Last Updated : 27 Apr, 2018 10:13 AM

Published : 27 Apr 2018 10:13 AM
Last Updated : 27 Apr 2018 10:13 AM

சி(ரி)த்ராலயா 15: காஷ்மீரில் கட்டிப்போட்ட சலுகை!

சி

வாஜி கணேசன் எதிர்பார்த்தது போலவே ‘விடிவெள்ளி’ சூப்பர் ஹிட் ஆனது. பத்திரிகைகளின் பாராட்டு மழையும் திரையரங்குகளில் வசூல் மழையும் பொழிய, சிவாஜி கணேசனுக்குப் பரம திருப்தி.

“கோபு! ஸ்ரீதரை அழைச்சுக்கிட்டு, நீ நம்ம கம்பெனிக்கு உடனே வா!” என்று அன்புக் கட்டளை பிறப்பித்தார் சிவாஜியின் தம்பி சண்முகம். “ஸ்ரீதர் சுதந்திரமான கலைஞன். அப்படியெல்லாம் சட்டுனு வரமாட்டான்!” கோபு சொன்னார். “வீனஸ் கம்பெனியில மட்டும் எப்படி இருக்கார் ?” சண்முகம் கேட்டார். “எனக்கே அது பெரிய ஆச்சரியம்தான்” என்று சொல்லிவிட்டு ஸ்ரீதர் வீட்டுக்கு கோபு போனபோது அவருக்காகவே காத்திருந்ததைப் போல “கோபு, வீனஸ் நிறுவனத்திலேர்ந்து நான் விலகப் போறேன்” என்று பெரிய குண்டைத் தூக்கிப்போட்டார் ஸ்ரீதர். வார்த்தை வராமல் திகைத்து நின்ற கோபுவிடம் நடந்ததைச் சொன்னார்.

“நிறைய வெளிப்படங்களை நீங்க ஒப்புக்கொள்றீங்க!” என்று வீனஸ் கிருஷ்ணமூர்த்தி ஸ்ரீதரிடம் ஆட்சேபம் தெரிவிக்க, “ஒரு டெக்னீஷியனை, ஒரு கலைஞனின் ஆர்வத்தை இப்படியெல்லாம் கட்டுப்படுத்த முடியாது” என்று ஸ்ரீதர் சூடாகப் பதிலளிக்கப்போய், இருவருக்கும் இடையில் பிணக்கு ஏற்பட்டு கணக்கை முடித்துக்கொள்வது என்ற இடத்துக்கு வந்துவிட்டிருந்தார்கள்.

“சரி... அடுத்து?” கோபு கேட்டார். “இனி நாம் ஒருத்தரிடமும் கையைக்கட்டி வேலை பார்க்க வேண்டிய அவசியமில்லை. நாமே ஒரு பட நிறுவனத்தைத் தொடங்குவோம்” என்றார் ஸ்ரீதர். நண்பர்களான கோபு, சி.வி.ராஜேந்திரன், வின்சென்ட், சுந்தரம், திருச்சி அருணாச்சலம் ஆகியோரை ஒர்க்கிங் பார்ட்னர்களாகக் கொண்டு, ஸ்ரீதர் தொடங்கிய பட நிறுவனம்தான் சித்ராலயா.

வேடிக்கை என்னவென்றால், எந்த வீனஸ் நிறுவனத்தில் இருந்து வெளியேறினாரோ, சென்னை தியாகராய நகரின் வடக்கு போக் சாலையில் இருந்த வீனஸ் பட அலுவலகம் இருந்த அதே கட்டிடத்தில் சித்ராலயா அலுவலகத்தைத் திறந்தார். கீழே வீனஸ் நிறுவனம், மேலே மாடியில் சித்ராலயா. ஒரு இளைஞன் தோணியைத் துடுப்பினால் செலுத்த, அவன் முன்பாக ஒரு பெண் அமர்ந்து அந்தப் பயணத்தை ரசிப்பது போன்ற சின்னத்தை நிறுவனத்தின் லோகோவாக வடிவமைத்தனர். ‘கலைக்கடலில் சித்ராலயா என்கிற தோணியில் பயணிக்கிறோம்’ என்று அறிவிக்கப்பட்டது.

முதல் தயாரிப்பு

சித்ராலயா தொடங்கப்பட்டதும் முதலில் விவாதிக்கப்பட்டது ‘நெஞ்சில் ஒரு ஆலயம்’ படத்தின் கதைதான். முதல் படமே சோகமாக இருக்க வேண்டாம் என்று ஜனரஞ்சகமாக ஒரு கதையை விவாதிக்க முடிவு செய்தனர். அந்தப் படம்தான் ‘தேன் நிலவு’. ‘காதல் மன்னன்’ ஜெமினிதான் கதாநாயகன். வைஜெயந்திமாலா கதாநாயகி. அப்போது, இந்திப் படங்களில் நடித்து வைஜெயந்தி மாலா மிகவும் பிரபலம் ஆகியிருந்தார். எம்.என். நம்பியார், தங்கவேலு, எம்.சரோஜா, புதுமுகம் பி.ஏ. வசந்தி ஆகியோர் நடித்தனர். ‘கல்யாண பரிசு’ படத்துக்கு ஹிட் பாடல்களைத் தந்த ஏ.எம். ராஜாதான் இசையமைப்பாளர். ஸ்ரீதர் படங்களுக்கு அவர்தான் அப்போது இசையமைத்து வந்தார்.

நடிகர்களுக்கு சலுகை

காஷ்மீரில் இரண்டு மாதங்களுக்குப் படப்பிடிப்பை நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது.குடும்பத்தினருடன் நடிகர்கள் காஷ்மீர் வரலாம் என்ற சலுகையும் வழங்கப்பட்டது. டெக்னீஷியன்களுக்கு இந்தச் சலுகை கிடையாது.

ஜெமினி கணேசனுக்கு இரண்டு குடும்பம், தங்கவேலுக்கு இரண்டு குடும்பம். எல்லோரும் ஜேஜே என்று கிளம்பியதைப் பார்த்ததும் குறும்புக்காரரான எம்.என்.நம்பியார் “நான்தான் மடையன். ஒரே குடும்பம் வச்சிருக்கேன்!” என்று தடாலடியாக கூறிய ஜோக்கில் சித்ராலயா அலுவலகம் கலகலத்தது. சித்ராலயா வழங்கிய சலுகைக்கு நல்ல பலனும் கிடைத்தது. இரண்டு மாதங்களுக்கு எந்த நடிகரும் சென்னைக்கு போக வேண்டும் என்று கூறவேயில்லை.

கூப்பிடு சுபா மாப்பிள்ளையை!

படப்பிடிப்பைத் தொடங்கிய முதல் நாளே பிரச்சினை தலைதூக்கியது. காரணம், வைஜெயந்திமாலா. அப்போது அவர் மிகவும் பிரபலம். காஷ்மீர் பள்ளத்தாக்கின் மூலை முடுக்குகளில் இருந்தெல்லாம் அவரைக் காண கூட்டம் கூட்டமாக வந்தனர்; “வைஜெந்தி ...வைஜெந்தி!” என்று கத்திக்கொண்டே இருந்தார்கள். போலீசைக் கொண்டு ரசிகர்களை அப்புறப்படுத்திய பிறகே படப்பிடிப்பு நடந்தது.

27CHRCJ_THENNILAVU ‘தேன்நிலவு’ படத்தில்

வைஜெயந்திமாலாவின் பாட்டி யதுகிரி அம்மாள் அவருடன் காஷ்மீர் வந்திருந்தார். பாட்டி சொல்லைத் தட்டவே மாட்டார், வைஜெயந்தி. பாட்டியைச் சமாளிக்க, ஸ்ரீதர் கோபுவைத் தான் அனுப்புவார்.

காரணம், கோபுவின் மாமியார் சுபத்திரா அம்மாளின் தோழி, யதுகிரி அம்மாள். “அட! நம்ம சுபா மாப்பிள்ளை!” என்று கோபுவைப் பிடித்துகொண்டுவிட்டார், யதுகிரி அம்மா. தலைவலி தைலம் முதல் காஷ்மீர் குங்குமப்பூ வரை எது தேவை என்றாலும் அவர் “கூப்பிடு சுபா மாப்பிள்ளையை” என்று கோபுவைத் தான் கூப்பிடுவார். இதனால், ஜெமினி, ஸ்ரீதர், நம்பியார் எல்லாருமே, கோபுவை ‘சுபா மாப்பிளை’ என்று கேலி செய்ய ஒரே கலாட்டாதான்.

தால் ஏரியில் பாடல்

‘ஓஹோ எந்தன் பேபி !’ பாடலுக்காக, வாட்டர் ஸ்கீயிங் செய்தபடி, ஜெமினியும் வைஜெயந்திமாலாவும் பாடுவது போன்ற காட்சியைப் படமாக்க வேண்டும் என்று நினைத்தார் ஸ்ரீதர். ஜெமினி கணேசன் மிகவும் துணிச்சல்மிக்கவர். ஷூட்டிங் நாட்களில் ஓய்வு நேரத்தில், கிரிக்கெட், கால்பந்து என்று எதையாவது விளையாடுவார். வாட்டர் ஸ்கீயிங் செய்தபடி, டூயட் பாட வேண்டும் என்று சொன்னதும், ஓகே சொல்லிவிட்டார். ஆனால், யதுகிரி பாட்டியோ வைஜெயந்திமாலா வாட்டர் ஸ்கீயிங் செய்வதற்கு நோ சொல்லிவிட்டார். “மாயா பஜார்ல பாட்டு பாடிண்டே படகுல போவாளே. அந்த மாதிரி எடுங்கோ. ஸ்கீயிங் எல்லாம் வேணாம்” என்றார் யதுகிரி பாட்டி.

‘ஓஹோ எந்தன் பேபி...’ பாட்டை ‘ஆஹா இன்ப நிலாவினிலே...’ என்ற மெட்டில் மனதுக்குள் பாடிப் பார்த்த கோபு, பாட்டி சொன்னதை ஸ்ரீதரிடம் சொன்னால் அவர் அதை எப்படி எடுத்துக்கொள்வார் என்று யோசித்தார். ‘சொல்லாமல் இருப்பதே புத்திசாலித்தனம்’ என்று எண்ணிய கோபு, ஸ்ரீதரிடம், “வைஜெயந்திமாலா ஸ்கீயிங் செய்ய அவருடைய பாட்டி ஒப்புக்கொள்ளவில்லை. அவருக்குப் பதில் டூப் போட்டுவிடலாம்” என்று சொன்னார். வைஜெயந்திமாலாவுக்கு என்ன தோன்றியதோ, “இல்லை, நானும் வாட்டர் ஸ்கீயிங் செய்கிறேன்” என்று வீம்பாகச் சொல்லிவிட்டார்.

வாட்டர் ஸ்கீயிங் கற்றுத் தர இரு படகுக்காரர்களை வரவழைத்தார் ஸ்ரீதர். இரண்டு மணி நேரம் கடுமையாகப் பயிற்சி செய்த வைஜெயந்திமாலா, பிறகு காட்சியில் நடிக்கத் தயாரானார். ஜெமினி, வைஜெயந்திமாலா இருவரும் தால் ஏரியில் விழுந்து விடாமல் இருப்பதற்காக, இரு புறமும் இரண்டு படகுகள் செல்ல ‘ஓஹோ எந்தன் பேபி ! நீ வாராய் எந்தன் பேபி!’ என்ற பாடல் படமாக்கப்பட்டது. அப்போது எதிர்பாராமல் ஒரு விபத்து!

தொடர்புக்கு: tanthehindu@gmail.com

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x