்கும். திருமணம் ஆனதும், அந்த லாக்கெட் திறந்து கொள்ள, அதில் ஒரு வாலிபனின் படம் இருப்பதைப் பார்த்து, கணவன் பாலாஜி ராஜத்தைப் பிறந்த வீட்டுக்கு அனுப்பிவிடுவார். சிவாஜி எப்படி மீண்டும் தங்கையை வாழ வைக்கிறார் என்பதுதான் கதை. அந்த நெக்லஸ் கதாநாயகி சரோஜாதேவியுடையது. அவரையே பின்னால் சிவாஜி காதலிப்பார்.

காலதேவன் கொடுத்த தண்டனை!

இந்தப் படத்தில் சிவாஜி கணேசனின் அம்மாவாக நடிக்க, தெலுங்கு தேசத்திலிருந்து சாந்தகுமாரியை ஒப்பந்தம் செய்திருந்தனர். சாந்தகுமாரி நல்ல நடிகை. முகபாவங்களை அற்புதமாக வெளிப்படுத்தி நடிக்கக்கூடியவர். அதுமட்டுமே போதுமா? திருத்தமாகத் தமிழ் பேச வேண்டுமே! சாந்தகுமாரி வாய் திறந்தால் தெலுங்கு வாசலில் வந்து காவல் காத்து, தமிழை உள்ளே நுழைய விடாதபடி தடுத்தது. பள்ளி வாத்தியாரைப் போன்று தன் முன்னால் வந்து நின்ற, கோபுவை ஏற இறங்கப் பார்த்த சாந்தகுமாரி, “செப்பண்டி கோபுகாரு! ஏமிட்டி நா டயலாகு?” என்றார்.

கோபு தமிழில்,“ ‘கவலைப்படாதே சந்துரு, நான் சமைச்சு வச்சிடறேன்’ இதே மீறு டயலாக்” எனத் தனக்குத் தெரிந்த தெலுங்கில் அவருடன் பேசி சொல்லிக்கொடுத்தார். டயலாக்கைத் திருப்பிச் சொன்ன சாந்தகுமாரி “காவாலி படாதே சந்துரு, நேனு சமைஞ்சு வெஞ்சுடறேன்!” என்றார் . கோபுவுக்கு பகீர் என்றது. “சமைஞ்சு வெஞ்சுடறேன் காதம்மா ! சமைச்சு வச்சுடறேன்!” என்று திருத்திச் சொல்லிக்கொடுத்தார். இப்படியே ஒரு மணிநேரம் வகுப்பெடுத்து கோபுவுக்கு நெஞ்சு அடைக்கிற அளவுக்கு ஆகிவிட்டது. ஓரளவுக்குச் சரிசெய்து சாந்தகுமாரியை ஷாட்டுக்கு அழைத்துக்கொண்டுவந்தார். ஆனால் ஷாட்டில் “ சமைஞ்சு வெஞ்சுடறேன்” என்று சாந்தகுமாரி கூற சிவாஜி உள்ளிட்ட மொத்த யூனிட்டும் சிரித்துத் தீர்த்தது.

ஸ்ரீதர் கோபுவை முறைத்தார். கேமராமேன் பின்னால் போய் ஒளிந்துகொண்ட கோபுவுக்குள் ஒரு ‘ப்ளாஷ் கட்’ ஓடியது. ‘சம்ஸ்கிருத வாத்தியாரின் தலையில் விடைத்தாளைக் கிழித்து போட்டதற்குத் தண்டனையாக, சாந்தகுமாரிக்குத் தமிழ் வசனங்களைச் சொல்லித் தரும் பணியை காலதேவன் தந்து விட்டானோ ?’ வேறு வழி இன்றி சாந்தகுமாரிக்கு கோபு புராம்டிங் செய்ய, அந்தக் காட்சி படமாக்கப்பட்டு, டப்பிங்கில் தமிழ் தப்பித்தது…

படங்கள் உதவி: ஞானம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x